May 18, 2024
  • May 18, 2024
Breaking News
March 6, 2020

காலேஜ் குமார் திரைப்பட விமர்சனம்

By 0 909 Views

ஒரு இந்திய மொழியில் வெற்றிபெற்ற கதைக்கு எப்போதுமே பிற மொழித்தயாரிப்பில் முதலிடம் உண்டு. அப்படி மூன்று வருடங்களுக்கு முன்னால் கன்னடத்தில் தயாராகி வெற்றி பெற்ற படத்தின் தமிழ் ரீமேக் படம்தான் இந்த ‘காலேஜ் குமார்’.

குடும்ப உறவுகளும், கல்விச் சிக்கல்களும் அதிகமாகி வரும் இக்காலக்கடத்தில் இப்படத்தின் கதை முக்கியத்துவம் பெறுகிறது. முயற்சி இருந்தால் எந்த வயதிலும் கல்வி கற்கலாம் என்பதையும், அதே நேரம் கல்வி மட்டுமே முன்னேற்றத்துக்கான வழி என்று கொள்ளாமல் கல்வியை மாணவர்களின் முதுகில் சுமையாக ஏற்றிவிடக் கூடாதென்ற கருத்தையும் முன் வைத்திருக்கிறார் இயக்குநர் ஹரி சந்தோஷ்.

பால்ய கால நண்பராக இருப்பதால் அதிகம் படிக்க வசதியில்லாத பிரபுவை தன் அலுவலகத்தில் பியூனாக வேலைக்கு வைத்திருக்கிறார் ஆடிட்டராக வரும் அவினாஷ். ஒரு கட்டத்தில் நட்பு முறிய, அதிகம் படிக்காதவர் என்ற காரணத்தை வைத்தே பிரபுவை அவினாஷ் அசிங்கப்படுத்த, தன் மகனை ஆடிட்டராக்கி அவருக்கு புத்தி புகட்ட சபதமிடுகிறார் பிரபு. ஆனால், அவர் மகனான ராகுல் விஜய்க்கு படிப்பு ஏறாமல் போக, கல்லூரியிலிருந்தே அவரை நீக்கம் செய்கிறார்கள். இந்நிலையில் பிரபு தன் சபதத்தை நிறைவேற்ற முடிந்ததா என்பதுதான் கதை.

இந்த வேடத்துக்கென்றே அளவெடுத்து (!) செய்ததைப் போலிருக்கிறார் பிரபு. உடல் அத்தனை வாளிப்பாக இருந்தாலும் அந்த அப்பாவித்தனமான ‘சின்னத்தம்பி’ முகத்தால் தன் பாத்திரத்தை இட்டு நிரப்பி விடுகிறார். நண்பனிடம் சபதம் இடும்போதும் சரி, அந்த சபதத்தை முடிக்க மகன் ஒத்துழைக்காமல் ஏமாற்றிவிடும்போது சரி… அதற்காக அவனிடம் ஒரு சவால் விடும்போதும் சரி… நடிப்பில் மின்னுகிறார். இந்த வயதில் அவர் கல்லூரி மாணவர்கள் அணியும் ஆடைகளில் வந்து கலக்குவதையும், அடிக்கும் லூட்டிகளையும் ரசிக்க முடிகிறது.  

அவர் மனைவியாக மதுபாலா. அவரையும் ஏழையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை… அவரும் தன் வசன மாடுலேஷனில் வசதியில்லாதவராகக் காட்ட முயற்சித்திருக்கிறார். 

இருவரும் 24 வருடங்களுக்கு முன் ஜோடியான ‘பாஞ்சாலங்குறிச்சி’ படத்தின் “உன் உதட்டோரச் சிவப்ப…” பாடலை ஒரு இடத்தில் பக்குவமாகப் பயன்படுத்தி ரசிக்கவைத்திருக்கும் இயக்குநரின் ரசனையை மெச்சலாம்.

பிரபுவின் மகனாக நடித்திருக்கும் ‘ராகுல் விஜய்’ யின் தோற்றமும், நடிப்பும் நன்று. சண்டைக் காட்சியிலும், நடனத்திலும் அதிவேகமாக இயங்கி ஆச்சரியப்படுத்துகிறார். ஆனால், சேட்டு வீட்டுப் பையன் போலிருக்கும் அவரைம் ஏழை வீட்டுப் பையன் என்று நம்புவதற்குக் கடினமாக இருக்கிறது… (பிரபு, மதுபாலா, ராகுல் விஜய் குடும்பத்தைப் பார்க்கும்போது ‘மை டியர் மார்த்தாண்டன்’ படத்தில் கவுண்டர் நக்கலடிக்கும் “வாங்க ஏழைங்களா…” வசனம்தான அடிக்கடி நினைவுக்கு வருகிறது…)

ராகுல் விஜய்யின் ஜோடியாகவும், அவினாஷின் மகளாகவும் வரும் நாயகி பிரியா வட்லமணி ஒரு மாடல் போல அழகாக வந்து போகிறார்.

கல்லூரி முதல்வராக நாசர் சீரியஸாகவும், பேராசிரியர் மனோபாலா சிரிக்க வைக்கவும் பயன்பட்டிருக்கிறார்கள். அட்டென்டர் சாம்ஸ் ஒரு பக்கம் நம்மை சீரியஸாக சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார்.

ஒளிப்பதிவாளர் குரு பிரசாத் ராய் தன் பணியைச் செவ்வனே செய்திருக்கிறார். குதூப் இ கிருபாவின் இசை ஓகே.

இது போன்ற லைன்களை எடுத்துக்கொள்ளும்போது இந்தத் தலைமுறைக்கும் ஏற்ற வகையில் அதனை நவீன டிரெண்டில் சொல்ல வேண்டும். ஆனால், கடந்த தலைமுறைப்படம் போன்ற நரேஷன் மட்டுமே இதில் பயன்பட்டிருக்கிறது. ஆக, பி அன்ட் சி ரசிகர்களை மட்டுமே குறி வைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகப் புரிகிறது. அந்த நம்பிக்கை காப்பாற்றப் பட்டால் நல்லது.

காலேஜ் குமார் – பிரபு ஃபேன்ஸ் டிலைட்..!