காரி என்ற தலைப்புக்கு என்ன அர்த்தம்..? கடையெழு வள்ளல்களின் பெயர்களில் ஒன்றாக அது இருக்க, படம் அது சம்பந்தப்பட்டதோ என்றுதான் நினைக்க தோன்றியது.
ஆனால் படத்தில் சொல்லப்படும் காரி, ஜல்லிக்கட்டு காளை வகையை சேர்ந்தது. மிகவும் அரிதான அந்த வகைக் காளைகளை ஜல்லிக்கட்டில் பிடிப்பது பெரும் சவாலாக இருக்கிறது.
அத்துடன் ஜல்லிக்கட்டு என்பது பாரம்பரிய மான விளையாட்டு என்பதோடு நின்று விடாமல் அதன் மூலம் இரண்டு ஊர்களுக்குள் எப்படியான உடன்பாடு இருக்கிறது என்கிற நடைமுறை உண்மையும், ஜல்லிக்கட்டு காளைகளை வைத்து உலக அளவில் எப்படி வியாபாரம் நடந்து வருகிறது என்பதையும் ஒரு ஆய்வுக் கட்டுரை போல் படமாக எடுத்து நம்மிடம் சமர்ப்பித்து இருக்கிறார் இயக்குனர் ஹேமந்த்.
அதற்காக முதல் காட்சியில் இருந்தே மாடு பிடி விளையாட்டை காண்பிக்காமல் குதிரைப் பந்தயத்தில் படம் தொடங்குவது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. குதிரை பந்தயத்திற்கு ஒரு குதிரையை எப்படித் தேர்வு செய்வது, அதை எப்படி ஓட்டுவது என்பதெல்லாம் கூட நுணுக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் அதெல்லாம் வெறும் டாக்குமெண்டரி போல் இல்லாமல் ஒரு தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவை உள்ளே வைத்து அற்புதமான பேக்கேஜாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
நகரத்தில் தான் உண்டு, தன் குதிரை ரேஸ் உண்டு என்று ஜாக்கியாக இருக்கிறார் சசிகுமார். அவரது அப்பா ஆடுகளம் நரேன் குதிரை தேர்வாளராக ஒரு பக்கம் இருப்பதோடு, இன்னொரு பக்கம் சமுதாய நலனுக்கான போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
அது பற்றியெல்லாம் அக்கறையில்லாமல் இருக்கும் சசிகுமார் அதனாலேயே அப்பாவுடன் வேறுபட்டு, நண்பன் பிரேமுக்கு உதவ ஒரு பந்தயத்தில் சசிகுமார் வெற்றியை விட்டுக் கொடுக்க, அதன் காரணமாக அந்த குதிரை உயிரை விடுகிறது. குதிரை மீது உயிரையே வைத்திருக்கும் நரேனும் உயிரை விடுகிறார்.
மரணத்திற்கு பின் அப்பாவின் பெருமைகளை தெரிந்து கொள்ளும் சசிகுமார் தன்னுடைய சொந்த கிராமத்துக்கு சென்று அங்கே ஜல்லிக்கட்டு நடக்கவிருக்கும் நிலைமையில் தான் கற்ற குதிரை பந்தைய நுணுக்கங்களை வைத்து ஜல்லிக்கட்டில் ஈடுபட்டு எப்படி ஊர்ப் பெருமையை காப்பாற்றினார் என்பது கதை.
படங்களில் அறுத்துத் (கத்தியில்தான்) தள்ளும் தன்மை பெற்ற சசிகுமாருக்கு இந்த படம் மிகவும் பெருமையை தேடித் தரும். குதிரைப் பந்தய வீரராக சரியாகப் பொருந்தி இருக்கும் அவர் குதிரை சவாரி செய்வதும் அருமையாக இருக்கிறது அதேபோல் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் விழுந்து புரண்டு அடி வாங்கி கவனத்தைக் கவருகிறார்.
அவரது இணையாக வரும் மலையாள வரவு பார்வதி அருணுக்கு மூக்கும் முழியும் முத்தாக அமைந்திருக்கின்றன. அத்துடன் நடிப்பிலும் முத்திரை பதிக்கிறார் அவ.ர் இடைவேளைக்கு முன்னர் வரும் தந்தையுடன் ஒரு உரசலில் அவர் அழுது புரண்டு நடிக்கும் காட்சி அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கிறது.
நடிப்பில் எல்லோரையும் தூக்கி சாப்பிடுகிறார் பார்வதி அருணின் தந்தையாக வரும் இயக்குனர் பாலாஜி சக்திவேல். அந்தப் பாத்திரத்துக்கு உள்ளேயே வாழ்ந்து பார்த்தால் மட்டுமே இத்தனை சிறப்பாக நடிக்க முடியும்.
ஜல்லிக்கட்டுக் காளைகளை வைத்து இன்டர்நேஷனல் பிசினஸில் கொடி கட்டிப் பறக்கும் ஜே.டி.சக்கரவர்த்தி உண்மையிலேயே ஒரு பணக்கார டானின் தோற்றத்தில் பொருந்துகிறார்.
நல்ல வேடம் வில்லன் வேடம் எதையும் சிறப்பாக செய்யும் பிரேமுக்கு இதில் கெட்ட பெயர் தரக்கூடிய நெகட்டிவ்வான பாத்திரம். அதை துல்லியமாக செய்து நடிகனாக நல்ல பெயர் வாங்கிக் கொள்கிறார்.
சசிகுமாரின் அப்பாவாக வரும் ஆடுகளம் நரேன், ஊர் பெரியவராக வரும் நாகி நீடு, பந்தய குதிரைகளை வளர்க்கும் செல்வந்தர் சிவாஜி ராம்குமார், அவரது மகளாக வரும் அம்மு அபிராமி எல்லோருமே தங்கள் பாத்திரங்களை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
படம் பெரும்பாலும் இரவிலேயே நடப்பது ஏன் என்று தெரியாவிட்டாலும் அந்த இரவு காட்சிகளிலும் சிறப்பாக படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா.
குறிப்பாக படத்தின் இறுதியில் வரும் ஜல்லிக்கட்டு காட்சி அமர்க்களம். அந்த காட்சியை எப்படித்தான் எடுத்தார்களோ என்று தெரியாத அளவில் அத்தனை சிறப்பாக படம் ஆக்கி இருக்கிறார்கள்.
இமானின் இசையில் அமைந்த பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறது.
விலங்குகள் சம்பந்தப்பட்ட கதையாக இருந்தாலும் ஒரு விலங்கினுடைய உயிர் எத்தனை மகத்தானது என்று சொல்லி இருக்கும் இயக்குனர் ஹேமந்தை விலங்கு நல வாரியம் கௌரவிக்க வேண்டும்.
விலங்கு நல ஆர்வலர்களும் ஒத்துக் கொள்ளும் அளவிலேயே காட்சிகளை அமைத்திருக்கிறார் அவர்.
படத்தில் கிராமத்தில் பேசும் ஒவ்வொரு வசனமும் அத்தனை துல்லியமாக எழுதப்பட்டிருக்கிறது. அதில் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை கொண்டு நாகி நீடு பேசும் வசனங்கள் முத்தாய்ப்பானவை.
குதிரைப் பந்தய தில்லுமுல்லுகள், ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்ப்பவர்களின் பின்னால் இருக்கும் பிரச்சனைகள், இவற்றுடன் தரிசாக ஆன நிலங்களை குப்பை மேடாகவும் கழிவு நீரை கொட்டும் களமாகவும் ஆட்சியாளர்களே ஆக்கி வருவதையும் படம் வன்மையாக விமர்சிக்கிறது.
நிறைய விஷயங்களை உள்ளே வைத்திருப்பதால் எல்லாவற்றையும் சொல்லிவிடும் ஆவலில் காட்சிகள் கோர்வை இன்றி துண்டு துண்டாக நிற்பது படத்தில் ஒரு குறை.
ஆனாலும் ஒரே படத்தில் இத்தனை நல்ல செய்திகளை சொல்லிவிட வேண்டும் என்ற வேட்கையில் படத்தை தயாரித்திருக்கும் லக்ஷ்மன் குமாரும், இயக்குனர் ஹேமந்தம் பாராட்டுக்குரியவர்கள்.
காரி – கருதது மாரி (மழை)..!