April 30, 2025
  • April 30, 2025
Breaking News
February 20, 2020

இந்தியன் 2 விபத்து கமல் 1 கோடி நிவாரணம் அறிவிப்பு

By 0 589 Views

இந்தியன்-2 படப்பிடிப்பின்போது நடந்த கிரேன் விபத்தில் மூவர் உயிரிழந்தது குறித்து கருத்துத் தெரிவித்த கமல்ஹாசன் இந்தத் தொழிலில் இருக்கவேண்டிய அளவு பாதுகாப்பு இல்லை என்றும், மயிரிழையில் தாம் உயிர் தப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சென்ற கமலஹாசன், அங்கு பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது இதனைத் தெரிவித்தார். உயிரிழந்தோர் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தோருக்கு தம் சார்பில் அவர் ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாகவும் அறிவித்தார்.

“இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தியன் 2 படப்பிடிப்பில் இணைந்த உதவி இயக்குநர் கிருஷ்ணா இன்று உயிருடன் இல்லை.
என் குடும்பத்தில் நடந்த விபத்தாகவே இதை கருதுகிறேன். நான் எந்த நிறுவனத்தையும் சார்ந்து இங்கே வரவில்லை.

நான் சிறுவயதிலிருந்து இந்தத் தொழிலில் இருக்கிறேன். இந்தத் தொழிலில் இருக்க வேண்டிய அளவிற்கு பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிக்கும் மற்றுமொரு அசம்பாவிதம் தற்போது நடந்துள்ளது.

இது இனி நடக்காமல் இருப்பதற்கு என்னென்ன முயற்சிகள் எடுக்க வேண்டுமோ அவை அனைத்தையும் சினிமாத்துறை முன்னெடுக்க வேண்டிய விஷயம்” என்று கூறினார் அவர்.

“மயிரிழையில் தப்பினேன்”

“100 கோடிகள், 200 கோடிகள் என மார்தட்டிக் கொள்ளும் நாம் கடைநிலை ஊழியனுக்கான பாதுகாப்பை அளிக்கமுடியாத ஒரு துறையாக இருப்பதை அவமானத்திற்குரியதாகவே கருதுகிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமுற்றவர்களுக்கும் என்னுடைய பங்காக ஒரு கோடி ரூபாயை இழப்பீடு கொடுப்பதாக அறிவிக்கிறேன். இது அவர்களின் இழப்பிற்கு கைமாறாக இல்லை. பாதிக்கப்பட்ட ஏழை குடும்பத்திற்கு என்னால் இயன்ற நிதியுதவி அளிக்கிறேன்.

இந்தப் பணத்தை முதலுதவியாகத் தான் நினைக்கிறேன். இந்தப் பிரச்னைக்கான சிகிச்சை என்பது கடை நிலை ஊழியனுக்கான காப்பீடு இருக்க வேண்டும்.

இந்த அறைக்குள் நானும் இன்று இருந்திருக்கக்கூடும். மயிரிழையில் உயிர் தப்பினேன். நான்கு நிமிடங்களுக்கு முன்பு எந்தக் கூடாரம் நசுங்கியிருந்ததோ அந்தக் கூடாரத்தில் தான் நானும், கதாநாயகியும் நின்று கொண்டிருந்தோம்.

அப்படி நகர்வதற்கு பதிலாக இப்படி நகர்ந்திருந்தால் இப்பொழுது எனக்கு பதிலாக வேறு ஒருவர் இங்கு பேசிக் கொண்டிருந்திருப்பார். விபத்திற்கு ஏழை, பணக்காரன் என்றெல்லாம் தெரியாது. அனைவருக்குமான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்” என்றும் கமல் கூறினார்