இந்தப் படம் எந்த ஜேனரைச் சேர்ந்தது என்று எவராலும் கண்டுபிடிக்க முடியாது. துப்பறியும் கதையாக தொடங்கி ஹாரர் படமாக முடியும் இது போன்ற ஒரு படம் தமிழில் வந்ததில்லை என்று சொல்லலாம்.
அருள்நிதிக்கு என்றே கதைகளை மூளையை கசக்கி எழுதி இருப்பவர்களில் இந்தப் பட இயக்குனர் இன்னாசி பாண்டியன் ஒரு புது ரகம்.
அருள் நிதி அவரது வழக்கப்படியே உதவி ஆய்வாளராக வந்தாலும் முடிவு பெறாத கேஸ் ஒன்றை அவர் கையாள நேரும் போது அவருக்கு ஏற்படும் அமானுஷ்ய அனுபவங்கள்தான் இந்த படம்.
அந்தக் கேஸ் விஷயமாக கிளம்பும் அவரது காரை லோக்கல் திருடன் ஒருவன் திருடி விட, அவனைத் தேடிச் செல்லும் வழியில் இரவில் ஒரு பஸ்ஸில் பயணம் செய்ய நேர்கிறது. அது ஒரு அமானுஷ்ய பஸ் என்று தெரிய வர, என்ன ஆகிறது என்பது மீதி.
அந்த அமானுஷ்யக் கதைக்குள் அருள் நிதிக்கு தன் வாழ்க்கை குறித்த புதிருக்கும் விடை கிடைக்கிறது.
தன் வழக்கப்படியே மிடுக்காக வருகிறார் அருள்நிதி. தான் பயணிக்கும் பஸ் அமானுஷ்யமானது என்று தெரிய வரும்போது அதை அவர் எதிர்கொள்ளும் நடிப்பு பாராட்டும் படியாக இருக்கிறது. இந்தப்படத்தில் மூன்று முக்கிய பெண்கள் வந்தாலும் யாரும் அவரைக் காதலிக்கவில்லை.
நாயகியாக வரும் பவித்ரா மாரிமுத்துவுக்கு அருள் நிதிக்கு ஈடான ஆக்ஷன் ஓபனிங் கொடுத்துவிட்டு பிறகு அமைதியாக்கி விட்டார் இயக்குனர்.
பஸ்சுக்குள் வைத்தே திருமணம் புரியும் இலம்பெண்ணும் பஸ்ஸில் பயணிக்கும் மாணவியும் நாயகியை விட அதிகமாகக் கவர்கிறார்கள்.
பஸ்சுக்குள் இருக்கும் எல்லோர் மீதும் சந்தேகப் பார்வை வைக்கும் அந்த மூதாட்டி யின் எக்ஸ்பிரஷன்கள் அற்புதம். அவரது பயமே அவரது உயிரைக் காப்பாற்றி விடுகிறது.
அமானுஷ்யத்துக்குள் ஒரு அம்மா பிள்ளை சென்டிமென்ட்டும் இருப்பது மனத்தைத் தொடுகிறது. ஆனால், இந்த அமானுஷ்யங்கள் தொடர் சம்பவங்கள் ஆகும்போது அருள் நிதி அவரது பெற்றோரை சந்திப்பது போல் கிளைமாக்ஸ் அமைந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
ரான் ஈத்தன் யோஹனின் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை முந்துகிறது. அரவிந்த் சிங்கின் கேமரா எது நிஜம், எது செட், எது கிராபிக்ஸ் என்று அடையாளம் காட்டாமல் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.
முதல் பாதி வேகம் குறைவாக நகர்ந்தாலும் பதைபதைக்க வைக்கும் பின் பாதி அதைச் சமன் செய்கிறது.
ஏதோ ஒரு கொரியப் படம் பார்க்கும் உணர்வு நமக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை.
டைரி – எல்லாக் காலத்திலும் புரட்டிப் பார்த்து ரசிக்கலாம்..!