April 24, 2024
  • April 24, 2024
Breaking News
May 11, 2023

குட் நைட் திரைப்பட விமர்சனம்

By 0 286 Views

ஈரைப் பேனாக்கி பேனை பெருமாள் ஆக்குவது என்று ஒரு சொல்லாடல் கிராமிய வழக்கில் உண்டு. அப்படி நாம் அன்றாடம் சந்திக்கும் ஒரு சாதாரணப் பிரச்சினையை வைத்து இரண்டரை மணி நேரம் நம்மை ரசிக்க வைத்து அதிசயத்தில் ஆழ்த்தி இருக்கிறார் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன்.

நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் மணிகண்டனுக்கு ஒரு பிரச்சனை – வேறு ஒன்றும் இல்லை, தூங்கும்போது சத்தமாக குறட்டை விடுவதுதான். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களை கூட அலற வைக்கும் அவரது குறட்டையால் அவர் வேலை மற்றும் காதல் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் என்னென்ன..? அதில் இருந்து அவர் மீள முடிந்ததா என்கிற தினப்பலன் சைசுக்கு எழுதி விடக்கூடிய சின்ன கதைதான் இதில்.

மீட்டருக்கு மிகாத வேடம் என்றாலே “கூப்பிடு மணிகண்டனை…” என்று ஆகிவிட்டது. டைட்டிலில் பெயர் போடும்போது அவரது குறட்டை சத்தம் காதைக் கிழிக்க, அதிலிருந்து எழுப்பிவிட்டாலும் வந்து பல் தேய்க்காமல் டைனிங் டேபிளிலேயே இன்னொரு குட்டித்தூக்கம் போடும் அளவுக்கு கும்பகர்ணப் பிறவி.

தூங்கிவிடலாம் – ஆனால் தூங்குவது போல் பாசாங்கு செய்வது மிகப்பெரிய வேலை. ஒவ்வொரு காட்சியிலும் மணிகண்டன் தூங்கும்போது அவர் நிஜத்திலேயே தூங்குவதாக நம்மை நம்ப வைக்கும் அந்த நடிப்பு பலே.

தன்னுடைய பிரச்சனையை தானே நொந்து கொண்டு ஒரு கட்டத்தில் அடுத்தவர் மீது எரிந்து விழும் அளவுக்கு உக்கிரமாக உண்மையை மறந்து நடந்து கொள்கிற நடிப்பில் மிரட்டி இருக்கிறார் மணிகண்டன். ஒரு கட்டத்தில் அவர் மீது நமக்கு கோபமே வருகிறது.

அதே போல் தான் நாயகியாக வரும் மீத்தா ரகுநாத்தும். முதல் நீ முடிவும் நீ படத்தில் பார்த்த அந்த அப்பாவித்தனம் பொருந்திய முகம் அவ்வளவு சீக்கிரம் மறக்கவில்லை. ஆனாலும் இந்தப் படத்தில் அவர் ஏற்றிருக்கும் கேரக்டருக்கு அவரது முகமும் ஹஸ்கி வாய்சும் அத்தனைப் பொருந்திப் போகிறது.

பிறந்தது முதலே ‘ அதிர்ஷ்டக் கட்டை’ என்று எல்லோராலும் ஒதுக்கப்படுவதில் பயந்து எதிலும் விலகி நிற்பவர், மணிகண்டனின் காதலுக்கும் பயப்படுகிறார். தனக்கு இது வேண்டும் இது வேண்டாம் என்று கூட சொல்லப் பயந்து பிரச்சனைகளை பெரிதாக்கிக் கொள்ளும் அவரது பாத்திரப்படைப்பு நெடுங்காலத்துக்கு மறக்காது.

அதே போல்தான் மணிகண்டனின் அக்காவாக நடித்திருக்கும் ரேச்சல் ரெபக்கா மற்றும் அவரது கணவராக வரும் ரமேஷ் திலக், மணிகண்டனின் அம்மாவாக வரும் உமா ராமச்சந்திரனும்.

ஒரு நடுத்தர வர்க்க கூட்டு குடும்பம் எப்படி இருக்குமோ, அதை அப்படியே திரையில் பிரதிபலிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். அதில் ஒவ்வொருவருக்கும் அவர் பிடித்திருக்கும் கேரக்டரசேஷன் அபாரம். அதுவே இந்தப் படத்தில் நம்மை ஒன்றி லயிக்க வைக்கிறது.

நடிகர், நடிகையர் மட்டுமல்லாமல் ஒரு சின்ன நாய்க்குட்டியும் கூட ஒரு கேரக்டராக ஆகி இருப்பதும் அது காட்டும் உணர்ச்சிகளும் கூட அசத்தல்.

குழந்தை உண்டாகாத காரணத்தால் ஒவ்வொரு உறவினரிடமும் அசிங்கப்படும் ரெபக்காவின் தவிப்பும், அப்படி உண்டான குழந்தை கலைந்து போக நேர, ரமேஷ் திலக் வெடிக்கும் இடமும் அற்புதம்.

மீதா ரகுநாத்துக்கு இருக்கும் ஒரே ஆறுதலான இயக்குநர் பாலாஜி சக்திவேலும், அவர் மனைவியாக நடித்திருக்கும் கவுசல்யா நடராஜனும் கூட எளிதில் கடந்து போக இயலாத கனமான பாத்திரங்கள்.

மணிகண்டன் வேலை பார்க்கும் ஐடி நிறுவனத்தின் மேலாளராக நடித்திருக்கும் பக்ஸ், சின்னக் கேரக்டரில் வந்தாலும் நினைவில் நிற்கிறார். அவரின் அலப்பறைகளுக்கு நொந்து நொந்து அமைதி காக்கும் மணிகண்டன் ஒரு கட்டத்தில் அவருக்கு நெத்தியடியாக பதிலடி கொடுக்கும்போது அரங்கத்தில் அதிர்வலைகள்.

சீரியஸ் காட்சிகளையும், காமெடி காட்சிகளையும் எங்கெங்கே எந்தெந்த இடத்தில் எப்படி எப்படி இணைக்க முடியுமோ அப்படி இணைத்து அத்தனை ரசனைக்கும் நம்மை ஆளாக்கும் இயக்குனரின் திறமை வியக்க வைக்கிறது.

இப்படித்தான் முடியும் என்று தெரிகிற கதை, அப்படியே ஒரு கட்டத்தில் முடிவுக்கு வர, எந்த திருப்பமும் இல்லையே என்று நாம் நினைக்கும் நேரத்தில் கார்கள் மற்றும் ஆட்டோவில் பயணப்படும் பாத்திரங்கள் மாறி மாறி ‘யு ‘ டர்ன் அடித்து ஏகப்பட்ட திருப்பங்களுக்கு உள்ளாகும்போது நம்மால் குலுங்கிச் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

ஷான் ரோல்டனின் இசை கதையைப் புரிந்து பங்களித்து இருக்கிறது அதேபோல் தான் ஜெயந்த் சேதுமாதவன் ஓவிய ஒளிப்பதிவும். 

ஒரு சின்ன லைனையே இவ்வளவு ரசிக்கத்தக்க முறையில் திரைக்கதை எழுதி இயக்க முடியும் என்றால் ஒரு நல்ல கதையைக் கையில் எடுத்தால் இந்த பட இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் முதல் வரிசை இயக்குனர்களில் ஒருவராகி விடும் சாத்தியம் நிறையவே இருக்கிறது.

படம் முழுவதும் குறட்டைச் சத்தம் நிறைந்திருந்தாலும், தியேட்டரில் ஒருவரிடம் கூட அதைக் காண முடியாத அளவுக்கு நம்மை எங்கேஜ் பண்ணி வைத்து விட்ட அவருக்கு வாழ்த்துகள்.

குட் நைட் – குட் லக்..!

– வேணுஜி