March 28, 2024
  • March 28, 2024
Breaking News
July 14, 2018

கடைக்குட்டி சிங்கம் விமர்சனம்

By 0 1644 Views

இன்றைக்கு நம் கண்ணெதிரே காணாமல் போய்க்கொண்டிருக்கும் கூட்டுக்குடும்ப உறவுகளையும், விவசாயத்தின் மேன்மையையும் வைத்து ஒரு கதை எழுதியதற்காகவே முதலில் இயக்குநர் பாண்டிராஜைக் கட்டித்தழுவி பாராட்டியாக வேண்டும். அதைப் படமாக எடுக்க முன்வந்த நடிகர் சூர்யாவுக்கும் அதே தழுவலுடன் ஒரு பாராட்டு.

ஒரு பெரிய விவசாயக் குடும்பத்தில் ஆண் வாரிசு வேண்டி இரண்டு தாரங்கள் மூலம் ஐந்து பெண்பிள்ளைகளை மகள்களாக அடைந்த சத்யராஜின் ஆண்வாரிசு அடையும் முயற்சி கடைசியாக வெற்றி பெற அப்படி அந்தக் குடும்பத்தில் கடைக்குட்டியாக வந்து பிறப்பவர்தான் கார்த்தி.

பெண்குழந்தைகளுக்கு ‘ராணி’ என்று முடியும் அழகிய தமிழ்ப்பெயர்களை வைத்திருக்கும் சத்யராஜ், மகனுக்கு ‘குணசிங்கம்’ என்று பெயர் வைக்க கார்த்தி கடைக்குட்டி சிங்கமாகிறார். அந்தச் சிங்கம் எப்படித் தன் குடும்ப உறவுகளைப் பாதுகாக்கிறது என்பதுதான் கதை.

கார்த்தியை இப்படி கிராமத்துக் கதையில் பார்த்து நாளாயிற்று. படித்தவர்களை எஞ்சினியர், டாக்டர் என்று அழைப்பதைப் போலவே உழவுத் தொழில் செய்பவர்களையும் ‘விவசாயி’ என்று ஏன் பெருமையாக அழைப்பதில்லை என்று அவர் கேட்பது அவர் அணிந்திருக்கும் வேட்டி சட்டையை விட மிடுக்காக இருக்கிறது. 

வேலை தேடி வேறு ஊர்களுக்குப் போகும் இளைஞர்களை எல்லாம் விவசாயத்துக்காக மீண்டும் கிராமங்களை நோக்கி வரவழைக்க வேண்டும் என்கிற அவரது பேச்சும், அங்கங்கே அடிக்கும் விவசாயப் ‘பஞ்ச்’களும் வணங்கி வரவேற்க வைக்கின்றன. மற்றபடி அவர் வில்லன்களைத் தூக்கிப் போட்டு மிதிப்பது, காதலுக்காகப் பனிக்கட்டியாக உருகுவதை எல்லாம் வழக்கமான ரசனைகளுக்கான விருந்தாக எண்ணி ரசித்தபடி கடந்து போகலாம்.

Kadaikkutty Singam

Kadaikkutty Singam

படம் முழுவதும் தென்னக முகங்களாகக் கதையுடன் பொருந்தியிருக்க வடநாட்டு முகமாக வரும் நாயகி சாயிஷாவை பாவாடை, தாவணி, வளையல், வகிடுத்தலை என்று மாற்றியிருப்பதுடன் பறையடித்து ஆடவும் விட்டு பாத்திரத்துக்குள் மூழ்க வைத்து விட்டதால் ‘கண்ணுக்கினியாள்’ என்ற அந்தப் பாத்திரம் கண்ணுக்கு உறுத்தாமல் இனிக்கவே செய்கிறது.

ஓங்குதாங்கான சத்யராஜ் கட்டப்பாவாக அல்லாமல் குணநலனில் ஓங்கி உயர்ந்து நெட்டப்பாவாக நிற்கிறார். கிளைமாக்ஸில் அவருக்கு வேலையில்லாமல் போனாலும் படத்தை அடிநாதமாகத் தாங்கியிருப்பது அவர்தான்.

படம் முழுதும் ஒலிக்கும் சூரியின் குரல் ரசித்துச் சிரிக்க வைப்பது மட்டுமன்றி மூன்றாவது குரலாகக் கதையைத் தொய்வின்றி ‘நரேட்’ பண்ணிக்கொண்டே போவது நல்ல ஐடியா. வில்லனுக்குப் பெரிய வேலை இல்லை என்றாலும் கவனிக்க வைக்கிறார்.

கார்த்தியின் அம்மாக்களாக விஜி மற்றும் பானுப்ரியா. முறைப்பெண்களில் முறைக்கிற பெண்ணாக வரும் ப்ரியா பவானிசங்கரும், அழுகாச்சி அர்த்தனாவும் நல்ல தேர்வு. மற்றபடி இளவரசு, மாரிமுத்து, ஸ்ரீமன், மனோஜ்குமார், மௌனிகா, யுவராணி என்று படத்தில் வரும் கிட்டத்தட்ட 30 பாத்திரங்களையும் ஒவ்வொருவராகச் சொன்னால் எழுதி மாளாது.

இத்தனைப் பாத்திரங்களைக் கொண்ட… அதுவும் ஒவ்வொருவருக்கும் ஒரு குணநலன் வாய்ந்த பாத்திரப் படைப்பையும், அதை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பையும் கொண்ட ஒரு அற்புதக் கதையை சமீபத்தில் பார்த்ததில்லை. இனி இப்படிப்பட்ட உறவுகளையும் இப்படிப் படங்களில் மட்டுமே பார்க்க முடியும் என்பதும் உள்ளம் தொடும் கொடுமை.

அதுபோலவேதான் விவசாயம் சார்ந்த கிராமத்தையும், பச்சைப் பசேலென்ற வயல்வெளி, தோட்டங்களையும் கூட இனி திரைப்படங்களில் மட்டுமே பார்த்து நாம் பார்த்து ஆறுதல் பெற முடியுமென்பதும் நடைமுறை நிலைமை.

அதேநேரத்தில் நாம் மனது வைத்தால் இவற்றையெல்லாம் மீட்டுவிட முடியுமென்பதும் சாத்தியமான உண்மை. அதற்கு இப்படிப்பட்ட கலைப்படைப்புகளை விருதுகள் கொடுத்து மதிக்க வேண்டும். அத்துடன் மக்களும் இதைப் போன்ற படங்கள் தொடர்ந்து எடுக்கப்படுவதை வரவேற்க வேண்டும்.

தன் முறைப்பெண்களை ஏன் கல்யாணம் செய்துகொள்ள முடியாது என்பதற்கு கார்த்தி கொடுக்கும் தன்னிலை விளக்கம் நியாயமானது. கிளைமாக்ஸில் அவர் பேசும்போது கண்களில் ஒரு துளி கண்ணீர் துளிர்க்காவிட்டால் படம் பார்ப்பவர்கள் மனிதஇனத்தில் சேர்த்தியே இல்லை.

அதை மேம்படுத்தும் விதமாக அமைகிறது அவர் பேசும் கிளைமாக்ஸ் வசனத்துக்குக்கு முன்பு அவரது அம்மாவாக வரும் விஜி பேசும் வசனங்களும், அவரது நிகரில்லாத நடிப்பும்… வெல்டன்ஜி விஜி..!

Kadaikutty Singam Review

Kadaikutty Singam Review

இதுதான் கதையின் பலமான பகுதி என்பதால் வழக்கமாக வில்லனுடன் மோதும் சண்டையைக் கூட இலகுவாகக் காமெடியாக இயக்குநர் மாற்றிவிட்டிருப்பது நல்ல உத்தி.

இமான் இசையில் மெனக்கெட்டிருந்தால் இன்னும் பலம் கூடியிருக்கும். எம்.ஜி.ஆர் கூட ரத்தக்காயமில்லாமல் சண்டை போட்டதாக நினைவில்லை. ஆனால், எத்தனை மோட்டாவாக எட்தனை பேர் வந்தாலும் அலுங்காமல், குலுங்காமல் கார்த்தி அடித்துப் போடுவது ஆனாலும் ஹீரோயிஸம். கார்த்தியின் நிலைமையை சூரி சாயிஷாவுக்கு செல்போனில் ‘லைவ்’ பண்ணுவதும், அதே போல வில்லனுக்கு மாரிமுத்து சத்யாராஜ் குடும்ப சண்டையை ‘லைவ்’ பண்ணுவதும் இயல்புடன் ஒட்டாத காட்சிகள்.

இப்படிச் சில குறைகள் இருந்தாலும் கருத்துரீதியாக இந்த வருடத்தின் சிறந்த படங்களில் இது ஒன்றாக இருக்கும்.

சொல்ல வேண்டிய விஷயத்தைச் சொல்ல வேண்டிய நேரத்தில் சொன்ன பாண்டிராஜுக்கு வாழ்த்துகள்..! அவரது படைப்புகளிலேயே இது ‘பெஸ்ட்’ என்றால் மிகையில்லை.

வேல்ராஜின் ஒளிப்பதிவு அபாரம். அந்த மாட்டுவண்டி ரேஸும் அட்டகாசம்.

கடைக்குட்டி சிங்கம் – குடும்பத்துடன் குதூகலிக்க கொண்டாட்டமான படைப்பு..!

– வேணுஜி