தலைப்புகளிலேயே கவனிக்க வைப்பவர் இயக்குநர் கே.வி.ஆனந்த். எடுத்துக்கொண்ட வேடங்களுக்கேற்ப தன்னைப் பொருத்திக்கொள்பவர் சூர்யா. இந்த இருவரும் மூன்றாவது முறையாக இணைவதாலேயே இந்தப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.
இதுவரை மட்டுமல்ல எப்போதுமே பொதுவில் கவனத்துக்கு வராதிருக்கும் தேசிய பாதுகாப்புப் படை (National Security Guard) வீரரின் கதை என்பதால் கூடுதலாக கவனிக்கவும் வைக்கிறது.
அப்படி என்எஸ்ஜி வீரராக நாட்டை மட்டுமல்லாமல், இந்தியப் பிரதமரையும், உயிர் காக்கும் விவசாயத்தையும் ஒருசேரக் காக்கிறார் சூர்யா. அதனால் அவர் எப்படிப் பார்த்தாலும் ‘காப்பான்’தான்.
படம் முழுக்க வருகிறார் சூர்யா. அவருக்கு நடிக்கப் பிடிக்கும் என்பதாலேயே கிராமவாசி, பாதுகாப்பு அதிகாரி, பாகிஸ்தானில் ஒற்றன் என்று பலவித கெட்டப்புகள் அமைய… ஆனாலும் சூர்யா அலுக்கவே இல்லை. ஒரு நிஜ என்எஸ்ஜி வீரர் கூட இத்தனை விரைப்பாகவும், விழிப்பாகவும் இருப்பாரா தெரியவில்லை. ஒரு கட்டத்தில் பிரதமராக வரும் மோகன்லாலே “இப்படி விரைப்பா இருந்தா எப்படி இயல்பா பேசறதுன்னு தெரியலையே…” என்கிறார். அப்படி ஒரு ‘கஞ்சி போட்ட’ கதாபாத்திரம். எந்நேரமும் அலைபாயும் பார்வையுடன் வாழ்ந்திருக்கிறார் சூர்யா.
அத்தனை ‘கறார் ஆபீசரா’னதால் காதலிக்க நேரமோ, டூயட் பாட சிச்சுவேஷனோ வாய்க்காமல் எல்லா பிரச்சினையும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து என்ட் கார்டு போடும் ஸ்க்ரோலிங் டைட்டிலில் வைத்து சாயிஷாவுடன் ஒரு டூயட் பாடுகிறார் என்றால் அவரது சின்சியாரிட்டியைப் பார்த்துக் கொள்ளுங்கள். (இயக்குநர் கேவி ஆனந்தோ, கதை, திரைக்கதையை சேர்ந்து எழுதிய பட்டுக்கோட்டை பிரபாகரோ கூட இப்படி சின்சியாரிட்டியை யோசித்திருக்க மாட்டார்கள்…)
தமிழ் சினிமாவில் இந்தியப் பிரதமர் ஆவோம் என்று மோகன்லாலே நினைத்திருக்க மாட்டார். மலையாளம் கலந்த தமிழ் பேசிக்கொண்டு… தமிழ் பேசுகிற மனைவி, மகனுடன் ஒரு ‘லெவலி’ல் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவர். ஒரு தமிழ்நாட்டு தலைவராகவே அவரை நினைக்க வைத்திருக்கிறார்கள்.
அவரும் கண்ணசைவிலும், இடைவெளி விட்டுப் பேசுவதில் எட்டுப்பக்க வசனத்தை உணர்த்தி விடும் லாவகத்திலுமாக அனாயசமாக நடித்து விட்டுப் போகிறார். பாகிஸ்தான் பயிருக்கு சேதம் விளைவிப்பதைக்கூட விரும்பாத இப்படி ஒரு பிஎம் நமக்குக் கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கும்.
லாலேட்டன் பிரதமரானது கூட வியப்பில்லை. அவர் மகனாக வரும் ஆர்யாவும் ஒரு கட்டத்தில் இந்தியப் பிரதமராவதை எப்படித்தான் யோசித்தாரோ கேவி ஆனந்த்..? கூட சந்தானம் இல்லாத குறையாக அவர் செய்யும் அலப்பறைகள் ஒரு இளைய பிரதமர் நமக்கு வாய்த்தால் எப்படியெல்லாம் இருக்கும் என்று புரிய வைக்கிறது.
பிரதமர் அலுவலக சாயிஷா, சூர்யாவை விழுந்து விழுந்து காதலிப்பதெல்லாம் சரிதான். ஆனால், அவர்கள் கூடவே ஆர்யா வந்து கொண்டிருப்பதால் சூர்யா-சாயிஷா கெமிஸ்ட்ரி கொஞ்சம் வீக்காகி விடுகிறது. ஆர்யா பக்கத்தில் இருக்கும்போதெல்லாம் சூர்யா சாயிஷாவுடன் கொஞ்சம் இடைவெளி விட்டே நிற்கிறார்… இப்படியா செய்வீங்க… டைரக்டர் சார்..?
தன் பிறந்தநாளுக்கு ஆர்யா வருவதை விரும்பாத சாயிஷா, அவரைக் கழற்றிவிட, பாதுகாப்பு காரணங்களைக் காரணம் காட்டி சூர்யாவும் அவர் வருவதைத் தடுக்க… ஆனால், மாறுவேஷத்தில் ஆர்யா வருவதெல்லாம்… ஸாரி ரொம்ப ஓவர்..!
பாகிஸ்தான் இந்திய எல்லையில் ஊடுருவி செய்யும் அட்டகாசத்தில் ஆரம்பிக்கும் படம், நல்லவேளையாக அர்ஜுன் லெவலுக்குப் போகாமல், உள்நாட்டு தொழிலதிபர் ஒருவரே பிரதமருக்கு வில்லனாவது புத்தம்புது ஐட்டம். அரசியல்வாதிகளை பணம் படைத்த தொழிலதிபர்கள் எப்படி ஆட்டிவைக்கிறார்கள் என்ற நிஜத்துடன் புனையப்பட்ட கதையானதால் உணர்ந்து ரசிக்க வைக்கிறது.
அந்தத் தொழிலதிபர் வேடம் ஏற்றிருக்கும் ‘பொம்மன் இரானி’ பொருத்தமான தேர்வு. எதையும் தன்னால் சாதிக்க முடியும் என்ற இறுமாப்புடன் வருபவர் கடைசிக்கட்டத்தில் பொறுமையிழப்பது சிறப்பான நடிப்பு. அவரது கையாளாகவும், என்எஸ்ஜியிலிருந்த கறுப்பு ஆடாகவும் வரும் ‘சிராக் ஜானி’ சிறப்பான வில்லன்.
பொறுப்பான அதிகாரியாக வரும் சமுத்திரக்கனியும் ரசிக்க வைக்கிறார். ஒரு சீனில் படத்துக்குள் இல்லாத விஜய் சேதுபதியை அவர் லந்தடிப்பதை தியேட்டரே ரசிக்கிறது.
ஹாரிஸின் இசை வித்தியாசமாக ஒலித்திருக்கிறது. அவருக்கும் வருத்தம் இருக்கலாம், மெனக்கெட்ட ஒரு ஹிட் பாடல் படத்தின் கடைசியில் அமைந்து போயிருப்பதை.
அந்த லிஸ்டில் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபுவும் வருவார். அந்தக் கடைசிப்பாடலை படமாக்கியிருக்கும் விதம் மலைக்க வைக்கிறது… அவருக்கு விருந்தாக கிராமம், நகரம், பெருநகரம், வெளிநாடுகள் என அமைய பரந்து பட்ட லொகேஷன்களில் பறந்து பறந்து காட்சிப்படுத்தியிருக்கிறார். வெல்டன் பிரபு சார்..!
பிரதமர், பிரதமர் குடும்பம், அவருக்கு அருகிலிருக்கும் காப்பான்கள் என்று எல்லோருமே தமிழில் உரையாடிக் கொண்டிருப்பதால் டெல்லிகூட தமிழ்நாடு போலவே தோற்றமளிக்கிறது. அதேபோல் லண்டன் ‘பப்’பில் ஆகட்டும், காஷ்மீர் விழாவில் ஆகட்டும் தமிழ்ப்பாடலே பாடுகிறார்கள். போதாதென்று தமிழ்நாட்டு விவசாயப் பிரச்சினையே மூலாதாரமாகவும் இருப்பதால் ஒட்டுமொத்த இந்தியப்படம் ஒரு தமிழ்ப்படம் போலவே உணரவைத்திருக்கிறது.
இருந்தாலும் தமிழக விவசாயப் பிரச்சினையில் எப்படி கார்ப்பரேட்டுகள் மூக்கை நுழைத்து முழு உடலையும் நுழைக்கப் பார்க்கிறார்கள் என்று சொன்னதற்கும், அதற்கான ஆறுதலையும் தந்திருக்கும் கேவி ஆனந்த்துக்கு ஒரு ‘ஆர்கானிக் வெஜ் பொக்கே’ பரிசளிக்கலாம்.
தமிழக விவசாயிகள் மீதான ‘பயோ வார்’ பயமுறுத்துகிறது. அந்த மெகா பூச்சிகள் உருவாக்கத்துக்கு ஜிகா பாராட்டுகள்..!
காப்பான் – பயிரையும்… உயிரையும் ஒரு சேர…
– வேணுஜி