April 26, 2024
  • April 26, 2024
Breaking News
February 1, 2020

டகால்டி திரைப்பட விமர்சனம்

By 0 1111 Views

ஒரு படம், ஒற்றே படம் சந்தானத்தை முதல் நிலை கமர்ஷியல் ஹீரோக்கள் வரிசையில் கொண்டு வந்து நிறுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அத்தனை ரஜினி, விஜய், அஜித் படங்களைக் குலுக்கிப்போட்டு அதில் நாம் கண்டு ரசித்திருக்கும் காட்சிகளை அப்படியே அலேக்கி ஒரு கதை செய்திருக்கிறார் இயக்குநர் விஜய் ஆனந்த்.

அதில் கில்லி, போக்கிரி தொடங்கி அதிசயப்பிறவி வரை படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு இந்திய நிலமெங்கும் டிராவல் அடிக்கிற ஆக்ஷன் லைன் எனும்போது தனியாகக் கதை ஒன்று சொல்ல வேண்டுமா என்ன..? அப்படி சந்தானம் தென் கோடித் தமிழ்நாட்டில் திருச்செந்தூரிலிருக்கும் ஒரு பெண்ணை மும்பை வரை சாலை வழியாக கடத்துவதில் என்னென்ன இடையூறுகள், என்னென்ன சுவாரஸ்யங்கள் என்று போகிற கதை.

சந்தானம் இதுவரை ஹீரோவாக நடித்த படங்களிலேயே அதி பிரமாண்டமான படம் இது எனலாம். ஒரு விஜய் படம் போல்… மகேஷ்பாபு படம் போல் அத்தனை நேர்த்தி படத்தின் ஆக்கத்தில்… இந்தப்படம் மூலம் இயக்குநருக்கும் இன்னும் பெரிய ஹீரோக்களின் படங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கமர்ஷியல் ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள என்னென்ன மெனக்கெடல்கள் உண்டோ அத்தனை வழிகளிலும் சந்தானம் முயற்சிக்கிறார். அதில் தனுஷுக்கு சவால் விடும் அளவில் உடல் இளைப்பதும் ஒன்று. ஆனால், கண்களில் சோர்வு தெரியும் அளவுக்கு இளைக்க வேண்டுமா அவர்…? மற்றபடி ‘கில்லி’ லுக்கில் அசத்தலாக இருக்கிறார்… ஓட… ஆட… அடிக்க வாகாக வளைகிறது உடம்பு. முகத்தில் மட்டும் தேஜஸ் ஏற்றிக்கொண்டு ‘சத்தானமா’க வேண்டும் அவர்.

ஆனால், டைமிங்கில் அவர் என்றுமே இளைப்பதில்லை. யோகி பாபுவை வேறு கூட்டணிக்கு வைத்துக்கொண்டு அவர் தரும் அலப்பறையில் தியேட்டர் கிழிகிறது. அதுவும் அநத இரண்டாம் பாதிக் காமெடி அலம்பல். முதல் பாதியில் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து காமெடியை குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். சந்தானத்தை சவாலுக்கு இழுக்கும் அளவுக்கு யோகிபாபுவும் தன் பங்குக்கு ‘போகி’ கொளுத்துகிறார்.

நாயகி ரித்திகா சென் நல்வரவு. டப்பிங்க் வாய்ஸ்தான் என்றாலும் அந்தக் கொஞ்சு குரலில் ரித்திகாவின் இளமையும் சேர்ந்து கொள்ள… க்யூட்..! ஆனால், என்ன ஒன்று இந்தியாவின் குறுக்கு வெட்டுப் ப்யணம் முழுதும் ஒரே காஸ்ட்யூமில் அவரை பயணிக்க வைத்துவிட்டார்கள். 

முட்டாள் கோடீஸ்வர வில்லன் தருண் அரோரா ஒரு படத்தை வரைந்துவிட்டு பெண்ணைத் தேடுவதெல்லாம் ஆவக்காய் ஊறுகாய் மாநில ஸ்பைஸ். ஆனாலும் அப்படி ஒரு பெண் கிடைக்கிறாள் பாருங்கள்..?

மும்பை தாதா ராதாரவி அதைவிட முட்டாள். ஆனாலும், காமெடிக்கு லாஜிக் இல்லை என்பதால் எல்லா சீரியஸ் விஷயங்களும் ஜோக்காகி ‘பயங்கர காமெடி’யாகி விடுகின்றன.

தீபக் குமார் பாரதியின் ஒளிப்பதிவு ஒரு கமர்ஷியல் டோலிவுட் படம் பார்த்தது போல் அப்படி ஒரு நிறைவு. அதுவும் முதலில் வரும் கிளப் பாடல் மற்றும் சந்தானம் யோகிபாபு இடம் பெறும் ஸ்டார் ஹோட்டல் நீச்சல் குளப்பாடலில் கலரிங் அற்புதம். விஜய் நாராயணனின் இசையும் பக்கா கமர்ஷியல். பாடல்கள் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். 

டகால்டி – மெகா காமெடி என்டர்டெயினர்..!