July 1, 2024
  • July 1, 2024
Breaking News
June 28, 2024

கல்கி 2898 ஏடி திரைப்பட விமர்சனம்

By 0 70 Views

நம் நாட்டு இதிகாசங்களைச் சுட்டு ஹாலிவுட் காரர்கள் நிஜத்தை விஞ்சும் கற்பனையில் படங்களை எடுத்துக் கொண்டிருக்க, இப்போதுதான் நம்மவர்கள் கொஞ்சம் சுதாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 

அதில் ஒரு மைல்கல்லாக அமைந்திருக்கிறது இந்தப் படம்.

இந்து மத நம்பிக்கையின்படி திருமால் எடுக்கும் தசாவதாரங்களில் அத்தனை அவதாரங்களும் முடிந்துவிட இன்னும் மிச்சம் இருப்பது கல்கி என்கிற அவதாரம் மட்டுமே. 

அந்த அவதாரம் நிகழவிருப்பதை எதிர்காலத்துக்குச் சென்று சொல்லி இருக்கிறார் இயக்குனர் நாக் அஸ்வின். கிட்டத்தட்ட 6000 வருடங்கள் தொடர்பு கொண்ட இந்தக் கதை இந்த முதல் பாகத்தில் கடந்த  மகாபாரதக் காலத்தில் ஆரம்பித்து எதிர்கால விஞ்ஞான யுகத்தில் முடிகிறது.

கிபி 2898ல் நடக்கும் இந்தக் கதையில் கடவுள் (திருமால் என்று எடுத்துக் கொள்ளலாம்) தீபிகா படுகோனின் வயிற்றில் கருவாக உருவாக ஆரம்பித்திருக்கிறார். எந்தப் பெண்ணின் வயிற்றிலும் கரு தங்காத அந்தக் காலகட்டத்தில் தீபிகா வயிற்றில் மட்டுமே கரு தங்குவதற்குக் காரணம் அந்தக் கரு கடவுள் என்பதால்தான்.

இன்னொரு பக்கம் பூமியின் வளமான விஷயங்களை உள்ளடக்கிய உலகின் கடைசி நகரத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகி காசியில் உருவாக்கி அதற்கு ‘காம்ப்ளக்ஸ் ‘ என்று பெயரிட்டு சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்சுடன் வாழ்ந்து வரும் சர்வாதிகாரி சுப்ரீம் யாஷ்கின் என்கிற கமல், உருக்குலைந்த வயோதிய தோற்றத்துடன் வாழ்ந்து வருகிறார். 

அவருடைய விஞ்ஞான கூடத்தில் கர்ப்பிணிப் பெண்களின் உடலில் இருந்து பெறப்படும் ஒரு சீரத்தை கொண்டு இளமையைப் பெறும் முயற்சியில் இருக்கிறார். 

இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் மகாபாரதப் போரில் சாகா வரம் பெற்ற அஸ்வத்தாமா கிருஷ்ணனின் கோபத்திற்கு ஆளாகி தன் சக்திக்குக் காரணமான நெற்றிக்கல்லை இழக்கிறார். மீண்டும் அந்தக் கல்,  கல்கி அவதாரம் நிகழும்போது அவருக்கு கிடைத்து சாப விமோசனம் நிகழும் என்று இருக்க இந்த 2898 ஆம் வருடத்தில் அந்தக் கல் அவருக்குக் கிடைத்து அதை நெற்றியில் ஞானக்கண்ணாக அணிந்து கொண்டு மகா சக்தி பெற்றவராக இருக்கிறார். அந்த வேடத்தில் அமிதாப்பச்சன் வருவது மெத்தப் பொருத்தமாக இருக்கிறது. 

இன்னொரு பக்கம் காம்ப்ளக்ஸ்க்குள் நுழைவதையே வாழ்க்கை லட்சியமாகக் கொண்டு வாழும் பிரபாஸ், அதை அடைய வேண்டுமானால் நிறைய யூனிட்டுகள் பெற வேண்டும் என்கிற நிர்பந்தத்தில் எந்த வேலையும் செய்யத் தயாராக இருக்கும் வலிமை பெற்றவராக இருக்கிறார்.

இன்னொரு இடத்தில் கடவுள் கண்டிப்பாக வந்து விடுவார் என்கிற நம்பிக்கையில் மிஞ்சி இருக்கும் மக்கள் ஷம்பாலா என்கிற இடத்தில் கமலின் கண்களுக்குப் படாமல் தப்பி வாழ்கிறார்கள்.

இந்நிலையில் கமலின் காம்ப்ளக்ஸ் விஞ்ஞான கூட்டத்தில் இருந்து தப்பிக்கும் தீபிகாவை பாதுகாப்பான இடமான ஷம்பாலாவுக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் பசுபதி ஈடுபட… அந்த வழியில் எல்லாம் கமலின் ஆட்கள் குறுக்கிட்டு தீபிகாவை மீட்க முயல… தன் சக்தி திரும்ப கிடைக்கப்பெறும் அமிதாப் தீபிகாவின் வயிற்றில் வளர்வது கடவுள்தான் என்று அறிந்து கொண்டு அவரைக் காக்க உறுதுணை புரிகிறார்.

யாராலும் எதிர்த்து சண்டையிடவே முடியாத அமிதாபை எதிர்த்து சண்டையிடும் திராணி பெற்ற ஒரே நபர் பிரபாஸாக இருக்க, இப்போது கமலின் ‘காம்ப்ளக்ஸ்’ கமாண்டர் சஸ்வதா சாட்டர்ஜி, தீபிகாவை மீட்டு வர பிரபாஸை அனுப்புகிறார். இதன் விளைவாக அமிதாப்பும் பிரபாசும் நடத்தும் மோதலின் முடிவு என்ன ஆகிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இந்தக் கதையை சரியாகப் புரிந்து கொள்வதற்குக் கொஞ்சம் மகாபாரதம் தெரிந்திருக்க வேண்டும். கூடவே கொஞ்சம் ஹாலிவுட் படங்களும் பார்த்த அறிவும் இருக்க வேண்டும். 

இப்படி ஒரு இதிகாச இடியாப்ப சிக்கல் கதையை எந்தக் குழப்பமும் இல்லாமல் எடுத்து அதை ரசிக்கும் விதத்தில் கொடுக்க வேண்டியது மிகப்பெரிய நிர்ப்பந்தம். அதை சமாளித்துக் கடந்திருக்கிறார் நாக் அஸ்வின்.

படத்தின் நாயகன் பிரபாஸ் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும் படம் முழுவதும் ஆக்கிரமித்து இருப்பவர் அமிதாப் பச்சன்தான் ஆறடி உயரத்தை விடவும் உயரமான எட்டடி உயர வேடத்தில் அவரைப் பார்க்க பிரம்மாண்டமாக இருக்கிறது. அத்துடன் இந்த வயதில் முழுக்க ஆக்க்ஷன் கலந்த இப்படி ஒரு வேடத்தை அவரால் எப்படி நடிக்க முடிகிறது – அதை எப்படி இயக்குனர் அஸ்வின் கற்பனை செய்தார் என்பதும் பிரமிப்பாக இருக்கிறது. 

ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் நடித்திருக்கும் அமிதாப் பச்சன் நிச்சயமாக இந்தியாவின் சூப்பர் ஸ்டார்தான்.

பிரபாஸ், படத்தில் கொஞ்சம் லேட் என்ட்ரியாகத்தான் வருகிறார் . சொல்லப்போனால் முதல் பாதியில் அவர் ஏதோ ஒரு துணைப் பாத்திரம் போலவே வந்து போக அவரை ஹீரோவாக்கிக் காட்டுவதற்காகவே திஷா படாணியுடன் ஒரு காதல… ஒரு டூயட் என்று பங்களித்து இருக்கிறார் இயக்குனர்.

வழக்கமான எக்ஸ்பிரஷன்கள்… வழக்கமான ஆக்ஷன் காட்சிகள் என்று இதிலும் ஒரு சக்தி மானாக வரும் பிரபாஸ் மட்டுமே அமிதாப்பை எதிர்க்க முடியும் என்பது நியாயமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

‘காம்ப்ளெக்சின் சூப்பர் பவர் ஆக வரும் கமல்ஹாசனின் கெட்டப்பே பிரமிப்பாக இருக்கிறது. படத்தின் மெயின் வில்லன் இவர்தான் என்பது அதைவிட ஆச்சரியம். இந்த முதல் பாகக் கதை தொடங்குவதும் முடிவதும் அவரிடத்தில்தான் என்றாலும் அந்த இரண்டே காட்சிகளில் மட்டும்தான் கமல் வருகிறார். இரண்டாவது பாகத்தில் அவருக்கு நிறைய வேலை இருப்பது புரிகிறது.

கர்ப்பிணிப் பெண்ணாக தீபிகா படுகோனே வந்தாலும் அவரது வயிற்றில் வளரும் கடவுள் கருவுக்கான காரண கர்த்தா யார் என்பது சொல்லப்படவில்லை. திருமணம், உறவு முறை, வாழ்க்கை எல்லாம் புரியாத ஒரு வேடத்தில் கன்னித் தாயாக தீபிகா இருக்கிறார்.

ஒரே ஒரு காட்சியில் வந்து பிரபாசை காதலித்து விட்டு போகும் திஷா படானி, ஷம்பலாவின் காவல் மாதாவாக வரும் ஷோபனா, வீரன் என்ற வேடத்தில் பசுபதி மற்றும் காம்ப்ளெக்ஸ் கமாண்டர் சாஸ்வதா சாட்டர்ஜி உள்ளிட்டோருடன் இந்திய இயக்குனர்களான ராம்கோபால் வர்மா, ராஜமவுலி, அனுதீப், நடிகை மிர்ணாள் தாகூர், விஜய் தேவரகொன்டா, துல்கர் சல்மான் என்று படம் நெடுக நட்சத்திரங்களாக கடந்து போகிறார்கள்.

திரையில் வரும் முன்னணி நட்சத்திரங்களைத் தாண்டி பின்னணியில் மாபெரும் நட்சத்திரங்களாக உழைத்திருப்பவர்கள் இந்தப் படத்துக்கான விஷுவல் எபெக்ட்ஸ் காட்சிகளை உருவாக்கி இருக்கும் கலைஞர்கள்தான். 

அதற்கு உறுதுணையாக அமைந்திருக்கிறது ஜோர்ட்ஜே ஸ்டோஜில்ஜ்கோவிக் ஒளிப்பதிவு. ஹாலிவுட் தரத்துக்கான இசையை முடிந்த மட்டும் தந்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ஆனால் ஒரு தீமை வைத்து முயற்சி செய்து இருந்தால் இன்னும் அவரது இசை கவனிக்கப்பட்டு இருக்கும்.

இடைவேளை வரை படத்தோடு நம்மை இணைத்துக் கொள்ள முடியாமல் அனிமேஷன் காட்சிகளாக நகர்ந்து கொண்டிருக்க, பின் பாதிப் படம் பரபரப்புடன் நகர்ந்து அடுத்த பாகத்தை எதிர்பார்க்கும் ஆவலுடன் முடிகிறது. 

ஹாலிவுட் தரத்தை நம்மால் தொட முடியா விட்டாலும் அதற்கான அதிகபட்ச முயற்சியாக அமைந்திருக்கும் இந்த படம் லாஜிக் விஷயங்களில் மட்டும் படு வீக்காக இருக்கிறது.

ஹாலிவுட்காரர்கள் உலகத்தின் அழிவு மற்றும் உலகின் எல்லா முக்கிய நிகழ்வுகளும் அமெரிக்காவில் மட்டுமே நடக்கும் என்று எடுத்துக் கொண்டிருப்பதற்கு போட்டியாக உலகின் கடைசி நகரம் காசியில் அமைந்திருக்கிறது என்று கதை (விட்ட..?) சொன்ன  நாக் அஸ்வினுக்கு ‘பாரத ரத்னா’ கொடுக்கலாம்.

மற்றபடி மகாபாரதம் தொடங்கி டியூன் படம் வரை ஏகப்பட்ட கதைகள், கதைக் களங்களை கலந்து அடித்திருப்பதில்… 

கல்கி – கலக்கி..!

– வேணுஜி