நாயகன் பிரஷாந்த் நடித்திருக்கும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகம். அதற்கு அவர் தந்தை தியாகராஜன் மகனுக்காக மேற்கொள்ளும் படத்தேர்வும் ஒரு காரணம் எனலாம். அப்படி இதுவரை பிரசாந்த ஏற்காத ஒரு கேரக்டரை இதில் ஏற்க வைத்திருப்பது இப்படத்தின் சிறப்பு.
முதன்முறையாக இதில் எதிர்மறையான பாத்திரம் ஏற்றிருக்கிறார் பிரஷாந்த். அவரும், அவரது நான்கு கூட்டாளிகளும் சேர்ந்து குறுக்கு வழியில் கோடீஸ்வரர்களாகக் கனவு கண்டு சட்டரீதியாக சூதாட்ட விடுதி, மதுபான விடுதி என்று நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். கூடவே இன்னும் பணம் ஈட்ட சட்டத்துக்குப் புறம்பான வழியிலும் போய் பணம் சம்பாதிக்க அவ்வப்போது நிழல் உலக வேலைகளில் இறங்குகிறார்கள்.
அப்படி ஒரு வேலையில் இறங்கும்போது ஐவர் போடும் பணத்தையும் இன்னும் ‘ஷார்ட் கட்’டில் சிந்தித்து ஒருவரே தேட்டை போட நினைப்பதும், அது முடிந்ததா என்பதும்தான் கதை.
பிரஷாந்தின் நான்கு கூட்டாளிகளாக பிரபு (அட… இவருமா இப்படி..?), ஆனந்தராஜ், அசுதோஷ் ராணா, ஆத்மா பேட்ரிக் நடித்திருக்கிறார்கள். வெளிமாநிலத்திருலிந்து வரும் போலீஸ் அதிகாரியாக சாயாஜி ஷின்டே நடித்திருக்கிறார்.
வடக்கிலிருந்து வாங்கிய கதை என்றாலும் அதன் திரைக்கதை வசனத்தை தயாரிப்பாளரான தியாகராஜனே ஏற்று அவற்றை விறுவிறுப்பாக அமைத்திருக்கிறார். அதன் தன்மை கெடாமல் அற்புதமாக இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ப.வெற்றிச்செல்வன். (பெயருக்கேற்றவகையில் இயக்குநராக இப்படத்தில் வெற்றி பெறுகிறார் இவர்…)
ஆஸ்கார் விருதுக்கான படத்தைக் கொடுத்தாலும் தன் பாணிக்கு மாற்றிக் கொண்டு நடிக்கும் பிரஷாந்த் இந்தப்படத்திலும் அப்படியே ‘அசால்ட்டாக’ நடித்திருக்கிறார். ஒரு தவறு செய்யப்போய் மேலும் மேலும் தவறுகளாகச் செய்து மாட்டிக்கொள்வதும், பின் புத்திசாலித்தனமாக அதிலிருந்து வெளியே வருவதும் ரசிக்க வைக்கிறது.
கெட்டவராக நடித்த பாவத்தின் சம்பளத்தை சீக்கிரமே பெற்றுக் கொள்கிறார் பிரபு. வழக்கம்போல் ஆனந்தராஜ் தன் பாணியில் ரசிக்க வைக்கிறார். அவர் மனைவியாக வரும் தேவதர்ஷினியும் கச்சிதம். அவரும், அசுதோஷ் ராணாவும் முணுக்கென்றால் முட்டிக்கொள்வதும், ஆனால் இருவர் முடிவுமே அவர்களால் ஆகாததும் கூட எதிர்பாராத திருப்பங்கள்.
யாருடன் நின்றாலும் ஆத்மா ஒரு நாற்காலியில் ஏறி நிற்பதைப் போலவே உயர்ந்து தெரிகிறார். நடிப்பிலும் உயர முயற்சிக்க வேண்டும் அவர். அவரது அம்மா சென்டிமென்ட் கடைசியில் கலங்க வைக்கிறது.
இரண்டு நாளில் குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறேன் என்று ஒரே நாளில் கண்டுபிடித்துவிடும் சாயாஜியும் கவர்கிறார்.
அடுக்கடுக்கான இந்தத் தவறுகளையெல்லாம் பிரஷாந்த் யாருக்காக செய்கிறார் என்றால் அவரது காதலி சஞ்சிதா ஷெட்டிக்காக என்பதுதான் இடிக்கிறது. ஒரு ஐஸ்வர்யா ராய்க்கோ, நயன்தாராவுக்கு எடுக்க வேண்டிய ரிஸ்க்கை சஞ்சிதாவுக்கு எடுப்பது கொஞ்சம் ஓவர்தான்.
அந்த சஞ்சிதாவை தன் மனைவி என்று அசுதோஷ் ராணா அறிவிப்பது அதைவிட ஷாக். அரைநிஜார் போட்டுக்கொண்டு அலையும் சஞ்சிதாவை அட்ராசிட்டி செய்யும் அசுதோஷ் அனுமதி தராமல் தொடவே மாட்டார் என்று ராவணன், சீதை கணக்காக நூல் சுற்றுவதும் ரொம்ப ஓவர்.
மற்றபடி கொஞ்சம் அசந்தாலும் கதை புரியாது என்ற அளவுக்கு நுட்பமான பரபரப்பான ‘கதை சொல்லல்’ படத்தில் லயிக்க வைக்கிறது.
ஒளிப்பதிவாளர் பன்னீர்செல்வம் படத்தின் நேர்த்தியைக் கூட்டியிருக்கிறார். (இவ்வளவு நாள் எங்கே இருந்தீர்கள் பன்னீர்..?) தேவைக்கேற்ற இசையைத் தந்திருக்கிறார் பின்னணி இசைத்திருக்கும் ஜெய்கணேஷ். பாடல்கள் இல்லை என்பது குறையாக இல்லை என்பதும் சபாஷ்..!
ஜானி – பிரஷாந்துக்கேற்ற ‘மங்காத்தா..!’
– வேணுஜி