September 15, 2024
  • September 15, 2024
Breaking News
May 11, 2023

இராவணகோட்டம் திரைப்பட விமர்சனம்

By 0 11111 Views

தென் தமிழகத்தில் சாதி மோதல்களுக்குக் குறைவில்லை. இதில் எந்த சாதி, மோதல்களுக்கு வழி வகுக்கிறது என்று பல்வேறு திரைப்படங்களில் அவரவர் நியாயங்களைச் சொல்லி வந்திருக்கிறார்கள்.

ஆனால் அது மட்டும்தான் தென் மாவட்டங்களில் பிரச்சனையா என்றால் ‘அது இல்லை – இன்னொரு பெரிய வில்லன் இருக்கிறான்’ என்று இந்தப் படத்தில் அடையாளம் காட்டுகிறார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன்.

தமிழகத்தின் வறட்சி மாவட்டமான ராமநாதபுர கிராமத்தில் நடக்கிறது கதை. அங்கே இருக்கும் இரண்டு சாதிப் பிரிவினருக்குள் மோதல் ஏதும் ஏற்பட்டு விடாமல் இருக்க வேண்டும் என்று பெரும்பாடு பட்டுக் காத்து வருகிறார் ஒரு சாதியைச் சேர்ந்த பிரபு. அவரது உயிர் நண்பராக இருக்கும் இளவரசு இன்னொரு சாதியைச் சேர்ந்தவர்.

மேல வீதியினர், கீழவீதியினர் என்று அழைக்கப்படும் இந்த இரண்டு சாதியினர் பெயர்களும் குறிப்பாகச் சொல்லப்படவில்லை என்றாலும், குறியீடாகப் புரிந்து கொள்ள முடியும். 

பிரபு, இளவரசுவின் தோழமை போலவே பிரபுவின் உறவினரான சாந்தனுவும், இளவரசின் மகனும் இணைபிரியாத தோழமைகளாக ஊரைக் காக்கும் பிரபுவின் இரு கரங்களாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

ஆனால் ஊரை இரண்டாக்க ஒரு சக்தி வேண்டுமே, அந்த சக்தியாக வருகிறார் அந்த ஊர் எம்.எல்.ஏ அருள் தாஸ். அவரையும் கூட பிரபுதான் தன் செல்வாக்கை பயன்படுத்தி சுயேச்சையாக தேர்தலில் நிற்க வைத்து எம்.எல்.ஏ ஆக்கினார் என்கிறார்கள்.

ஆனால் பதவி மோகம் அவரை ஊருக்கு நல்லது விடாமல் செய்வதுடன் ஆளும் கட்சியுடன் கூட்டு சேர்ந்து கொண்டு அடாவடி வேலைகளைச் செய்ய வைக்கிறது. இருந்தாலும் பிரபுவின் செல்வாக்குள்ள கிராமங்களில் இவரது அரசியல் எடுபடாமலேயே போக அதற்கு ஒரு சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ஊர் திருவிழாவுக்காக சாந்தனுவின் முறைப் பெண்ணான ஆனந்தி தன் தாயுடன் அந்த ஊருக்கு வருகிறார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் சாந்தனுவும், ஆனந்தியும் காதலித்துக் கொண்டிருக்க அது பிடிக்காத ஆனந்தியின் தாய் அந்த ஊரை விட்டுப் போக, இப்போது பழைய விஷயத்தை எல்லோரும் மறந்து இருப்பார்கள் என்று திருவிழாவுக்கு வருகிறார்.

அந்த காதலையே பகடைக்காயாக வைத்து ஒற்றுமையுடன் இருக்கும் தோழமைகளுக்குள் பகைமையை ஏற்படுத்தி அருள்தாஸ் என்னவெல்லாம் செய்தார், அதை பிரபுவால் எதிர்த்து வெல்ல முடிந்ததா, இதில் சாந்தனுவின் பங்கு என்ன என்பதெல்லாம் மீதிக் கதை.

கதையின் நாயகனாக சாந்தனு வந்தாலும் அவருக்கு ஒரு கமர்ஷியல் கதாநாயகனுக்கு உரிய வகையில் ஓப்பனிங் மற்றும் பில்டப் காட்சிகள் எதுவும் இல்லை என்பது ஆறுதல் அளிக்கிறது.

அவரும் அதையெல்லாம் எதிர்பார்க்காமல் கதையைத் தாங்கிச் செல்லும் நாயகனாக நடித்திருக்கிறார். அவர் சிறந்த டான்ஸர் என்பது எல்லோருக்கும் தெரியும் – ஆனால் அதற்கு இந்தப் படத்தில் அதிக வேலை இல்லை. மாறாக ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருக்கிறது.

ஆக்ரோஷமான சண்டை, ரசம் மிளிரும் காதல், உணர்ச்சி பிறழாத நடிப்பு என்று அநாயசமாக தன் பாத்திரத்தைச் சுமந்து கிடக்கிறார். தன் நண்பன் தடம் மாறிச் செல்லும்போது அருமையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தி இருக்கும் அவருக்கு இந்தப் படம் நடிப்பில் பெரிய பெயரைத் தரும்.

ஆனந்தி படம் முழுவதும் வருகிறார் என்றாலும் அவருக்கு சாந்தனுவை காதலிப்பதை தவிர வேறு வேலை எதுவும் இல்லை. எந்தப் பாத்திரம் என்றாலும் மிகச்சிறப்பான நடிப்பைத் தரும் ஆனந்திக்கு இந்தப் படத்தில் வேலை குறைவுதான். ஆனாலும் அந்த அப்பாவித்தனமான முகத்தில் காதல் பொங்கி வழிகிறது.

ஊருக்குக் காவல் தெய்வம் போல் வருகிறார் பிரபு. பெயருக்கு மட்டும் என்று இல்லாமல் இளவரசுவை தன் உயிரில் பாதியாகவே அவர் நடத்துவதும், அவரது மகனை தன் சொந்த பிள்ளை போலே நடத்துவதிலும் மிளிர்கிறார் பிரபு.

“என் உயிரைக் கொடுத்தாவது இந்த ஊரைக் காப்பாற்றுவேன்…” என்று மூன்று இடங்களில் அவர் சொல்லும்போது அவருடைய முடிவு எப்படி இருக்கும் என்பதை நாம் யூகிக்க முடிகிறது. அதைத் தவிர்த்து இருக்கலாம்.

பிரபுவின் நம்பிக்கைக்கு பாத்திரமான வேடத்தில் வரும் இளவரசு தன்னுடைய பாந்தமான நடிப்பில் கவர்கிறார்.

அவரது மகனாக கிட்டத்தட்ட இரண்டாம் நாயகன் வேடத்தில் வரும் இளைஞரும் அற்புதமாக நடித்திருக்கிறார். தோற்றத்தில் ‘தென்னகத்து அக்ஷய் குமார்’ என்று சொல்லும் அளவுக்கு ஓங்குதாங்காக இருக்கும் அவரது அப்பாவித்தனமான நடிப்பின் முன்பாதியும், கேட்பார் பேச்சை கேட்டு வில்லனாகும் பின் பாதியும் நன்று.

சாந்தனுவின் அக்காவாக வரும் தீபா சங்கரும், ஆனந்தியின் அம்மாவாக வரும் சுஜாதா சிவகுமாரும், இயல்பான கிராமத்து அம்மாக்களாக அடையாளம் தெரிகிறார்கள். அதிலும் சுஜாதா… திடீர் நாகரிக மம்மியாக மாறி அடிக்கும் அலப்பறையும், ஆங்கிலமும் லந்து.

அமைச்சராக வரும் பி.எல்.தேனப்பன் தன் வழக்கப்படி வில்லத்தனம் புரிகிறார். அருள் தாசும் அப்படியே. 

ஆனால், அருள்தாசின் சதிகார சதுரங்கத்திற்கு சூத்திரதாரியாக வரும் அந்த ஒத்தக் கை நடிகர் அருமையாக ஸ்கோர் பண்ணி இருப்பதைச் சொல்லியாக வேண்டும்.

வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரன் இசையும் படத்தின் தரத்தைத் தூக்கி நிறுத்தி இருக்கின்றன.

ஒரு சாதியினரை இன்னொரு சாதியினர் எதிரிகளாக நினைத்து இப்படி மோதல்களை நிகழ்த்திக் கொண்டிருக்க அவர்களை நூலில் கட்டி ஆட்டும் பொம்மைகளாக அரசியல்வாதிகள் இருப்பதுவும், அவர்களை ஆட்டுவிக்கும் சக்திகளாக கார்ப்பரேட் கம்பெனிகள் இருப்பதையும் அழுத்தமாகவே சொல்லி இருக்கிறார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன்.

நிஜத்தில் பல வருடங்களாக இழுத்தடித்துக் கொண்டிருக்கும் கருவேல மர ஒழிப்பு திட்டத்தின் சட்டரீதியான சிக்கல்களையும் இதில் பதிவு செய்து இருக்கிறார் அவர். 

அவர் சொல்ல வந்த கதை ஓரிடத்தில் முடிவு பெற்றாலும் ராமநாதபுரம் போன்ற தென் மாவட்டங்களின் எதிர்காலம் குறித்த எச்சரிக்கைகளுடன் முடிகிறது படம்.

கமர்சியல் கற்பனையாக ஆரம்பித்து அப்படியே பயணப்படும் இந்தக் கதை இன்றைய நாட்டு நடப்புடன் முடிவு பெறும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாதுதான்.

ராம ராஜ்ஜியம் ஆண்டு கொண்டிருக்கும் இந்திய திரைப்பட உலகில் ராவண கோட்டத்தை முன்னிறுத்திக் கதை சொல்லி இருக்கும் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மற்றும் தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் ‘தில்’ வியக்க வைக்கிறது.

ராவண கோட்டம் – ரௌத்திர ஆட்டம்..!

– வேணுஜி