சென்னை -சேலம் பசுமைச்சாலை அமைக்க, பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தத் திட்டத்துக்காக காஞ்சீபுரம், சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்தும் பணியை அரசு மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் தர்மபுரி நாடாளுமன்ற நாடாளுமன்ற தொகுதி எம்.பி. அன்புமணி ராமதாஸ் தன் தொகுதியில் உள்ள மக்களின் உணர்வைத் தெரிந்துகொள்ள, கருத்து கேட்கும் கூட்டத்தை நடத்த முடிவு செய்தார். ஆனால், அவருக்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.
இதை எதிர்த்து பா.ம.க. துணை பொதுச்செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் டி.ராஜா, இந்த வழக்கில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் ஆஜராக உள்ளதால், விசாரணையைத தள்ளிவைக்க கோரிக்கை விடுத்தார்.
அப்போது “அன்புமணி ராமதாசை சொந்தத் தொகுதிக்குள் செல்ல விடாமல் அரசு எப்படி தடை விதிக்க முடியும்? அவரது தொகுதி மக்களிடம் கருத்து கேட்கும் அவரது உரிமையை அரசு தடுக்க முடியாது..!” என்று நீதிபதி கருத்து தெரிவித்த பின்னர் விசாரணையை 10-ந்தேதிக்குத் தள்ளிவைத்தார்.