மனிதன் பொருள் தேடி உலகின் எந்த மூலைக்குப் போனாலும் தன் அடையாளத்தை இழந்து விடக் கூடாதென்று உணர்த்தும் கதை.
இந்த வலிய கருத்தை எளிய முறையில் இட்லிப் பானையில் ஊற்றி அவித்துத் தந்திருக்கிறார் தனுஷ்.
உணவுப் படைப்பது வியாபாரம் அல்ல, ருசியுடன் உயிர் வளர்க்கும் சேவை என்று நினைக்கும் இட்லி கடைக்காரர் ராஜ்கிரனின் மகனாக பிறந்த தனுஷ், அதே தொழிலை விரிவாக செய்ய எண்ணி அப்பாவுடன் மாறுபட்டு வெளிநாட்டுக்கு சென்று தொழில் அளவில் உயர்கிறார்.
அதனால் கோடீஸ்வர முதலாளியின் மகளை திருமணம் செய்ய வாய்ப்பு கிடைத்தும் திருமணத்துக்கு அப்பாவையும் அம்மாவையும் கூட அழைக்க முடியாத சூழலில்… அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் அவரை எங்கே கொண்டு செல்கின்றன என்பதுதான் கதை.
அதிர்ஷ்ட தேவதையாக… தான் நடித்த அத்தனை படங்களிலும் வெற்றி என்ற பெருமையில் மட்டுமின்றி நடிப்பிலும் அசத்தும் நித்யா மேனன்… (குண்டான் சட்டிகளை உருட்டுவதில் தான் எவ்வளவு கோபம்…)
தன் ஒவ்வொரு அங்க அசைவிலும் நடிப்பைக் காட்டியிருக்கும் ராஜ்கிரண்…
சண்டைக் கோழியாகும் எனர்ஜடிக் மற்றும் ஈகோ வில்லன் அருண் விஜய்…
இதுவரை இல்லாத அளவில் தோற்றத்திலேயே மிரட்டி குறித்த நேரத்தில் குணச்சித்திரத்துக்கு மாறும் பார்த்திபன்…
கோடீஸ்வரியாக வந்தும் அறச்சீற்ற நடிப்பில் அசத்தி இருக்கும் ஷாலினி பாண்டே…
இவர்களுடன் சத்யராஜ், கீதா கைலாசம், சமுத்திரக்கனி, இளவரசு அத்தனை பாத்திரங்களுக்கும் பொருத்தமான தேர்வுகளுடன்…
எழுதி, இயக்கி, நடித்து அத்தனை பொறுப்புகளிலும் முத்திரை பதித்திருக்கிறார் தனுஷ்… இயக்குவதன் சிரமங்கள் நடிப்பில் தெரியாமல் இருப்பதே அவரது சிறந்த நடிப்புக்குச் சான்று..!
தனுஷின் எழுத்துக்களிலும் அவ்வளவு அனுபவ முத்திரைகள். தலைமுறை தாண்டும் வாழ்க்கைக் கனவுகள், குல தெய்வம் உள்ளிட்ட உரையாடல்கள் ஒவ்வொன்றும் அதற்குச் சான்று..!
அப்பாவின் பெயர் சுமந்த அந்தக் கன்றுக்குட்டியும் ஒரு கேரக்டராகி விட்டது இயக்கத்தின் அற்புதம்.
எல்லாவற்றிலும் மேலாக அகிம்சையே பலமான ஆயுதம் என்பதை உணர்த்தி இருப்பது ஆகச்சிறப்பு.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும், ஒளிப்பதிவாளர் கிரண் கௌசிக்கும் உணர்வுகளைச் சிதைக்காமல் பங்களித்திருக்கிறார்கள்.
எளிய… ஆனால் இனிய சத்துணவு தந்திருப்பதில் மிளிர்கிறது இட்லி கடை..!
– வேணுஜி