November 22, 2024
  • November 22, 2024
Breaking News
July 22, 2022

தேஜாவு திரைப்பட விமர்சனம்

By 0 692 Views

இல்லாததை இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டிருக்கும் பல உளவியல் கதாபாத்திரங்களை நாம் படங்களில் பார்த்திருக்கிறோம். அப்படி ஒரு ஆரம்பம் இந்த படத்திலும் இருக்கிறது.

காவல் நிலையத்துக்கு வரும் ஒரு எழுத்தாளர், தான் எழுதும் கதையில் வரும் பாத்திரங்கள் தன்னை மிரட்டுவதாகவும் அவர்களிடமிருந்து பாதுகாப்பு கேட்டும் புகார் ஒன்றை அளிக்கிறார். அந்தப் புகாரைக் கேட்டு காவல் நிலையம் சிரிக்கிறது. ஆனால் மறுநாள் காலையில அவர் வீட்டுக்கு வரும் போலீஸ் காணாமல் போன ஒரு பெண்ணைப் பற்றிய ஒரு கேஸ் விஷயமாக அவரை விசாரணை செய்கிறது. ஆனால் அந்தப் பெண்ணுக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும் அந்தப் பெண் காணாமல் போன போதுதான் அப்படி ஒரு கதையையே எழுதி இருக்கிறார் என்பதும் தெரிய வருகிறது.
 
இப்படி ஒரு ஆர்ப்பாட்டமான தொடக்க காட்சியை வைத்து அந்தக் காட்சியிலேயே நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறார் அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன். 
 
தொடர்ந்து அந்த எழுத்தாளர் அந்தக் கதையை எழுத எழுத அப்படியே நிஜத்திலும் நடந்து கொண்டிருக்க, போலீஸ் மட்டுமில்லாமல் படம் பார்க்கும் நாமும் அதிர்ச்சி அடைகிறோம். அத்துடன் காணாமல் போன பெண் வேறு யாரும் அல்ல தமிழக டிஜிபி மதுபாலாவின் மகள் ஸ்மிருதி வெங்கட் தான் அவர்.
 
அதனால் இந்த விஷயத்தில் போலீஸ் கொஞ்சம் கெடுபிடியாக நடந்து கொள்ள இந்த விஷயம் மீடியாக்களில் லீக் ஆகி மேலிட அழுத்தம் ஏற்பட்டு, டிஜிபி தன் துறை சாராமல் தனியாகவே தன் மகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. அதற்காக தனியே, ஒரு காவல் அதிகாரியான அருள் நிதியை நியமிக்கிறார்.
 
இந்த வழக்கை அருள்நிதி எப்படி கையாண்டு முடிக்கிறார் என்பதை விறுவிறுப்பாக சொல்லி முடிக்கிறார் இயக்குனர் அரவிந்த்.
 
படத்தில் கதாசிரியராக வருகிறார் அச்யுத் குமார். படத்தின் பெரும்பாலான காட்சிகளில் ஒரு குடிகாரராக வருவதால் அவரை நிதானமாக பார்ப்பதே அரிதாக இருக்கிறது. எழுத்தாளர் வேடத்துக்கு மெத்த பொருத்தமாக இருக்கும் அவருக்கு எம்.எஸ் பாஸ்கர் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். அதனால் கண்ணை மூடிக்கொண்டு படத்தை பார்த்தால் படத்தில் எம். எஸ்.பாஸ்கர் நடிப்பது போல்தான் இருக்கிறது.
 
அருள்நிதிக்கு இருக்கும் தைரியத்தை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை. வித்தியாசமான வேடம் கிடைத்தால் வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல் படத்தை ஒத்துக் கொண்டு விடுகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி இல்லை, டூயட் இல்லை, விழுந்து புரளும் சண்டைக் காட்சிகள் இல்லை. ஆனாலும் அவரே படத்தை தலைமை ஏற்றுச் செல்வதுடன் தன் பங்களிப்பையும் சரியாக செய்திருக்கிறார்.
 
ஓங்குதாங்கான உயர்ந்த உடலும் பரந்த தோள்களும், அடர்த்தியான குரலும் அவரை ஒரு போலீஸ் அதிகாரியாகவே நம்மை உணர வைக்கின்றன. இந்தப் படத்தில் படு ஹேன்ட்சம்மாக இருக்கும் அவருக்கு ஒரு ஜோடி கூட இல்லையே என்பது நமக்கு வருத்தமாக இருக்கிறது.
 
டிஜிபியாக வரும் மதுபாலாவுக்கு மிகப் பொருத்தமான பாத்திரம் இது. ஆரம்பத்தில் தன் மகளைக் காணாமல் தேடும் அவரைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் அந்தப் பரிதாபம் நம்மை விட்டு அகன்று போவது திரைக்கதையில் டிவிஸ்ட்.
 
ஸ்மிருதி வெங்கட்டுக்கு சிறிய பாத்திரம்தான் என்றாலும் நிறைவாகச் செய்திருக்கிறார். 
 
காளி வெங்கட்டுக்கு இப்போதுதான் சொந்த ஜாதகத்தில் சுக்கிர திசை வந்திருக்கிறது போலிருக்கிறது. கடந்த வாரம் கார்கி படத்தில்… இந்த வாரம் இந்தப் படத்தில் அசத்தியிருக்கிறார் மனிதர். 
 
இடைவேளை வரை இறக்கை கட்டிக்கொண்டு பறக்கும் திரைக்கதை இரண்டாவது பாதியில் எப்படி எப்படியோ ‘யு டர்ன் ‘ போட்டு முடிவு பெறுகிறது.
 
அவர் எழுதுவது எல்லாம் எப்படி நடக்கிறது என்பது தெரிய வரும்போது இவ்வளவுதானா என்ற அளவில் இருக்கிறது அந்த உத்தி.
 
திரைக்கதைக்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு. அதேபோல் ஜிப்ரானின் இசையையும் சொல்ல வேண்டும். பரபரப்பைக் கூட்டும் பின்னணி இசையுடன் தேவையான இடத்தில் தேவைப்பட்ட உணர்வுடன் பாடல்களைக் கொடுத்து கவர்கிறார் ஜிப்ரான்.
 
படத் தலைப்புக்கான காரணம் என்ன எனபதை  எங்காவது ஓரிடத்தில் சொல்லி இருக்கலாம்.
 
அதேபோல் ஒரு டிஜிபியின் மகள் காணாமல் போயிருக்க தமிழக காவல்துறையின் திறமை இவ்வளவுதானா என்று நமக்கு ஏற்படுவது நியாயமான லாஜிக்தான். அதுவும் காவல்துறைத் தலைவரே இப்படி இருந்தால் பொது மக்களின் நிலை எப்படி என்பது வருத்தமாக இருப்பதுடன் படத்தில் நம்மை ஒன்ற விடாமல் செய்கிறது.
 
தேஜாவு – பாதி பர பர… மீதி கர கர ..!