May 4, 2024
  • May 4, 2024
Breaking News
August 22, 2019

பிக் பாஸ் நிகழ்ச்சியால் ஒரு பலனும் இல்லை – அமீர்

By 0 729 Views

பல இயக்குநர்கள், நடிகர்களுக்கு முகவரி கொடுத்த ராவுத்தர் பிலிம்ஸின் பிரம்மாண்ட படைப்பு ‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் படத்தைச் சார்ந்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:-

இயக்குநர் கே.பாக்யராஜ் –

“எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ என்ற தலைப்பைப் பார்க்கும்போது, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை மேல இருக்கறவன் பாத்துப்பான் என்று விடாமல், அறிவியல் புனைக்கதையை வைத்துத் தமிழில் படமெடுக்க வேண்டுமென்று தயாரிப்பாளரும், இயக்குநரும் மெனக்கெட்டு முயற்சி எடுத்திருக்கிறார்கள் என்று ட்ரைலர் பார்க்கும்போது தெரிகிறது. ஆரியும் சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல், மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் கடின உழைப்பும் தெரிகிறது..!”

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் –

“திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தவர்கள் இப்ராஹிம் ராவுத்தரும், விஜயகாந்த் அவர்களும் தான். இன்று அவரில்லாமல் அவருடைய மகன் முகமது அபுபக்கர் தலைமையில் இந்த விழா நடக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள். கவிராஜ் இம்மாதிரி படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கவில்லை..1”

இயக்குநர் அமீர் –

இப்ராஹிம் ராவுத்தர் மிக எளிமையான மனிதர். அவர் இன்று இருந்திருந்தால் இந்த அரங்கத்தில் எவ்வளவு பெரிய மனிதர்கள் இருந்திருப்பார்கள். மேடை நிறைந்திருக்கும். அப்படிப்பட்ட இந்த நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரித்திருக்கிறது. விஜயகாந்திற்கு ‘கேப்டன்’ என்று பெயர் வைத்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாக அவரை செதுக்கியவர் ராவுத்தர். அப்படி இருந்த நண்பர்கள் ஏன் பிரிந்தார்கள்? சினிமா அவர்களைப் பிரித்து விடும். அதேபோல் தான் நானும் பாலாவும். ஆகவே, நன்றியுள்ள சமுதாயத்தை உருவாக்குவோம்.

மேலும், ஜீவி இல்லாத சினிமா என்பதே இல்லை என்று ஒரு காலம் இருந்தது. அப்படிப்பட்ட அவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துக் கொண்டார். அதுதான் சினிமா.

எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றியைப் பேசுவது பிடிக்காது. இருந்தாலும், சேரன் அந்த நிகழ்ச்சியில் இருப்பதால் பேசுகிறேன். அவரை நான் பிரமிப்பாக பார்ப்பேன். ‘ஆட்டோகிராஃப்’ படத்திற்கு பிறகு லயோலாவில் ஒரு விழாவிற்கு வருகை தந்த வேளையில் இரண்டாயிரம் பேர் எழுந்து நின்று கைத்தட்டினார்கள். அந்த மரியாதைக்குரிய மனிதர் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரின் நிலைமையைப் பார்த்ததும் கதவை உடைத்து அவரைத் தூக்கிக் கொண்டு வரவேண்டும் போலிருந்தது. அந்த நிகழ்ச்சியை நான் பார்த்தது கிடையாது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும்தான் பார்த்தேன். மேலும், அந்த நிகழ்ச்சியினால் சமுதாயத்திற்கு எந்த ஒரு பயனும் கிடையாது..!

இயக்குநர் யு.கவிராஜ் –

நான் சின்னத்திரையில் இருந்து வந்தவன். என் சேனல் சன் டிவிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ராவுத்தர் பிலிம்ஸ்-ன் அபுபக்கர் கதை கேட்டதும் என் மேல் நம்பிக்கை வைத்து வாய்ப்புக் கொடுத்தார். அவரின் தந்தை இப்ராஹிம் ராவுத்தர் 1980, 90 களில் வெற்றிகரமான தயாரிப்பாளராக இருந்தார். அதேபோல அபுபக்கரும் வெற்றிபெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

ஆரியிடம் கதைக் கூற சென்றேன். பாதி கதையைக் கூறிக் கொண்டிருக்கும்போதே என் வீட்டில் இருந்து ஒரு போன் வந்தது. அதைப் புரிந்துக் கொண்டு மீதிக் கதையை பிறகு கேட்கிறேன் செல்லுங்கள் என்று என்னை அனுப்பி வைத்தார். மறுநாளே நடிப்பதற்கு ஒப்புக் கொண்டார். அவர் மிகவும் நல்ல மனிதர்.

இயக்குநர் அமீருடன் மேடையில் இருப்பதில் பெருமையடைகிறேன்.

நடிகர் ஆரி –

“அறிவியல் புனைகதைகள் மற்றும் ஏலியன் சார்ந்த விஷயத்தைப் படமாக்க ஹாலிவுட்டில் ரூ.1000/- கோடி செலவு செய்வார்கள். ஆனால், நாங்கள் அந்த தரத்திற்கு இணையாக EFX என்று சொல்ல கூடிய கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் ஒரு வருடம் உழைத்திருக்கிறோம்.

அபுபக்கரின் கதாபாத்திரம் அவர் இயல்பு போலவே அமைந்திருக்கிறது. அவர் மூலம் இன்னும் பல இயக்குநர்கள் உருவாவார்கள் என்பதில் ஐயமில்லை. என் குழந்தையை அமைதியாக்கி விட்டார் இயக்குநர் அமீர். அந்த யுக்தியை கையாண்டு சட்டசபையிலும் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும்..!”

நிகழ்ச்சியின் இறுதியில், இயக்குநர் கே.பாக்யராஜ் இசை தகட்டை வெளியிட்டார்.