தன் வழி தனி வழியான படங்களை இயக்கி வரும் தமிழின் பெருமைமிக்க பெண் இயக்குநர்களில் ஒருவரான லஷ்மி ராமகிருஷ்ணனின் அடுத்த படம் ‘ஹவுஸ் ஓனர்.’
இதில் ‘பசங்க’ புகழ் கிஷோர் மற்றும் விஜி சந்திரசேகர் மகள் லவ்லின் ஆகியோரை முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து இயக்கி வருகிறார் லஷ்மி. சென்னையில் வந்த பெரு வெள்ளத்தின் போது நடக்கும் ஒரு காதல் கதையாம் இது.
ஒரு தீவிரமான காதல் கதையாக இருந்தாலும், படத்தில் பாடல்கள் கிடையாது. வெள்ளத்தின்போது நடக்கும் படமாக இருந்தாலும் வெள்ளம் சார்ந்த எந்த ஒரு காட்சியும் இருக்காது. இதுவே இந்தப்படத்தின் வித்தியாசத்துக்கு உதாரணங்கள்.
“ஆரம்பத்தில், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை வைத்து இதே ‘ஹவுஸ் ஓனர்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை எடுக்கும் யோசனை எனக்கு இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் முதல் டிராஃப்ட் மட்டுமே தயாராக இருந்ததால், அது தொடங்கப்படவில்லை.
இதற்கிடையில், நடிகர்கள் அவரவர்களின் படங்களில் பிஸியாகி விட்டனர். அவர்கள் ஏற்கனவே ஒத்துக்கொண்ட படங்களை முடித்து விட்டுதான் திரும்ப வருவார்கள் என்றானது. இது தவிர, என் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘சொல்வதெல்லாம் உண்மை’யை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஸ்கிரிப்டை ‘ப்ளூ இன்க்’ என்ற தலைப்பில் எழுதி வைத்திருந்தேன்.
ஜூன் 10ஆம் தேதி தொடங்க வேண்டிய படப்பிடிப்பு அது. ஆனால், ரியாலிட்டி ஷோ தற்காலிக தடை காரணமாக, அதைக் கையில் எடுக்க எனக்குத் தயக்கமாக இருந்தது. அதன் சேட்டிலைட் மற்றும் வெளிநாட்டு உரிமைகள் கூட உறுதி செய்யப்பட்டு விட்டன. ஆனால் என் மனது சொல்வதை நான் பின்பற்ற நாங்கள் ‘ஹவுஸ் ஓனர்’ ஆரம்பித்தோம்..!” என்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன் இந்தப்படம் பற்றி….
முன்னணி நடிகர்கள் பங்கு பெற்ற இந்தத் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. அடுத்த வாரம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்குகிறது, மேலும் இரண்டு கட்ட படப்பிடிப்போடு, செப்டம்பர் மாதத்தில் முழு படமும் முடிகிறதாம்.
படத்துக்குப் பின்னணி இசை மட்டும் தேவைப்படுவதால் முழு படப்படிப்பையும் முடித்துவிட்டு மட்டுமே இசையமைப்பாளரை உறுதி செய்ய இருக்கிறாரா லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.
அதையும் நீங்களே பண்ணிடுங்க மேடம்..!