November 22, 2024
  • November 22, 2024
Breaking News
May 18, 2024

எலக்சன் திரைப்பட விமர்சனம்

By 0 324 Views

தமிழ் சினிமாவில் அரசியலை மையமாகக் கொண்ட படங்களுக்கு வரவேற்பு அதிகமாகவே இருந்திருக்கிறது. சமீப காலமாக உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படங்களில் இதுவும் ஒன்றாக அமைகிறது.

அத்துடன் அரசியல் என்றாலே அதில் உள்ளடி வேலைகளும் துரோகமும் நிறைந்திருப்பதை அரசர்கள் காலம் முதல் இன்று வரை நாம் பார்த்து வருகிறோம். அப்படி ஒரு களமாகக் கொண்டு இந்த படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் தமிழ்.

அதேபோல் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அடித்தளமாக அமைவது அப்பாவித் தொண்டர்களின் கடின உழைப்புதான். எந்தப் பதவிக்கும், புகழுக்கும் ஆசைப்படாமல் அவர்கள் உழைக்கும் உழைப்புதான் கட்சித் தலைவர்களை உயரத்தில் வைத்திருக்கிறது. அந்த விஷயத்தைத் தமிழில் முதல் முறையாக இந்த படத்தில் தொட்டு காட்டி இருப்பதைப் பாராட்டலாம்.

அப்படி ஒரு கட்சியின் நாற்பது ஆண்டுகால தீவிர அடிமட்டத் தொண்டராக வேலூர் மாவட்டம் நல்லூரைச் சேர்ந்த ஜார்ஜ் மரியான் இருக்கிறார். அரசியல் காரணங்களுக்காக அவரது நெருங்கிய நட்பிலும் பிரிவு ஏற்பட அடுத்து நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஜார்ஜ் மரியான் மகனான நாயகன் விஜயகுமார் தலைவர் பதவிக்கு நிற்கிறார்.

அவர் சொற்ப வாக்குகளில் தோற்றுப் போக, அந்தத் தோல்வியால் அரசியல் மீது வெறுப்பு கொள்கிறார். இருந்தாலும் புலி வாலைப் பிடித்த கதையாக அரசியலைத் தொட்டுவிட்ட அவர் எப்படிப்பட்ட துரோகங்களை சந்திக்கிறார் என்பதுதான் மீதிக் கதை.

2006 முதல் 2016 வரையான மூன்று தேர்தல் காலக் கட்டக் கதை என்பதால் நடப்பு அரசியலோடு பொருத்திக்கொண்டு படத்தைப் பார்க்க முடிகிறது. 

சமீபகாலப் படங்களை நிறைய நம்பிக்கை வைக்கக்கூடிய நாயகனாக வளர்ந்து வரும் விஜயகுமார் இந்த படத்திலும் ஒரு அழுத்தமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

வலுக்கட்டாயமாக அரசியலுக்குள் வரும் அவர் அந்த காரணத்தாலேயே காதலியைத் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போய் சந்தர்ப்பவசத்தால் ப்ரீத்தி அஸ்ரானியைத் திருமணம் செய்து கொள்கிறார்.

பழைய காதலை மறப்பது, அரசியலில் படிப்படியாக முன்னேறுவது, தோல்வியால் பாதிப்படைந்து அரசியலை விட்டு ஒதுங்க நினைப்பது, அப்படியும் அரசியலில் துரோகங்கள் துரத்த சீற்றம் கொண்ட இளம் அரசியல்வாதியாய் தான் ஏற்றுக்கொண்ட  கதாபாத்திரத்தில் தன்னைப் பொருத்திக்கொண்டு இயல்பாக… ஆனால் ஈர்ப்பாக நடித்திருக்கிறார் விஜயகுமார்.

கணவனின் ஆசைகளுக்கு உறுதுணையாக நிற்கும் நாயகி ப்ரீத்தி அஸ்ரானியின் நடிப்பும் நன்று.

இன்னொரு கதாநாயகி ரிச்சா ஜோஷியும் பிரீத்தியைப் போன்றே தன் பாத்திரத்தை இரண்டில் ஒன்றாகப் பிரித்துக் கொண்டு நிறைவடைகிறார்.

விஜயகுமாரின் தாய்மாமனாக வரும் பாவல் நவகீதன், நம்பிக்கை துரோகியாக வரும் திலீபன் இவர்களும் தங்களது நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார்கள். 

கட்சிக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைக்கும் அப்பாவித் தொண்டராகவே வாழ்ந்திருக்கிறார் ஜார்ஜ் மரியான். 

காதல் படங்களில் கவனிக்க வைக்கும் கோவிந்த் வசந்தா இந்த அரசியல் பின்னணிப் படத்தில் பாடல்களை விட பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

மகேந்திரன் ஜெயராஜுவின் ஒளிப்பதிவு வேலூர் மாவட்டத்தை இயல்பாகப் பதிவு செய்திருக்கிறது.

பெரும்பாலும் தமிழகத்தில் அரசியல் சார்ந்த தொண்டர்களின் குடும்பமே அரசியலுக்குள் இருக்கும். அந்த வாழ்க்கையைச் சொல்ல முடிவெடுத்திருக்கும் இயக்குனரின் எண்ணம் பாராட்டத்தக்கது. 

முன்பாதி படத்தை விட பின் பாதிப் படம் பரபரப்பாக நகர்வது பலம்.

எலக்சன் – நல்ல ரிசல்ட்டை எதிர்பார்க்கலாம்..!