June 12, 2024
  • June 12, 2024
Breaking News
March 26, 2024

ஹாட் ஸ்பாட் திரைப்பட விமர்சனம்

By 0 172 Views

இந்தப் பட ட்ரெய்லர் வெளியான நாளிலிருந்து பரபரப்பைக் கிளப்பிய படம். காரணம் வேறொன்றுமில்லை – பாலியல் விஷயங்களை பட்டவர்த்தனமாக சொல்லும் படமாக பார்க்கப்பட்டதுதான்.

இப்போது திரைக்கு வருகிறது. எப்படி இருக்கிறது படம்?

நான்கு கதைகளை அந்தாலஜி போல் சொல்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். அவர் இயக்குனராகவே நடிக்க, இந்த படத்தின் தயாரிப்பாளர் தயாரிப்பாளராகவே நடிக்க அவரிடம் கதை சொல்ல வரும் விக்னேஷ் கார்த்திக் ஒரு நான்கு கதைகளை சொல்கிறார் அவ்வளவுதான் படம்.

அவற்றில் இரண்டு ரொம்பவும் மலிவான ரசனை உள்ள கதைகள். முதலும் கடைசியும் ஓகே ரகம்.

கதையைப் பற்றி சொன்னால் ஸ்பாய்லர் ஆகிவிடும் என்பதால் மேம்போக்கான விஷயங்களை பார்ப்போம்.

முதல் கதையில் ஆதித்யா பாஸ்கரும், கௌரி கிஷனும் நடித்திருக்கிறார்கள். இருவரும் காதலர்களாக இருக்க காலம் மாறிய நிலையில் பெண் ஆணுக்கு தாலி கட்டப் போய் என்ன நடந்தது என்ற நிகழ்வுகளாக நகர்கிறது கதை. பெண்ணியத்தைப் போற்றும் இந்தக் கதையை ரசித்து வரவேற்க முடிகிறது.

சாண்டி மாஸ்டரும், அம்மு அபிராமியும் நடித்திருக்கும் இரண்டாவது கதை ஒரு மாதிரியாக ஆரம்பித்து ஒரு மாதிரியாகவே முடிகிறது. இந்த கதைக்கு இயக்குனராலேயே முடிவு சொல்ல முடியவில்லை என்பதால் ஒரு மாதிரி முடித்து வைக்கிறார்.

மூன்றாவது கதை படு அபத்தம். அலுவலக டாய்லெட்டிலேயே சுய இன்பம் செய்யும் சுபாஷ், அது வெளியே தெரிந்த காரணத்தால் வேலை பறிபோக, தொடர்ந்து வேலையில்லாத காரணத்தால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டு ஆண் விபச்சாரி ஆகிறார். இதனால் ஜனனியுடன் இருந்த அவரது புனிதமான காதல் என்ன ஆனது என்று போகிறது கதை.

இதில் அம்மாவும் மகனும் பார்க்கக் கூடாத சூழலில் பார்த்து, பேசக்கூடாத விஷயங்களைப் பேசுகிறார்கள். அதையெல்லாம் கேட்பதற்கே அபத்தமாகவும் அருவருப்பாகவும் இருக்கிறது. அதையும் கூட தியேட்டரில் சில பேர் கைதட்டி ரசிப்பது இன்னும் அருவருப்பு அடையச் செய்கிறது.

நான்காவது கதை டிவி ஷோக்களைப் பற்றியது. அதிலும் சிறுவர் சிறுமிகளை முன்னிலைப்படுத்தி நடத்தப்படும் ஷோக்களில் அவர்களுடைய மனநிலையும் உடல் நிலையும் எத்தனை பாதிக்கப்படுகிறது என்பதைச் சொல்லி வெளியில் குழந்தைகளை வேலைக்கு வைத்தால் அது குற்றம் எனில் டிவி ஷோக்களில் குழந்தைகளை இந்தப் பாடு படுத்துவது எதில் சேர்த்தி என்கிற வினாவை கலையரசன் மூலமாக முன் வைக்கிறார் இயக்குனர்.

இது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய கேள்வி என்பதால் கைதட்டல்கள் இயக்குனருக்கும் கலையரசனுக்கும் போய் சேர்கிறது. டிவி ரியாலிட்டி ஷோ என்று ஒன்றை காட்டுகிறார்கள். அதெல்லாம் படு மொக்கையாகவே இருக்கிறது.

ஆனால், இந்த படம் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே ஆணுக்குப் பெண் தாலி கட்டுவது, லெஸ்பியானிசம், அண்ணன் தங்கை காதல், சுய இன்பம், அம்மாவுக்கும் மகனுக்குமான பாலியல் குழப்படிகள், குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல்கள் என்று சமுதாயத்தில் முகம் சுளிக்க வைக்கும் அத்தனை விஷயங்களையும் இயக்குனர் வரிசைக் கட்டி எடுத்திருப்பது வெறும் பரபரப்புக்காக மட்டுமே என்பது  புலனாகிறது.

நான்கு கதைகளும் ஒரே மாதிரி ஆரம்பித்து ஒரே மாதிரி முடிவதில் அலுப்பு தட்டுகிறது. காட்சிகளின் நீளமும் சோதிக்கவே செய்கிறது.

இசையமைப்பாளர் படத்தின் தன்மையை புரிந்து கொண்டு வித்யாசமான இரண்டு பாடல்களை இசைத்து இருக்கிறார். பின்னணி இசையும் பாராட்டும்படி இருக்கிறது. ஒளிப்பதிவும் படத்துக்கு கை கொடுத்திருக்கிறது.

ஹாட் ஸ்பாட் – நல்லதும் கெட்டதுமான ‘மேட்டர்’கள்..!