‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படம் மூலம் அறிமுகமாகி ‘பிளான் பண்ணி பண்ணனும்’ படத்தில் நடித்த ரியோ ராஜ் ஹீரோவாகும் புதிய படம் ‘ஜோ’.
விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்.அருளானந்தம் தயாரித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிகரன் ராம்.எஸ் எழுதி இயக்கியிருக்கிறார். சித்து குமார் இசையமைக்க, ராகுல் கே.ஜி.விக்னேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இதில் ரியோ ராஜுக்கு ஜோடியாக அறிமுக நடிகை மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ட்ரிக்கா நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சார்லி, அன்புநாதன், ஏகன், கெவின் ஃபெல்சன், வி.கே.விக்னேஷ் கண்ணா, விஜே ராகேஷ், இளங்கோ குமனன், ஜெயக்குமார், எம்.ஜே.ஸ்ரீராம் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
நவம்பர் 24 ஆம் தேதி வெளியாக உள்ள ‘ஜோ’ திரைப்படம் குறித்து நாயகன் ரியோ ராஜ், இயக்குநர் ஹரிஹரன் ராம் மற்றும் இசையமைப்பாளர் சித்து குமார் படம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
நாயகன் ரியோ ராஜ் கூறுகையில்,
”இயக்குநர் ஹரிஹரன் ராம் இந்தக் கதையை என்னிடம் சொல்லும் போது நான் நடிப்பதாக திட்டம் இல்லை. ஒரு காதல் கதை இருக்கிறது, சொல்கிறேன் என்று சொல்லி தான் என்னிடம் சொன்னார். கதையைக் கேட்டதும் அவரிடம் உள்ள உரிமையில், இதை இப்படி பண்ணலாம், அப்படி பண்ணலாம் என்று யோசனை சொல்ல ஆரம்பித்து விட்டேன். பிறகுதான் நான் நடிக்க முடிவானது.
இயக்குநர் ஹரிஹரன் ராமுக்கு இதுதான் முதல் படம். ஆனால் படத்தை பார்த்தால் அவரை முதல் பட இயக்குநர் என்று சொல்ல மாட்டோம். அவரது இயக்கம் மிக சிறப்பாக இருக்கிறது. நிச்சயம் இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்…
நான் முதல் முறையாக தாடி வைத்து இந்த படத்தில் நடித்திருக்கிறேன். காதல் தோல்வி என்றாலே தாடி வளர்க்க வேண்டுமா? என்று கேட்கிறார்கள். தாடி என்பது காதல் தோல்விக்கானது மட்டும் அல்ல, ஒருவரது வாழ்க்கை பயணம் மற்றும் காதல் தோல்வியில் இருந்து அவனால் மீள முடியாத சூழலை வெளிக்காட்டுவதாகும். அந்த இயல்பு நிலையை வெளிக்காட்டும் வகையில்தான் நான் தாடி வளர்த்தேன்.
காதல் கதைக்கு இசை மிக முக்கியம், அதன்படி இசை ரீதியாக இந்த படத்தை வேறு ஒரு தளத்திற்கு சித்துகுமார் கொண்டு சென்றுவிட்டார். படத்திற்கு இசை மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. படம் பார்க்கும் போது நீங்களும் அதை உணர்வீர்கள்.” என்றார்.
இயக்குநர் ஹரிஹரன் ராம் படம் பற்றி கூறுகையில், ”நான் ஹிப் ஹாப் ஆதியிடம் உதவி இயக்குநராக இருந்தேன். ரியோ அண்ணா நடித்த ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியிருக்கிறேன்.
நாயகனின் 10 வருட வாழ்க்கை பயணம் தான் இந்த படத்தின் கதை.17 வயது முதல் 25 வயது வரையிலான நாயகனின் வாழ்க்கையை ரசிக்கும்படியான காதல் கதையாக கொடுத்திருக்கிறேன். இரண்டு நாயகிகள், இருவரும் ஒரே மனநிலையில் இருப்பவர்கள். அதாவது, இந்த உலகத்தில் தனது தந்தை மட்டுமே தங்களுக்கு பாதுகாப்பை அளிக்க முடியும், அவரைப் போல் இருக்கும் ஒரு ஆண் தான் தங்களது வாழ்க்கை துணையாக வர வேண்டும் என்று எண்ணுகிறவர்கள், இவர்கள் இருவருடைய வாழ்க்கையிலும் நாயகன் நுழைகிறார்.
முதல் நாயகியுடனான காதல் சில காரணங்களுக்காக தோல்வியில் முடிகிறது. இரண்டாவது நாயகிக்கு வேறு ஒரு கனவு, வேறு ஒரு ஆசை இருக்கிறது. அவரை காதலித்து திருமணம் செய்யும் நாயகன், அவருடைய ஆசையை புரிந்துக்கொண்டு அதை நிறைவேற்றினாரா?, இல்லையா? என்பது தான் கதை.
இதை படம் பார்க்கும் ஒவ்வொருவரும் உணர்வதோடு, தங்களுடன் படத்தை தொடர்புபடுத்திக் கொள்வார்கள், அந்த வகையில் படம் இயல்பான காதல் கதையாக வந்திருக்கிறது..!” என்றார்.
இசையமைப்பாளர் சித்து குமார் கூறுகையில்,
”இந்தப் படத்தில் யுவன் சார் ஒரு பாடலைப் பாடியதோடு, அந்தப் பாடலில் தோன்றிருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நான் இசையமைப்பாளராவதற்கு யுவன் சார்தான் தூண்டுதலாக இருந்தார். இந்த பாடலும் யுவன் சாரின் குரலிலை கேட்டது. அதனால் அவர் பாடினால் நன்றாக இருக்கும் என்று அனைவரும் விரும்பினோம்.
பாடலுடன் யுவன் சாரை சந்தித்தோம். கேட்டதும் அவர் பாட சம்மதம் தெரிவித்துவிட்டார். பாடலில் அவர் தோன்றியதற்கு ரியோ ராஜ் தான் காரணம். அவர்தான் யுவன் சாரிடம் பாடலில் நடிக்க வேண்டும் என்று கேட்டார். தன்னுடைய பாடலை தவிர வெளி பாடல்களில் யுவன் சார் தோன்றியதில்லை, ஆனால் எங்கள் பாட்டுக்காக அவர் நடித்துக் கொடுத்தார். இது எங்கள் படத்திற்கு மிகப்பெரிய பெருமையை தந்திருக்கிறது.” என்றார்.
யுவனையே கவர்ந்த பாடல் உலகைக் கவர்ந்ததில் ஆச்சரியமில்லைதான்..!