October 5, 2024
  • October 5, 2024
Breaking News
June 7, 2018

காலா திரைப்பட விமர்சனக் கண்ணோட்டம்

By 0 1288 Views

31 வருடங்களுக்கு முன் கமல் நடித்து வெளியான ‘நாயகன்’ படத்தை நினைவுபடுத்தும் படம். அதில் எப்படி மும்பை தாராவி பகுதியைச் சேர்ந்த வேலு நாயக்கர் அந்தப் பகுதி மக்களுக்கான வாழ்விடத்தைத் தக்கவைக்கவும், அந்தப் பகுதி மக்களின் வாழ்வுரிமைகளுக்காகவும் போராடி மாண்டாரோ அதே தேவைகளுக்காக இதில் தாராவியிலிருக்கும் அடித்தட்டு மக்களின் அறிவிக்கப்படாத தலைவராக இருக்கும் திருநெல்வேலித் தமிழரான ‘காலா’ என்கிற கரிகாலன் போராடி மாளும் கதை.

தாராவி குடியிருப்பை காலி செய்து கட்டடம் கட்ட ஆதிக்க சக்தி படைத்த சம்பத்ராஜ் பூமிபூஜை போடும் ஆரம்பக் காட்சி தொடங்கி, பாதிக்கப்பட்ட பெண் குரல் கொடுக்க பால்கனியிலிருந்து ரஜினி எட்டிப் பார்க்கும் காட்சி, ரஜினிக்கு வைத்த குறியில் அவர் மனைவி ஈஸ்வரி ராவ் உயிரிழக்கும் காட்சி, போலீஸ் ஸ்டேஷனில் காலாவை ஒன்றும் செய்ய முடியாதென்று (நாயகனில் கோர்ட்) அவரை விடுவிக்க, மாடியிலிருந்து கையசைக்கும் அவரை கீழே கூடியிருக்கும் கூட்டம் பார்த்து ஆர்ப்பரிக்கும் காட்சி என்று தொடர்ந்து கிளைமாக்ஸில் அவரை எதிர்பாராத ஒருவன் சுடுவது வரை அப்படியே நாயகனின் ‘ஜெராக்ஸ்’.

ஆனால், நாயகனில் தாராவி தாண்டிய மும்பையை அழகுற காட்சிப்படுத்தியது போல் இதில் மும்பைக்கான குறியீடுகள் மிஸ்ஸானது பெருங்குறை. அதுவும் செட்டுக்குள்ளேயே படமாக்கப்பட்ட தாராவிக் காட்சிகள் நம்பகத் தன்மையைக் குறைக்கின்றன. (ஆர்ட் டைரக்டர் இன்னும் உழைத்திருக்கலாம்…)

பா. இரஞ்சித்துக்கு படம் எடுப்பதைத் தாண்டி வேறு கொள்கைகளும், கோட்பாடுகளும் இருப்பதால் ஒரு கதைக்கு எது முக்கியமோ அதைத் தருவதில் திணறியிருக்கிறார். முக்கியமாக ரஜினி மற்றும் அவரது மகன்கள் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்க, அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள் என்றே சொல்லப்படவில்லை. காட்சிக்குக் காட்சி மேடை நாடகம் போல் அவரது மொத்தக் குடும்பமும் வேலை வெட்டியில்லாமல் மனைவி மக்களோடு வந்து நின்று கொள்கிறது.

ரஜினி போன்ற ஒரு தேசிய சூப்பர் ஸ்டாருக்கான ‘ஓபனிங் சீனை’க் கூட இயக்குநரால் சரியாகத் தர முடியவில்லை. ரஜினியின் அறிமுகக் காட்சியில் அவர் கிரிக்கெட் ஆட, கூட இருப்பவர் “சிக்ஸர் அடி தலைவா..!” என்று சொல்ல முதல் பந்திலேயே ‘கிளீன் போல்ட்’ ஆகிறார் அவர். இது சீரியஸ் காட்சியா, நகைச்சுவைக் காட்சியா என்றே தெரியவில்லை. இந்தக் காட்சியுடன் அவருடைய அரசியல் பிரவேசத்தை ஒப்பிட்டால் இன்னும் அதிர்ச்சியாக இருக்கும்.

‘தாதா’ என்று அறிமுகம் ஆகும் அவரை குடும்ப அளவில் ‘தாத்தா’வாகக் காட்டுவதுடன், குடும்பத்தினரை ஆவேசமாகத் திட்டிவிட்டு “அப்பப்ப இப்படி சவுண்ட் குடுத்தாதான் பயப்படுறாங்க..!” என்று ஜோக் அடிப்பதும், அவரைப் பார்த்து “வெளியில அரசியல்வாதிகளெல்லாம் உங்களைப் பார்த்து நடுங்குறாங்க. ஆனா, வீட்டுக்குள்ள நீங்க அக்காவைப் பார்த்து…” என்று சமுத்திரக்கனி சொல்வதாக வசனம் எழுதி… ரஜினியை ரஞ்சித் நன்றாக ‘ஓட்டி’யிருப்பதாகவே தெரிகிறது.

ரஜினிக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இது புரிகிறதோ இல்லையோ பொதுவான பார்வையில் படத்தின் பெரிய நெருடல் இது..! (ஒரு மிகப்பெரிய ஸ்டார் உங்களுக்குத் தொடர்ந்து ஒத்துக்கொள்கிறார்… ஒரு கேள்வியும் கேட்க மாட்டார் என்றால் இப்படியெல்லாமா அவரை ‘வைத்து செய்வீர்கள்’ ரஞ்சித்..?)

எடுப்பார் கைப்பிள்ளையாக ஆகிவிட்ட ரஜினியை நினைத்தால்தான் இன்னும் பாவமாக இருக்கிறது. ஆசியாவே வியக்கும் எத்தனை பெரிய ஸ்டார்..? எப்படிப்பட்ட நடிகர்..? அவருக்கான எந்த சிறப்பியல்பையும் படத்தில் காட்டாமல் வெகு சாதாரணமான ‘தாதா’வாகக் காட்டியிருப்பதில் வருத்தமே மிஞ்சுகிறது. அவரது பாட்ஷாவை ஒரு ஓட்டு ஓட்டியிருந்தால் கூட இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

எல்லாவற்றையும் தாண்டி ரஜினி, அவரது கடந்தகாலக் காதலி ஹூமா குரேஷியுடனான உடைந்துபோனக் காதலை நினைவுகூறும்போதும், வாயாடி மனைவி ஈஸ்வரிராவை மனதாரக் காதலிக்கும்போதும் தான் ஒரு சிறந்த நடிகர் என்று நிரூபிக்கிறார். “நானும் அந்த வயசைத் தாண்டி வந்தவதானே…? ஒரு நடை திருநெல்வேலி போய் பெருமாளைப் பாத்துட்டு வரேன்…” என்று தன் கடந்தகாலக் காதலைச் சொல்லி ரஜினியை ஈஸ்வரி ராவ் சீண்ட, “உண்மையிலேயே நீ பெருமாளைக் காதலிச்சியா..?” என்று ரஜினி பதறும் சீனும் ‘ஆஸம்..!’

அதேபோல் தன்னை வம்புக்கு இழுக்கும் அமைச்சர் ‘சாயாஜி ஷிண்டே’வைப் போட்டு வாங்க, “குமாரு… யாரு இவரு..?” என்று கேட்டே அவரை டென்ஷனாக்கும் காட்சி அதிரிபுதிரியாக இருக்கிறது. (அவரை தூத்துக்குடியில் வைத்து ஒருவர் “நீங்க யாரு..?” என்றாரே அதை நினைவுகூர்ந்து தியேட்டரில் கமெண்ட் அடிக்கிறார்கள்..!)

அதேபோல் ஒரு நல்ல நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனியை ‘சமுத்திரத் தண்ணி’யாக்கி சதா குடித்துக்கொண்டே இருப்பவராகக் காட்டியிருப்பதில் படத்துக்கு என்ன பலனோ..?

படத்தில் அதிகம் கவர்வது ‘நாட்டைச் சுத்தமாக்க விரும்பும்’ அரசியல் தலைவர் ‘நானா படேகர்’தான். என்ன அசகாய நடிப்பு..? ரஜினி உணர்ச்சிததும்ப வசனம் பேச, “பழைய டயலாக். வேற ஏதாவது இருந்தா பேசு காலா..!” என்று அலுத்துக்கொள்வதில் மின்னுகிறார். இடைவேளையில் அறிமுகமாகும் அவர் மொத்தப் படத்தில் வரும் காட்சிகள் 15க்கும் குறைவுதான். ஆனால்… அவர் மட்டுமே மனத்தில் நிற்கிறார்.

பா. இரஞ்சித் படம் நெடுக ரஜினியைப் போட்டு வாங்க, அவர் நம்பிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவரைப் போட்டு வாங்கியிருக்கிறார். தன் டியூனிலேயே ரெண்டை எடுத்து படம் முழுதும் ஒலிக்கவிட்டு காதுகளில் பதியவிட முயற்சி செய்தும் பாடல்களுக்கான இசை பெருங்குறையாக, பொருள் பொதிந்த பாடல்களை விழுங்கிவிட்டது.

முரளி ஜி.யின் ஒளிப்பதிவும், வண்ணமும் அபாரம். ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் நேர்த்தி.

மொத்தப்படத்தில் ஒரு பத்துக் காட்சிகள் சுவாரஸ்யப்படுத்துகின்றன. ஒரே லொகேஷனில் நிகழும் ஒரு தெரிந்த கதையை 2 மணி 40 நிமிடங்களுக்குச் சொல்வதில் ஒரு அலுப்பு வருகிறது. படத்தின் நீளத்தைக் குறைக்க முடியும். கிளைமாக்ஸில் எப்படி முடிப்பது என்ற குழப்பமும் ஜவ்வாக இழுக்கிறது.

கருமையும், அழுக்குமான குடியிருப்புகள், வாயாடிப் பெண்கள், கூட்டுக் குடியர்கள், பேரன் பேத்தி எடுத்தவரின் காதலி வீட்டுக்கு வர, மொத்தக்குடும்பமும் அவர்களைத் தனிமையில் விடும் பண்பாடு (!), தமிழைத் தப்பாக எழுதும் மக்கள், மாகாரஷ்டிரப் பெண்ணுக்கு இருக்கும் ஸ்டாமினா கூட இல்லாத தமிழ் இளைஞன், கதவைத் தாழிடாமலேயே சல்லாபிக்கும் ஜோடி போன்று கவனித்து வைக்கப்படுள்ள குறியீடுகளையெல்லாம் மணிரத்னம் போன்ற இயக்குநர்கள் செய்திருந்தால் கொதித்தெழுபவர்கள் இது இரஞ்சித் படமென்பதால் மௌனமாகி மகிழ வாய்ப்பிருக்கிறது.

உலகையெல்லாம் சுற்றி அனுபவங்களைப் பெற்று வந்த சமூகப் போராளி ஹூமா குரேஷி, தன் வீட்டில் உலக அமைதிக்கான நோபல் பரிசு வென்ற கென்ய சமூக சேவகி ‘வாங்கரி மாத்தாயி’ன் படத்தை மாட்டி வைத்திருப்பதெல்லாம் சரிதான். ஆனால், தாராவியில் பிறந்து வளர்ந்த அவருக்குத் தன் மக்களுக்கு அத்தனை ஏக்கரில் ஒரு அமையும் ஒரு கோல்ஃப் மைதானம் அனாவசியம் என்பதும், அதன் பின்னணியில் நானா படேகர் என்கிற கொழுத்த அரசியல்வாதி செய்யும் நயவஞ்சகம் இருக்கிறது என்பதும் புரியவில்லையா..?

அதேபோல் ரஜினியின் தந்தையைக் கொன்றவரும் ‘நானா’வாக இருக்க, அந்த வஞ்சம் கொஞ்சம் கூட இல்லாமல் இவர் பாட்டுக்குக் குடும்ப சகிதம் வாழ்வதும், இவரது வளர்ச்சி பற்றி அவர் கண்டுகொள்ளாமலே இருப்பதும் எத்தனை பெரிய ஓட்டைகள்..?

சம்பத்ராஜை நடு ரோட்டில் வைத்து வெட்டிக் கொன்று விட்டு யாரையோ போலீஸில் சரணடையச் சொல்லிவிட்டு மகிழ்ச்சியாக தன் குடும்பத்துடன் இருப்பாராம் ‘காலா’. என்ன வகையான ஹீரோயிசம் இது..?

ரஜினி அரசியலில் யாருக்கு ஆதரவாக இருப்பதாக நம்பப்படுகிறாரோ அவர்களின் கண்களை இவர் விரலை விட்டே குத்த வைத்திருக்கும் சூட்சுமம் புரிகிறது. ரஜினியின் ஆன்மிக ஈடுபாடு உலகம் அறிந்ததாக இருக்க, நாட்டு மக்கள் பெருவாரியாக வணங்கும் (அவரும் வணங்கக் கூடிய ராமன், வினாயகர் போன்ற) தெய்வங்களை இழிவு படுத்தும் செயலை அவர் படத்திலேயே செய்து காட்டியிருப்பதும் அவருக்கு எதிர்வினைகளாகவே படுகின்றன.

அந்த வகையில் அரசியல் ரீதியாகவும், இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராகவும் ரஜினி விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. அவரது புகழை எல்லோரும் தங்கள் சுயலாபத்துக்காகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை அவர் உணர்ந்தாக வேண்டும். அதை அவர் அருகில் உள்ளோர் அவருக்கு எடுத்துச் சொல்லவும் வேண்டும்.

காலா – கடைவீதிக்கு வந்த யானை..!

– வேணுஜி