வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும் விந்தை மனிதர்கள் கடந்த இரண்டு தலைமுறைக்கு முன்னரே மாறிவிட்டனர். பெண்ணுக்கு இலக்கணம் சொல்லிய காலம் போய் புதுமைப் பெண்ணுக்கு உரிய இலக்கணம் கடந்த தலைமுறையில் சொல்லப்பட்டு விட்டது.
ஆனால் இது மட்டுமே போதுமானதா? பெண்களுடைய ஆசைகள், தேவைகள் குறித்து அவர்களே முடிவெடுக்க வேண்டும் என்று சொல்கிறது இந்தப் படம்.
பாரம்பரிய ஒழுக்கத்தில் நம்பிக்கை கொண்ட இஸ்லாமிய பெரியவர் கிட்டி, தன் மகள் ஐஸ்வர்யா ராஜேஷையும் அம்முறையிலேயே வளர்த்து ஜித்தன் ரமேஷுக்கு திருமணம் செய்து வைப்பதுடன், எல்லோரும் கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்து வருகின்றனர்.
மூன்று குழந்தைகளைப் பெற்ற நிலையில் ஜித்தன் ரமேஷுக்கு கல்வி, தொழில் எதிலும் பயிற்சி இல்லாத காரணத்தினால் கிட்டியின் செருப்புக் கடையை மட்டுமே கவனித்து வர குடும்பம் வறுமையில் தள்ளாடுகிறது.
இந்நிலையில் படித்த ஐஸ்வர்யா ராஜேஷ் வேலைக்கு போக முடிவெடுக்க முதல் தடை அவரது தந்தையின் மூலமாகவே வருகிறது. அந்தத் தடையை அகற்றி அவர் பணிக்கு செல்ல முடிவெடுக்கையில் அதன் விளைவுகள் எப்படி அந்தக் குடும்பத்தை ஆட்டி வைக்கின்றன என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
வழக்கமான கதாநாயகி, வழக்கமான காதல் என்றெல்லாம் ஒத்துக்கொள்ளாமல் வித்தியாசமாக ஏதாவது இருந்தால் என்னிடத்தில் வாருங்கள் என்று படத்துக்குப் படம் தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இந்தப் படம் இன்னொரு ‘கிலோ மீட்டர் கல்’ என்றே சொல்லலாம்.
படம் முழுக்க பர்தா அணிந்து கொண்டு வரும் அவர், இது திரைப்படம் என்பதை மீறி ஒரு இஸ்லாமியப் பெண்ணாகவே நம்மை உணர வைக்கிறார். தனக்கு வேலை கிடைத்து விட்டது என்கிற சந்தோஷத்தைக் கூட பகிர்ந்து கொள்ளத் தெரியாத அப்பாவியாக இருக்கும் அவர், ஒவ்வொரு சூழலாக உலகத்தைப் புரிந்து கொள்ளும் உணர்ச்சி நிலைகளை அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
கால் சென்டர் வேலைக்குச் சேரும் அவர் அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு, ஆண்களுடன் உணர்வுகளைப் பரிமாறும் அடல்ட் சாட்டுக்கு மாறிப் படும் அவஸ்தைகள் அவரைவிட நம்மைச் சுடுகின்றன.
தனக்கு என்ன வேண்டும் என்பதைக் கூட யோசித்திராத அவர் முதன்முதலாக தன் மனதை வருடும்… தன்னை நட்பாய் நேசிக்கும் ஒரு குரலைக் கேட்டு மயங்கி விடுவது ஏற்கக் கூடியதே. ஆனால் அந்தக் குரலுக்கு உரியவரை நேரில் பார்க்க வேண்டும் என்று அவர் முடிவு எடுக்கும் போதுதான் அவரை விட நமக்குப் பதறுகிறது.
அந்த ஒரு காரணத்துக்காகவே பண்டிகை அன்று வீட்டில் பொய் சொல்லி அந்த நபரை சந்திக்க செல்லும்போது அவர் கணவனும் அதைப் பார்த்து பின் தொடர்கையில் , நமக்குத்தான் ‘லப் டப்’ எகிறுகிறது.
இப்படி இந்த ஒவ்வொரு உணர்ச்சி நிலைகளையும் உன்னிப்பாக நமக்கு ஒரு பக்கம் ஐஸ்வர்யா உணர்த்தி விட, இன்னொரு பக்கம் எல்லா உணர்ச்சிகளையும் தன் மனதுக்குள்ளேயே போட்டு ஆழமாக வெளிப்படுத்தும் பாத்திரத்தில் ஜித்தன் ரமேஷ் அசத்துகிறார்.
தன்னையே ‘கையாலாகாதவன் ‘ என்று சொல்லிக் கொள்ளும் ஒரு நாயகன் வேடத்தில் இன்னொரு நாயகனை தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கவே முடியாது.
ஆனால் மனைவி வேலைக்குப் போக முடிவெடுத்ததும் அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமல், குழந்தைகளையும் குடும்பத்தையும் கவனிக்க முடிவெடுப்பதுடன் அவள் தடம் மாறி செல்கிறாளோ என்கிற பதை பதைப்பு ஏற்பட்டாலும் ஒரு சொல் கூட அவளை எதிர்த்து கேட்காத பாங்கிலும் ஒரு சிறந்த ஆண்மகனாகவே தெரிகிறார் ரமேஷ்.
இவர்கள் இருவரையும் தன் அனுபவ நடிப்பினால் தூக்கி சாப்பிடுபவர் கிட்டிதான். ஒரு உண்மையான இஸ்லாமியரையே நடிக்க வைத்திருந்தால் கூட அந்தப் பாத்திரத்தில் இப்படி பொருந்திப்போக முடியுமா என்பது தெரியவில்லை.
காலமாற்றத்தோடு ஒத்துப்போக முடியாத பாரம்பரிய வழக்கத்தில் வந்த அவர் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதை அந்த நடிப்பிலேயே வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் படம் விருதுகளுக்கு தகுதியாகும் போது இவருக்கு ஒரு விருது நிச்சயம்.
முகம் தெரியாத வில்லனாக முக்கால்வாசிப் படத்துக்கு வருபவரை ஒரு கட்டத்தில் நாம் கவனித்து அடையாளம் கண்டு விடுகிறோம். கடைசி ஒரு சில காட்சிகளில் மட்டுமே முகம் தெரிய ஒத்துக் கொண்ட அந்த நடிகரின் தைரியமும் பாராட்டத்தக்கது.
ஐஸ்வர்யாவின் அலுவலக தோழிகளாக அனுமோளும், ஐஸ்வர்யா தத்தாவும். ஊக்கத்தொகை அதிகமாக கிடைக்கும் காரணத்திற்காக ஐஸ்வர்யா லைவ் சேட்டுக்கு வர முடிவெடுத்தாலும் அவரைப் பற்றி நன்கு அறிந்த அனுமோள் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே அவரை எச்சரித்து இருக்கலாம்.
அதேபோல் ஒரு பக்கம் பெண்ணுரிமையை முன்னிறுத்திவிட்டு ஐஸ்வர்யா தத்தாவைப் போன்று நாகரிகத்தில் மூழ்கி விடுபவர்களின் முடிவு இப்படித்தான் ஆகும் என்பது போன்ற சினிமா ‘ க்ளிஷே’க்களையும் தவிர்த்திருக்கலாம்.
ஜஸ்டின் பிரபாகரனின் இசை இது நேர்த்தியான படம் என்பதை ஜஸ்டிஃபை செய்கிறது. கோகுல் பினோயின் ஒளிப்பதிவு உயரம் தொடுகிறது.
தலைக்கு வந்த ஆபத்து சில அங்குல இடைவெளிகளில் தவறி போய் பெருமூச்சு விடும் போது இனி ஐஸ்வர்யா என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி நமக்கு எழுகிறது. அந்தக் கேள்வியை கவனமாக உணர்ந்து அதை, அவர் வேலைக்குப் போவதையே விரும்பாத கிட்டிக்குக் கடத்தி, ” ஃபர்ஹானா இன்னைக்கு வேலைக்குப் போகலையா..?” என்று கேட்பதாக முடித்திருப்பதில் இயக்குனர் நெல்சன் வெங்கடேசனின் ‘ டச் ‘ தெரிகிறது.
பழமைவாதத்தில் மூழ்கிக் கிடைப்பவரே அந்தக் கேள்வியைக் கேட்டு விடும்பொழுது பர்ஹானாவுக்கு வேறு என்ன தடை இருக்க முடியும்..?
அதேபோல் கிட்டியிடம் அந்த மாற்றம் நிகழ, அவரது கடைக்குப் பக்கத்தில் பழக்கடை போட்டு இருக்கும் குங்குமப் பொட்டுப் பெண்மணியும் காரணமாக இருப்பதிலும் இயக்குனரின் முத்திரை தெரியவே செய்கிறது.
ஃபர்ஹானா – பறக்கத் தடை ஏதும் இல்லை..!
– வேணுஜி