June 20, 2024
  • June 20, 2024
Breaking News
November 11, 2023

ஜப்பான் திரைப்பட விமர்சனம்

By 0 164 Views

தவறுகளால் தகவமைக்கப்பட்ட ஒரு மனிதனின் கதை இது. படம் முடியப் போகும் கடைசி நிமிடத்தில் கூட அவன் தன் தவறுகளை திருத்திக்கொள்ளவே இல்லை என்பது இந்த படத்தில் ஆச்சரியமான விஷயம்.

ஆனால் தவறு செய்தவனை தாய் கூட மன்னிக்க மாட்டாள் என்பதுதான் படம் சொல்லும் செய்தி. இந்தச் செய்தியை தவறு செய்தவனின் பாதையிலேயே போய் நமக்குப் புரிய வைக்கிறார் இயக்குனர் ராஜுமுருகன்.

படம் முழுவதும் தவறான மனிதனாகவே வருவதற்கு ஒரு ஹீரோவுக்கு மிகப்பெரிய தில் வேண்டும் அந்த தில்லுடன் களம் இறங்கி இருக்கும் கார்த்தி, அதற்கேற்ற ஒப்பனை, உடல் மொழி என்று தன்னை மாற்றிக் கொண்டு முழுக்க வெறுக்க வைக்கும் ஜப்பான் என்ற ஒரு பாத்திரத்தில் வந்திருக்கிறார்.

ஆனால் வெறுக்க வைப்பதற்கு பதிலாக ரசிக்கவே வைத்திருக்கிறது அந்தப் பாத்திர வார்ப்பு. 

தங்கப்பல், தங்க நிற ஆடை தங்க ஆபரணங்கள், அள்ளிக் கொடுப்பதும் தங்கக் காசு, உலா வர தங்க ஹெலிகாப்டர் (!) என்று முழுவதும் தங்கமயமாக தகதகவென ஜொலிக்கிறார் கார்த்தி. அப்படி ஜொலிக்க அவர் செய்யும் வேலை..? வேறென்ன, தங்க நகைக் கடைகளை கொள்ளையிடுவதுதான்.

அப்படி தமிழக உள்துறை அமைச்சரின் பணம் முதலீடு செய்யப்பட்ட ஒரு தங்க நகைக் கடையை அவர் கொள்ளையிட்டதாக சாத்தியங்கள் சொல்ல, அவரைத் தேடிப் பிடிக்க தமிழக காவல்துறை முடுக்கி விடப்படுகிறது.

ஒரு பக்கம் சுனில் தலைமையிலான போலீஸ் படையும், இன்னொரு பக்கம் விஜய் மில்டன் தலைமையிலான போலீஸ் படையும் ஜப்பான் என்கிற கார்த்தியை வலை வீசித் தேடிக் கொண்டிருக்க, அவரது கூட்டாளியாக நம்பப்படும் ஒரு அப்பாவியை இன்னொரு பக்கம் சித்திரவதைக்கு உட்படுத்தப் படுகிறார்.

ஆனால் இந்த விஷயம் கார்த்தியை எட்டும் போதுதான் தெரிய வருகிறது, அது அவர் சம்பந்தப்பட்ட கொள்ளை இல்லை என்பது.

அப்படியானால் கார்த்தியின் பெயரை வைத்து கொள்ளையடித்தது யார்? தன் பழியிலிருந்து கார்த்தி தப்பினாரா? கார்த்தியின் பெயரில் போலீசில் அகப்பட்ட அப்பாவியின் கதி என்ன என்பதற்கெல்லாம் விடை சொல்கிறது மீதிக் கதை.

தன் தலையில் இடியே விழுந்தாலும் அசராத மன உறுதியுடன் தெரியும் கார்த்தி, எந்த இக்கட்டில் இருந்தும் தப்பிச் செல்லும் காட்சிகள் ரசிக்கவைக்கின்றன.

எல்லா சீரியஸ் தருணங்களிலும் சிரிக்க வைக்கும் உத்தி அவருக்கு நன்றாகவே கை கொடுத்திருக்கிறது. 

“உன் சாவு நல்லாவே இருக்காது..!” என்று ஒரு தாயே சொல்லக் கேட்கும் மனநிலையில் இருப்பவன் என்ன செய்வானோ அதை சரியாக பிரதிபலித்திருக்கிறார் கார்த்தி. இந்த சமூகம் அவருக்கு என்ன தந்ததோ அதையே அவர் திருப்பித் தருவது அவர் வகையில் நியாயப் படுத்தப் படுகிறது..!

நாயகியாக வரும் அனு இம்மானுவேல் படத்திலும் சினிமா கதாநாயகியாகவே வருவது பொருத்தம். அவருக்கு சொல்லிக் கொள்ளத் தக்க பெரிய பாத்திரம் இல்லை என்றாலும் கார்த்திக்கும் அவருக்குமான கெமிஸ்ட்ரி சரியாகவே இருக்கிறது.

படம் முழுக்க சீரியசான வேடத்தில் வந்தாலும் சுனில், கார்த்தியிடம் ஒரு பலான மேட்டரில் மாட்டிக் கொண்டிருக்கும் காட்சி வரும் இடங்களில் எல்லாம் வெடித்துச் சிரிக்க வைக்கிறது.

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராகவும் இயக்குனராகவும் முத்திரை பதித்த விஜய் மில்டன், இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக அற்புதமாக நடித்திருக்கிறார். இனி குணச்சித்திர வேடங்களில் அவரை நிறையவே பார்க்க முடியும்.

கார்த்தியின் வலது கையும், இடது கையுமாக வரும் ஜித்தன் ரமேஷுக்கும், வாகை சந்திரசேகருக்கும் கூட பளிச்சென்று சொல்லிக் கொள்ளும் அளவில் பாத்திரங்கள் அமைந்திருக்கின்றன.

ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் நுங்கு விற்கும் அருள் எழிலன் ரொம்பவே ரசிக்க வைக்கிறார். வரும் காட்சிகளில் எல்லாம் வியர்வை வழிய உடற் பயிற்சி செய்துகொண்டே இருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

கார்த்தியின் கூட்டாளியாக நம்பப்படும் அந்த நடிகர் யார் என்று தெரியவில்லை. அவர் போலீசில் படும் பாடு நம்மைக் கதிகலங்க வைக்கிறது. கிளைமாக்சில் கொஞ்சம் பிசகி இருந்தாலும் அவர் நம் இதயத்தை பிசைந்து எடுத்திருப்பார்.

ரவிவர்மனின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை வெகுவாகக் கூட்டி இருக்கிறது. ஜிவி பிரகாஷின் இசை இந்த கமர்ஷியல் படத்திற்கு டிராகன் பலத்தைக் கொடுத்திருக்கிறது.

இயக்குனர் ராஜுமுருகன், இது வணிக ரீதியான படம் என்பதால் லாஜிக்கில் அங்கங்கே சறுக்கியும் இருக்கிறார்.

இருந்தாலும் கிடைத்த இடங்களில் தன் முத்திரையைப் பதிக்க அவர் தவறவில்லை. கார்த்தி சுவற்றில் சரியாக ஓட்டை போடாததை ஒருவர் சுட்டிக்காட்ட, பதிலுக்கு கார்த்தி, “ஓட்டை (வாக்கை) ஒழுங்கா போடாதவங்க எல்லாம் ஓட்டை போடறதை பத்திப் பேசறீங்க…” என்று  லந்தடிப்பது அவரது டிரேட் மார்க்.

கார்த்தியின் வெள்ளிவிழாப் (25 ஆவது) படத்துக்கு ஒரு தங்கப்படம் கொடுத்ததற்காகவும் அவர் பாராட்டுப் பெறுவார்.

ஜப்பான் – தீபாவளி தாண்டியும் நிப்பான்..!