November 14, 2024
  • November 14, 2024
Breaking News
June 14, 2018

ஆப்கானிஸ்தான் அரங்கேறும் டெஸ்ட் போட்டியில் இந்தியா அதிரடி தொடக்கம்

By 0 1420 Views

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாட சமீபத்தில்தான் ஐ.சி.சி. அங்கீகாரம் அளித்தது. இதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்டில் இந்தியாவுடன் இன்று (14-06-2018) விளையாடத் தொடங்கி இருக்கிறது.

இதையொட்டி ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி ட்விட்டரில் காலையில் வாழ்த்து தெரிவித்தார்.

அதில், “ஆப்கானிஸ்தான் தனது வரலாற்று சிறப்பு மிக்க முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் விளையாடத் தேர்வு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாழ்த்துகிறேன். இதுபோன்ற விளையாட்டுக்கள் தொடர்ந்து இரு நாட்டு மக்களிடையிலான நல்லுறவை வலுப்படுத்தும்..!” என்று அவர் வாழ்த்தியிருக்கிறார்.

இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கும்.இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் தொடங்கியது. இரு அணிகளும் இந்த ஒரே ஒரு டெஸ்டில் மட்டுமே மோதுகின்றன.

ரகானே, தவான், முரளி விஜய், புஜாரா, கருண்நாயர், ஹர்த்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அஸ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், லோகேஷ் ராகுல், ‌ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி உள்ளிட்ட வீரர்கள் அடங்கிய இந்திய அணிக்கு ரகானே கேப்டனாக இருக்கிறார்.

அதேபோல் அஸ்கர் ஸ்டானி ஸ்காய் கேப்டனாக இருக்கும் ஆப்கானிஸ்தான் அணியில் அப்சர் சசாய், அமீர்கம்சா, அஸ்மத்துல்லா, இஷானுல்லா, ஜாவீத் அகமது, முகமது ‌ஷசாத், முஜீப் -உர்- ரகுமான், நசீர் ஜமால், ரக்மத்ஷா, ரஷீத்கான், சயீத் ஷிரசாத், வபதார், யாமின் அகமது, ஜாகீர்கான் ஆகிய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

முதல் நாள் ஆட்டமான இன்று பேட்டிங் செய்யத் துவங்கிய இந்தியா 78 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்டியா 10 ரன்னுடனும், அஸ்வின் 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இடையில் இரண்டு முறை மழை குறுக்கிட்டதில் ஆட்டம் தடைப்பட்டது.

தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய தவானும், முரளி விஜய்யும் சதம் அடித்தனர்.