விருகம்பாக்கம் வெங்கடேசன் நகரைச் சேர்ந்தவர் நரேஷ். திரைப்பட நிறுவன பங்குதாரரான இவருக்கு 2016-ல் இவரது நண்பர் மூலம் சாலிகிராமத்தில் வசிக்கும் திரைப்பட இயக்குநர் வடிவுடையான் அறிமுகமானார்.
வடிவுடையான் சமீபத்தில் வெளியான சவுகார்பேட்டை உள்பட சில தமிழ்ப்படங்கள் இயக்கியவர். சன்னி லியோன் தமிழில் கால் பதித்த வீரமாதேவி என்ற சர்ச்சை படத்தை இயக்க தொடங்கியவர். அதுவும் எடுத்து முடியவில்லை.
ஆனால் இப்போதைய விஷயம் வேறு. நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்கப் போவதாகவும், விஷாலின் கால்ஷீட் வாங்கியிருப்பதாகவும் மேற்படி நரேஷ்ஷிடம் தெரிவித்தாக கூறப்படுகிறது.
மேலும் விஷால், கால்ஷீட் வழங்கியிருப்பதாக ஒரு போலியான பத்திரத்தைக் காட்டியுள்ளார். இதைப் பார்த்து நம்பிய நரேஷ், விஷால் மூலம் படம் எடுக்க சம்மதித்துள்ளார். உடனே வடிவுடையான், நரேஷிடமிருந்து ரூ.47 லட்சம் பணத்தை வாங்கியுள்ளார்.
ஆனால் திரைப்படம் எடுப்பதற்குரிய எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து நரேஷ், வடிவுடையான் குறித்தும், விஷால் கால்ஷீட் குறித்தும் விசாரித்துள்ளார். அப்போது வடிவுடையான் ஏமாற்றியிருப்பதும், விஷால் கால்ஷீட் கொடுக்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து தான் கொடுத்த பணத்தை நரேஷ், வடிவுடையானிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை வழங்காமல் இழுத்தடித்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த நரேஷ், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வடிவுடையானை நேற்று கைது செய்தனர்.