January 26, 2021
  • January 26, 2021
Breaking News
October 17, 2018

எழுமின் விமர்சனம்

By 0 985 Views

உலக அளவிலேயே குழந்தைகளுக்கு நம் திரைப்படங்கள் கற்றுக் கொடுக்கும் ஒரு விஷயம், ‘துன்பம் நேர்கையில் ஒரு ஹீரோ வந்து நம்மைக் காப்பார்…’ என்பதுதான். ஆனால், அந்த மயக்கத்திலிருந்து விடுபட்டு, ‘குழந்தைகள் ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளும் ஹீரோக்கள்தான்…’ என்று முதல் குரலெடுத்து உரக்கச் சொல்கிறது இந்தப்படம்.

விவேகானந்தரின் போதனைகளில் ஒன்றைத் தலைப்பாகக் கொண்டிருக்கும் படத்தில் அப்துல்கலாமின் அறிவுரைகளும் இடம்பெறுவதுடன் குழந்தைகளுக்கு ‘குட் ஹேபிட்’, ‘பேட் ஹேபிட்’ என்று சொல்லித்தந்து கொண்டிருந்த நாம் இன்று ‘குட் டச், பேட் டச்’ சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் வாழ்வதற்கு என்ன காரணம் என்ற சிந்தனையுடன் படத்தைத் தொடங்குகிறார் இயக்குநர் வி.பி.விஜி.

பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கீர்த்திகா, தீபிகா ஆகிய ஆறு பள்ளிக் குழந்தைகள்தான் நாயக, நாயகியர். பள்ளியில் படித்துக் கொண்டிருப்பதுடன் ஒவ்வொருவருக்கும் அமைந்த வித்தியாசமான வாழ்க்கைச் சூழலில் தற்காப்புக் கலைகளைக் கற்றுத் தேறும் ஒரு விஷயத்தில் ஒன்றுபட்டிருக்கிறார்கள்.

இவர்களை அகில இந்திய அளவில் பரிசுகள் பெற வைக்கும் நோக்கில் ஒரு சிறுவனின் அப்பாவான விவேக் ஊக்க சக்தியாக இருக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் விவேக்கின் மகன் இறந்துபோக, நிலைகுலைந்த விவேக், பின் தீர்மானமாக மற்ற குழந்தைகளின் நலனுக்காகப் பாடுபடுகிறார். ஊக்க சக்தியாக இருந்த அவர் உந்து சக்தியாக மாற்றி அவர்களின் வாழ்வில் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்தார் என்பது படம்.

ஆறு குழந்தைகளையும் எங்கே, எப்படிப் பிடித்தார்களோ… அனைவரும் தற்காப்புக் கலைகளில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். முன் பாதியில் ஒரு சண்டையிலும் கிளைமாக்ஸ் சண்டையிலும் இன்றைய ஹீரோக்களுக்கு நிகராக மட்டுமல்லாமல், அவர்களைத் தாண்டியும் (‘டூப்’ இல்லாமல்) சண்டையிட்டு பரவசப் படுத்துகிறார்கள்.

Ezhumin Review

Ezhumin Review

விவேக்கின் உண்மையாக கேரக்டருக்கும், இதில் நடித்த கேரக்டருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அப்துல் கலாமின் அறிவுரைப்படி வாழ்ந்து வரும் அவர் எதிர்கால சந்ததியினருக்கும் அதைப் பயிற்றுவிக்கும் முகமாகவும், தற்காப்புக் கலைகளின் அவசியத்தை உணர்த்துபவராகவும் நடித்திருக்கிறார் அல்லது வாழ்ந்திருக்கிறார்.

“பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயங்கொள்ளலாகாது பாப்பா… மோதி மிதித்து விடு பாப்பா…” என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப, சரியான தருணத்தில் குழந்தைகளை உந்தி பகைவர்களை அவர்களே வெற்றிகொள்ளத் துணை செய்கிறார்.

இந்தப்படம் முதல் விவேக்கை குழந்தைத் தற்காப்புக் கலையின் விளம்பரத் தூதுவராகவே ஏற்கலாம்.

அவரது மனைவியாக தேவயானி. எத்தனைக் காலம் கழித்துப் பார்த்தாலும் செய்துவைத்த சிலையாக அவர் அப்படியே தெரிகிறார்.

முக்கால்வாசிப் படத்துக்கு வில்லனாக இருக்கும் அழகம்பெருமாள் மூலம் விளையாட்டில் இருக்கும் அரசியலையும் உரசிக் காட்டியிருக்கிறார் இயக்குநர். திறமையாகச் செயல்படும் காவல் அதிகாரியாக வந்தாலும் பிரேம்குமார், கடைசியில் கிளைமாக்ஸ் முடிந்து வரும் போலீஸாகவே ஆக நேர்கிறது.

முன்பாதிக் கதையைவிட பின்பாதியில் றெக்கை கட்டிக் கொண்டிருக்கிறது திரைக்கதை. கணேஷ் சந்திரசேகரின் இசையும், கோபிஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவும் படத்துத் தேவைப்பட்டதைக் கொடுத்திருக்கின்றன.

குழந்தைகளுக்கான படம் என்பது குழந்தைத் தனமானது இல்லை என்று புரியவைத்திருக்கும் இயக்குநருக்குப் பாராட்டுகள். பாட்டு, நடனம் இவற்றில் ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் அதில் ஈடுபட்டால் தப்பில்லை. அவை தெரியாவிட்டாலும் கூட ஒவ்வொரு குழந்தைக்கும் தன்னைக் காத்துக் கொள்ளும் அளவில் தற்காப்புக் கலை தெரிந்திருக்க வேண்டும் என்று அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

அதேபோல் கடைசியில் விவேக் வாய்மொழியாக தற்காப்புக் கலைப் பயிற்சி என்பது பரிசுகள் பெறுவதற்கான தகுதி என்பதைவிட நல் வாழ்வுக்கான வழிமுறையாக இருக்க வேண்டும் என்று உணர்த்துவதும் ‘பலே..!’

இன்றைய உலகுக்கு… முக்கியமாக அடுத்த தலைமுறைக்குத் தேவையான கருத்து சொல்லும் படம் என்னும் அளவில் இந்தப்படத்தை மக்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டியதுடன் மத்திய மாநில அரசுகள் இந்தப் படத்தை கௌரவிக்கவும் வேண்டும்.

எழுமின் – தற்காப்புக் கலை கைவசம் இருந்தால் நீங்களும் ஹீரோதான்..!

– வேணுஜி