February 16, 2025
  • February 16, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பாதுகாப்புடன் கௌதம் மேனன் நடத்திய படப்பிடிப்பு ஒரு சான்ஸ் குடு வீடியோ
June 6, 2020

பாதுகாப்புடன் கௌதம் மேனன் நடத்திய படப்பிடிப்பு ஒரு சான்ஸ் குடு வீடியோ

By 0 747 Views

Oru Chance Kodu penneபொது முடக்க காலத்தில் கோலிவுட் நம்மை மகிழ்விக்கும் ஏராளமான, ஆச்சர்யங்களை அள்ளித் தந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கி வெளியான “கார்த்திக் டயல் செய்த எண்” குறும்படம் வெளியான வேகத்தில் இணைய உலகை கலங்கடித்து, யூடுயூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் மில்லியன் கணக்கில் பார்வைகளை குவித்து, பெரும் வெற்றியடைந்தது. தனித்தன்மை வாய்ந்த இயக்குநர் கௌதம் மேனன் தற்போது மீண்டும் ஒரு காதல் பொங்கும் படைப்புடன் வந்திருக்கிறார்.

அவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் சுயாதீன காதல் இசைப்பாடலான “ஒரு சான்ஸ் குடு” பாடலின் டீஸர் வெளியான வேகத்தில் இணையத்தில் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பெற்றிருக்கிறது. இப்பாடலின் டீஸரில் சாந்தனு பாக்கியராஜ், மேகா ஆகாஷ் மற்றும் கலையரசன் நடித்துள்ளார்கள். அற்புத நடிப்பால் முழுப்பாடலிலும் ரசிகர்களை இவர்கள் கட்டிப்போடுவார்கள் என நம்பலாம்.

பொதுமுடக்கம் நீடிக்கும் இன்றைய சூழலில் இப்பாடலை படம்பிடித்தது பற்றி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறியதாவது….

இப்பாடலின் மையம் என்பது காதல், நட்பு, இருவருக்கும் ஏற்படும் தவறான புரிதல் ஆகியவை தான். ஒருவன் தன் நண்பனை பற்றி நல்ல விசயங்களை ஒரு பெண்ணிடம் சொல்லப்போக, அவள் அதனை இவனை பற்றியதாக தவறாக புரிந்து கொள்கிறாள். அவன் மிக நகைச்சுவையான வகையில் இதனை கையாள்கிறான். இதுவே பாடலின் மையம். இப்பாடலின் முதல் விதை பொதுமுடக்கத்திற்கு முன்பாகவே ஆரம்பித்து விட்டது. கார்த்திக் மதன் கார்கி ஆகியோருடன் இதனை பற்றி பொதுமுடக்கத்திற்கு முன்பே விவாதித்தேன்.

இப்பாடலின் முக்கிய அம்சமாக, வெகு அற்புதமான நடிகர்கள் இப்பாடலில் பங்கு பெற்றிருந்தாலும், நம் கவனத்தை ஈர்ப்பது இப்பாடல் படமாக்கப்பட்ட இடமான மொட்டை மாடி தான். அந்த இடங்கள் பாடலுக்கு பெரும் அழகை கூட்டுவதாக அமைந்திருக்கிறது. இயல்பாகவே இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் பாடல் படமாக்கம் எப்பொதும் தனித்தன்மை வாய்ந்ததாக, பின்னணி இடங்கள் அருமையாக இருக்கும். இப்பாடல் படமாக்காப்பட்ட இடம் பற்றி கூறும்போது… இந்த முழுப்பாடலும் எனது வீட்டு மொட்டை மாடியிலேயே படமாக்கப்பட்டது. மொட்டை மாடி என்பது இந்த பொது முடக்க காலத்தில் அனைவரும் அதிக நேரம் செலவிடும் இடமாக மாறியிருக்கிறது. அதனால் பார்வையாளர்கள் இதனை வெகு நெருக்கமாக உணர்வார்கள். நடிகர்கள் தவிர்த்து மொத்தமாகவே 7 பேர் மட்டுமே எங்கள் குழுவில் பணியாற்றினர். இது மிகச்சாதாரணமான ஒரு நண்பர்களின் கூடலாக, திரை மீதான காதலுடன் விரும்பி உருவாக்கும் நிகழ்வாக நிகழ்ந்தது. நடிகர்கள் அனைவரும் மேக்கப்பே இல்லாமல் தாங்களே செய்து கொண்ட இயல்பான ஒப்பனையுடன் நடித்தார்கள். அவர்களின் சொந்த உடையில் இருந்து படப்பிடிப்பிற்கு முந்தைய நாள் உடை வடிவமைப்பாளர் உத்ரா மேனன் தேர்ந்தடுத்த உடையுடனே நடித்தார்கள். தற்போதைய சூழ்நிலையில் படப்பிடிப்பில் அனைவரும் முகக்கவசத்துடன், சமுக இடைவெளியை கடைப்பிடித்து மிகவும் சுத்தமான முறையில் அனைத்து விதிகளையும் பின்பற்றியே படம்பிடித்தோம். நடிகர்கள் மட்டுமே கேமராவை பார்த்து நடிக்கும் போது மட்டும் முகக்கவசம் இன்றி நடித்தார்கள். பாடலின் டீஸருக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதே போல் முழுப்பாடலை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

கௌதம் வாசுதேவ் மேனனின் ஜோஷ்வா படத்தில் பணியாற்றி வரும் பின்னணி பாடகர் கார்த்திக் இசையமைக்க, ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இப்பாடலுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். உத்ரா மேனன் உடைவடிவமைப்பு செய்ய, சதீஷ் நடன இயக்கம் செய்துள்ளார்.