April 26, 2024
  • April 26, 2024
Breaking News
July 26, 2022

ஜோதி திரைப்பட விமர்சனம்

By 0 585 Views

ஒரு ஆணின் கோபத்தை விட ஒரு பெண்ணின் அமைதி ஆபத்தானது என்பதுதான் படத்தின் கரு. அதன் மீது ஒரு உருக்கமான கதையைப் பின்னி ஜோதியாக ஒளி வீச வைத்திருக்கிறார் இயக்குனர் ஏவி. கிருஷ்ண பரமாத்மா. 

படத்தில் முன்னிலை வகிக்கிறார் கதாநாயகி  அருள்ஜோதியாக நடித்திருக்கும் நடிகை ஷீலா ராஜ்குமார்.

படத்தின் ஆரம்பத்தில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவரை அவசர ஆபரேஷன் காரணமாக தனியே விட்டுவிட்டு போகிறார் டாக்டரான அவரது கணவர் (ராட்சசன்) சரவணன். அப்போது என்று பார்த்து டிவியில் குழந்தைகள் கடத்தல் செய்திகளாக வந்து கொண்டிருக்க மிகவும் பதற்றத்தில் இருக்கிறார் ஷீலா.

இந்த பதட்டமான சூழ்நிலையில் அவர் வீட்டின் கதவு தட்டப்பட அடுத்தடுத்து விரியும் காட்சிகளில் ஷீலா மயக்கமாகக் கிடக்க அவரது வயிற்றிலிருந்து ஆபரேஷன் மூலம் குழந்தையை எடுத்து திருடிக் கொண்டு செல்கிறார் ஒருவர். 

ஷீலாவின் எதிர் வீட்டில் குடியிருக்கிறார் கதாநாயகன் வெற்றி. சப் இன்ஸ்பெக்டராக இருக்கும் அவரது மனைவி க்ரிஷா குரூப்புக்கு குழந்தை பெறும் பாக்கியம் இல்லை. அதனால் கர்ப்பிணியாக இருக்கும் ஷீலாவை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் மேற்படி சம்பவம் நடந்த சத்தம் கேட்டு க்ரிஷா குரூப், ஷீலாவின் வீட்டுக்குள் வந்து பார்க்க அங்கே ஷீலா அரைகுறையாக தையல் போடப்பட்ட வயிற்றுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடக்க தன் கணவர் வெற்றியை அழைத்து விவரத்தைச் சொல்கிறார்.

மருத்துவமனைகளில் இருந்து குழந்தைகளைத் திருடும் கொடூரம் வாடிக்கையாகிவிட்ட இந்தக் காலத்தில் வயிற்றைக் கிழித்து குழந்தையைத் திருடும் குற்றம் வேறா என்று பதறிப் போகும் வெற்றி அதன் காரணமாக யார் இருக்கக்கூடும் என்று துப்பறிவதுதான் மீதிக் கதை.

இடைவேளைவரை அவரது சந்தேக லிஸ்டில் வருபவர்கள் யாரும் குற்றவாளிகளாகத் தெரியாத நிலையில் புதிதாக ஒரு பாத்திரம் அறிமுகமாக, அவர்தான் குற்றவாளியாக இருக்கக்கூடும் என்கிற சந்தேகத்துடன் முன் பாதி முடிகிறது. இரண்டாவது பாதியில் அருகே இருப்பவர்களையும் சந்தேகக் கண்ணோடு பார்க்க நேர்வதில் வெற்றி தன் மனைவி க்ருஷா குரூப்பையும் கூட விசாரிக்கிறார். யார் குற்றவாளி என்பது அதைத் தொடரும் கிளைமாக்ஸ்.

வெற்றிதான் ஹீரோ என்று இருந்தாலும் அவருக்கு அதிகமான வேலை இல்லை. அவரும் எப்போதும் துப்பறியும் பாவனையில் இருந்து கொண்டிருப்பதால் வேறு உணர்ச்சிகளைக் காட்ட வழி இல்லாமல் போகிறது. ஆனால் அந்த சுடுகாட்டு சண்டை ஆக்ரோஷமாக இருக்கிறது.

கதையின் நாயகியாக இருக்கும் ஷீலாதான் அதிகமாக ஸ்கோர் செய்யும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். நடிப்பில் ஸ்கோர் செய்திருப்பதும் அவர்தான். கண் திறக்காமல் ஐசியூ வில் கிடக்க அவர் பற்றிய உண்மைகள் நமக்குத் தெரிய வரும்போது கண்மூடிக் கிடக்கும் நிலையிலேயே அவரைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது.

ஷீலாவின் கணவராக வரும் சரவணனுக்கு இதற்கு முன் பெயர் எடுத்த ராட்சசனில் முகத்தை காட்ட வழி இல்லாமல் போய்விட, இதில் அவருக்கு நிறைய க்ளோசப் வைத்து அவர் முகத்தை நம் மனதில் பதிய வைக்கிறார்கள். அப்பாவியான அவரும் ஒரு பாவியாக இருக்கக்கூடும் என்பதை ஏன் வெற்றி ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பது படம் நெடுக நமக்கு தோன்றிக் கொண்டே இருக்கிறது.

இரண்டாவது நாயகியாக வந்தாலும் க்ரிஷா குரூப்புக்கு நடிப்பதில் நிறைய வேலை இருக்கிறது. குழந்தை இல்லாத ஏக்கம் ஒருபுறமும், பார்த்துப் பார்த்து கவனித்துக் கொண்ட ஷீலாவின் குழந்தை பறிபோய் விட்ட அதிர்ச்சியிலும் அற்புதமாக செய்திருக்கிறார் க்ரிஷா.

படத்தில் துணைப் பாத்திரங்களாக வருபவர்களும் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார்கள். அதிலும் ஒரு பாத்திரத்தில் வரும் தயாரிப்பாளர் எஸ்பி. ராஜா சேதுபதி அற்புதமாக நடித்திருக்கிறார். கதையை துல்லியமாக உள்வாங்கிக் கொண்டவர்களால் மட்டுமே இந்த அளவுக்கு நடிக்க முடியும்.

ஷீலாவின் தந்தையாக நடித்திருக்கும் மைம்கோபி தன்னுடைய அன்பால் இப்படி ஒரு அப்பா எல்லோருக்கும் கிடைக்க மாட்டாரா என்று ஏங்க வைக்கிறார்.

திடீரென்று விபத்தில் இறந்து போகிறார் அவர் என்றிருக்க, எதற்காக அதற்கு முன்பாக உயில் எழுதி வைக்க வேண்டும் என்பது புரியவில்லை. திரைக்கதையில் இருக்கும் சருக்கல் அது.

மற்றபடி எதிர்பாராத திருப்பங்களைக் கொடுத்து உள்ளே ஒரு கனமான கதையையும் வைத்து நெகிழ்ச்சியான ஒரு படத்தைத் தந்திருக்கும் தயாரிப்பாளர் ராஜா சேதுபதியும் இயக்குனர் கிருஷ்ண பரமாத்மாவும் பாராட்டுக்குரியவர்கள்.

செஸி ஜெயாவின் ஒளிப் பதிவும் ஹர்ஷவர்தன் ராமேசுவரின் இசையும் பட்ஜெட்டுக்கு பாதகம் இல்லாமல் பலம் சேர்க்கின்றன.

ஒரு வருடத்திற்கு 40 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போவதும், அவற்றில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடிக்கவே முடிவதில்லை என்றும் கடைசியில் சொல்லப்படும் செய்தி நம் இதயத்தைப் பிசைகின்றது.

குழந்தைகளைக் கவனமாக பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் இந்தப் படத்துக்கு விருதுகள் தந்து கௌரவிக்கலாம்.

ஜோதி – பிரகாசம்..!