November 29, 2021
  • November 29, 2021
Breaking News
November 7, 2021

எனிமி திரைப்பட விமர்சனம்

By 0 30 Views

ஆல் இன் ஆல் தியேட்டர்கள் பிடித்த ‘அண்ணாத்த’ படத்தை எனிமியாக அறிவித்து அதன் மூலம் தீபாவளி ரேஸில் புகுந்த படம் இது. ஆனால், படம் தனக்குத் தானே எனிமியாகப் போனதை படம் பார்த்திராதவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

 
இரண்டு ஹீரோக்கள் ஒன்று சேர்ந்து நடிக்கிறார்கள் என்றால் அந்த ஸ்கிரிப்ட் அத்தனை வலிமை பொருந்தியதாக இருக்க வேண்டும். ஆனால், தாங்கள் ஸோலோ ஹீரோவாக நடிக்கும் படங்களிலேயே நல்ல ஸ்கிரிப்டை இனம் காணத் தெரியாத விஷாலும், ஆர்யாவும்  சேர்ந்து நடிக்கும் படத்துக்கு ஒரு நல்ல ஸ்கிரிப்டை அவர்களால் கண்டு பிடித்துவிட முடியுமா தெரியவில்லை.
 
உடனே சார்பட்டா நல்ல ஸ்கிரிப்ட் இல்லையா என்று யாரும் சட்டத்தை நீட்டி விடாதீர்கள். அது ஆர்யாவாக நாலு கதை கேட்டு அதில் சிறந்தது இதுதான் என்று தேர்ந்தெடுத்த ஸ்கிரிப்ட் இல்லை என்பதை அறிக…
 
படம் ஆரம்பித்து இருபது நிமிடங்களுக்கு 80 களில் படம் பார்க்கும் ஒரு அனுபவம். அடுத்தடுத்த வீட்டு இரண்டு அப்பாக்கள் பயந்தாங்கொள்ளி தம்பி ராமையாவும், தைரியசாலி பிரகாஷ்ராஜும். தங்கள் பிள்ளைகளை தத்தம் சுபாவத்தின்படி வளர்க்க, அப்பாவுக்குத் தெரியாமல் பிரகாஷ் ராஜிடம் பயிற்சி எடுத்து ஸ்மார்ட்டாகீறான் தம்பி ராமையாவின் மகன். நட்பு கொள்ளும் இந்த இரண்டு பிள்ளைகளும் பிரகாஷ்ராஜ் ஒரு கட்டத்தில் கொல்லப்பட்டதும் பிரிகிறார்கள்.
 
மீண்டும் வளர்ந்து சந்திக்கையில் எதிரிகளாக இருக்கிறார்கள். அது ஏன் என்பதற்கு எந்த சுவாரஸ்யமான காரணமும் இல்லை. விஷால் நல்ல திறமைசாலி என்று தன் அப்பா பிரகாஷ்ராஜ் புகழ்ந்து கொண்டிருந்ததில் ஆர்யாவுக்குப் பொறாமையாம். ஆனால், வளர்ந்ததும் ஆர்யா ஒரு இன்டர்னேஷனல் ஹேக்கராக இருக்க, விஷால் ஒரு அறிவிக்கப்படாத இன்டர்போல் ஆபீசர் போல் தன்னிச்சையாக செயல்பட்டுக் கொண்டிக்கிறார். எதுவுமே நேஷனல் லெவல் இல்லை. எல்லாமே இன்டர்நேஷனல் லெவல்தான்.
 
ஆனால், இது நம் லோக்கல் ஆடியன்ஸுக்குப் புரியவேண்டுமே..? அதனால் ட்ரீட்மென்ட்டை படு லோக்கலாக யோசித்து தன் திறமையை இறக்கியிருக்கிறார் ஆனந்த் ஷங்கர். 
 
அது எப்படி என்பதற்கு ஒரே ஒரு உதாரணம். சீனப்பொருள்களை இந்தியாவில் விற்கத் தடை வர, அதற்குக் காரணமான நேர்மையான வெளியுறவுத்துறை அமைச்சர் மாளவிகாவை தீர்த்துக்கட்டும் அசைன்மென்ட் ஆர்யா கைக்கு வருகிறது. சிங்கப்பூர் வரும் இதய நோயாளியான மாளவிகாவுக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டிருக்க, அதை வெளியிலிருந்தே கம்ப்யூட்டர் மூலம் ஹேக் செய்து அவரைக் கொல்ல ஆர்யா திட்டமிடுகிறார்.
 
அதை முறியடிக்கும் நோக்கில் விஷால் செய்யும் காரியம் என்ன தெரியுமா..? பாதுகாப்புக்கு வந்திருக்கும் ஒரு கமாண்டோவின் துப்பாக்கியைப் பிடுங்கி மாளவிகாவின் நெஞ்சுக்குக் குறிவைத்து அந்த பேஸ்மேக்கரைச் சுட்டு நொறுக்கி அதை செயலிழக்கச் செய்கிறார். 
 
ஆனால் மாளவிகாவை விஷால்தான் கொல்ல முயற்சித்ததாக சிங்கப்பூர் போலீஸ் பிடித்துக்கொண்டுபோய் மின்சார நாற்காலியில் வைத்து ஷாக்கெல்லாம் கொடுத்து விசாரணை நடத்துகிறார்கள். அப்போதாவது மனிதன் வாயைத் திறந்து கொலை முயற்சியை முறியடிக்கத்தான் சுட்டேன் என்று ஒரு வார்த்தை சொல்ல வேண்டாமா..? அதை நீங்க இன்னும் ரெண்டு நிமிஷத்துல தெரிஞ்சுக்குவீங்க… என்றபடி அத்தனை வோல்ட் ஷாக்கையும் வாங்கிக் கொள்ள, இரண்டு நிமிடம் கழித்து போலீசுக்கு  மாளவிகாவுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர் போன் செய்கிறார்.
 
அதில் மாளவிகாவின் உயிரைக் காப்பாற்றி விட்டோம் என்று சொல்வதுடன், “சுட்டவன் அவரைக் கொல்வதற்காக சுடவில்லை. அவரைக் காப்பாற்றத்தான் சுட்டிருக்கிறான்..!” என்று புலனாய்வு ரிப்போர்ட்டும் தருகிறார். சிங்கப்பூர் மருத்துவமனை டாக்டருக்கு இந்திய அமைச்சரைக் காப்பாற்றுவதைக் காட்டிலும் விஷாலைக் காப்பாற்றுவதுதான் முக்கியமாக இருக்கிறது.
 
கொலை முயற்சிக்கு ஆளானவருக்கு சிகிச்சை செய்யும் டாக்டர் எப்படி கொலை முயற்சியை விசாரணை செய்யும் அதிகாரியை சட்டரீதியாக நேரடித் தொடர்பு கொள்ள முடியும்..? அப்படித் தொடர்பில் வந்தாலும் சிகிச்சை பெறுபவரின் உடல்நிலை பற்றித்தான் சொல்ல முடியுமே தவிர, அவர் மீதான கொலை முயற்சி பற்றியோ, அந்தக் கொலை முயற்சி செய்தவர் நல்லவர்தான் என்றெல்லாம் சொல்ல முடியுமா என்ன.? அவர் நற்சான்றிதழ் கொடுப்பதால் அதை போலீஸ்தான் ஏற்றுக் கொள்ளுமா..?
 
அதேபோல் சிங்கப்பூரில் கிட்டத்தட்ட ஒரு ஸ்பைடர்மேன் போல் உயர உயரமான கட்டடங்களைக் கடந்து விஷால் சதிகாரர்களைப் பந்தாடிக் கொண்டிருக்க, தம்பி ராமையா மட்டும் தன் பிள்ளை சாதுவாக மளிகைக் கடையைக் கவனித்துக் கொண்டிருப்பதாகவே நினைப்பதெல்லாம் பண்டல் வகையறா. அப்படி ஒரு மிஷனில் விஷால் ஈடுபட்டுக் கொண்டிருக்க, அவருக்கு போன் செய்யும் தம்பி ராமையாவிடம் தான் கடைக்குப் பால் வாங்க வந்தேன் என்று சொல்ல, தம்பி ராமையாவும் நம்புகிறாராம். 
 
சினிமாவில் பிலிம் ரீல்கள் வழக்கொழிந்தும் இவர்கள் விடும் ரீல்களைத் தாங்க முடியவில்லை. இப்படியேதான் லாஜிக்குக்கும், அறிவுக்கும் பொருந்தாமல் போய்க்கொண்டிருக்கிறது முழுப்படமும்.
 
ஊட்டி, சிங்கப்பூர் என்று கதை நகரும் களத்தில் ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு பிரமாண்டமாக இருப்பதை மறுப்பதற்கில்லை. சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசையும், தமனின் இசையும் பாடல்களும் நேர்த்தியாகவே இருக்கின்றன. 
 
ஆங்கிலத்தில் டைட்டில், ஹாலிவுட் படம் போன்ற படப்பிடிப்பு, கண்களைக் கவரும் லொகேஷன்கள், இசை என்றெல்லாம் திட்டமிடும் தமிழ் இயக்குநர்கள் ஸ்கிரிப்ட் என்று வரும்போது மட்டும் இதெல்லாம் தமிழ் ரசிகர்களுக்குப் புரியாது என்று மொக்கையான திரைக்கதையையும் காட்சிகளையும் எப்படித் திட்டமிடுகிறார்கள் என்பதுதான் காலம் காலமாகப் புரியவில்லை.
 
இத்தனைக்கும் உலகில் வெளியாகும் அத்தனை விதமான படங்களையும் வெளியாகும் நாளிலேயே நம்மால் பார்த்துவிட முடிகிறது, ஹாலிவுட் படங்களும் இங்கே நன்றாக ஓடுகின்றன எனும்போது நம் ஸோ கால்டு ஹீரோக்களும் எப்படி இப்படி முனை மழுங்கிய ஸ்கிரிப்டுகளில் நடிக்க ஒத்துக்கொள்கிறார்கள் என்பதுவும் புரியவில்லை.
 
படம் தொடங்கும் ஊட்டி எபிசோடில் நம்மூர் போலீஸைத்தான் நக்கலடிக்கிறார்கள் எண்று பார்த்தால் சிங்கப்பூர் போலீஸையும் கையாலாகாதவர்களாகக் காட்டி ரொம்பவே லந்து செய்கிறார்கள். சிங்கப்பூர் போலீஸில் அதிகாரியாக இருக்கும் மாரிமுத்து, விஷால் தன்னிச்சையாகக் கொண்டு வரும் கேஸ்களில் அக்கறை காட்டுவதுடன், அந்த கேஸ் பற்றி விஷாலுடன் டிஸ்கஸ் பண்ணவும் செய்கிறார்.
 
திரைக்கதையே இவ்வளவு காமெடியாக அமைந்து விட்டதால் தம்பி ராமையாவும், கருணாகரனும் அவ்வப்போது நம்மைச் சிரிக்க முயற்சிப்பது எடுபடவில்லை.
 
ஆர்யாவும், விஷாலும் யார் ஒருவரை விட ஒருவர் சுமாராக நடிப்பது என்பதில் போட்டி போடுகிறார்கள். நாயகியராக விஷாலுக்கு மிருணாளினி ரவியும், ஆர்யாவுக்கு மம்தா மோகன் தாஸும் ஜோடி போட்டு அவ்வப்போது வந்து போகிறார்கள். ஹீரோக்களுக்கே நடிக்க வாய்ப்பில்லை எனும்போது இவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டியதில்லை.
 
விஷாலை இந்தப்படத்தில் துன்பத்துக்கே நேர்ந்து விட்டாற்போலிருக்கிறது. இதற்காகத்தான் மத்திய மந்திரியை சுட்டேன் என்று ஒற்றை வரியில் சொல்லாமல் மின்சார நாற்காலியில் ஷாக் வாங்குபவர், கிளைமாக்ஸில் விஷால்தான் தன் காதலியைக் கொன்றார் என்று நினைக்கும் ஆர்யாவிடம் தான் கொல்லவில்லை என்று ஒற்றை பதிலைச் சொல்லாமல் ஆர்யாவின் உச்ச பட்ச கோபத்துக்கு ஆளாகி கடைசியில் அது ஒருவரை ஒருவர் கொல்வது வரை போகிறது.
 
கிளைமாக்ஸ் சண்டையிலும் விஷால், “நீ கோபத்தால் மட்டுமே எல்லாவற்றையும் இழக்கிறாய்…” என்று ஆர்யாவுக்குப் புரிய வைத்தாலும், அவர் உயிர் போகும் நேரத்தில் அதைப் புரிந்து கொண்டு தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று மன்றாடும் வேளையில் அவரைக் கைவிட்டுக் கொல்கிறார். பழிக்குப் பழியாம். அப்புறம் எதற்கு படம் முழுதும் நான் உன்னை நண்பனாதான் நினைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்..? என்ன ஹீரோயிசமோ..?
 
“நான் மேலே வரும்போதெல்லாம் நீ வந்து அதைக் கெடுக்கறியே..?” என்று ஓரிடத்தில் விஷாலைப் பார்த்து ஆர்யா சொல்லும்போது அது பட வசனம் என்பதைத் தாண்டி சமீபத்தில் வெளியான சார்பட்டா வெற்றிப்படம் நம் நினைவுக்கு வந்து அதை உண்மையென்றே நம்ப வைக்கிறது. அதேபோல் ஆர்யாவுக்கு பாஸ் என்கிற பாஸ்கரன் வெற்றிப்படம் அமைந்தபோது விஷாலுடன் அவர் அவன் இவன் படம் வெளியானதும் நினைவுக்கு வருகிறது.
 
கதை விடுவதை நூல் விடுவது என்று லோக்கலாகச் சொல்வார்கள். அந்த வகையில்…
 
எனிமி – நூல் கண்டு..!