April 24, 2024
  • April 24, 2024
Breaking News
March 6, 2020

ஜிப்ஸி திரைப்பட விமர்சனக் கண்ணோட்டம்

By 0 795 Views

அந்தக் கூட்டத்தில் நானும் இருந்தேன். ராஜு முருகனைப் படித்தவர்கள் அவர் நல்ல படங்களைத் தரவல்லவர் என்பதைப் படம் இயக்குவதற்கு முன்பே தெரிந்து வைத்திருந்த கூட்டம்தான் அது.

ஏனென்றால், எழுத்து, இசை, திரைப்படம், பாடல்கள் இயற்றுதல் எல்லாமே ஒன்றுக்குள் ஒன்று தொடர்பு கொண்டவைதான். அடிப்படை, உந்த வைக்கும் உணர்ச்சி மட்டுமே. தன் கலையில் சரியாக உணர்ச்சியைக் கடத்தத் தெரிந்தவர்கள் ஆகச் சிறந்த படைப்புகளைத் தர இயலும்.

அதைத் தன் ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ என்று இரு படங்களின் வாயிலாகவும் நிரூபித்தார் அவர். ‘குக்கூ’ என்ற நீளமான கவிதை ‘ஹைக்கூ’ வாக குறைக்கப்பட்டிருக்கலாம் என்ற சின்ன குறை தவிர முதல் முயற்சி வென்று அவரை அடையாளம் காட்டியது. அந்தப்படம் தந்த பாதிப்பை இன்று வரையில் அதன் ஹீரோ தினேஷின் ‘கண்களில்’ நாம் பார்க்க இயல்கிறது.

அடுத்து வந்த ‘ஜோக்கரை’ வைத்து ‘டிக்’கே அடித்தார் ராஜு முருகன். அதில் யோசிக்க வேண்டியவர்களெல்லாம் ஜோக்கர்களாக இருக்க, அவர்களுக்காக யோசித்த பாத்திரத்தை ஜோக்கராக்கும் சமுதாய அவலத்தை சிரிக்க ரசிக்க யோசிக்க வைத்துச் சொல்லியிருந்தார் ரா.மு.

‘அடுத்து என்ன..?’ என்ற நிலையில்தான் அவரது ஜிப்ஸி அறிவிப்பு வந்தது. ஜிப்ஸி என்பவன் தேசாந்திரி. ஆக, இது தேசப்பிரச்சினையை முன்னெடுக்கப்போகிறது என்று அப்போதே தோன்றியது. அது மட்டுமல்லாமல் அவர் ஜிப்ஸிக்காக ஜீவா, சந்தோஷ் நாராயணன் மற்றும் தமிழ்நாட்டின் போராளித் தோழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து வெளியிட்ட ‘வெரி வெரி பேட்…’ என்ற ஜிப்ஸிக்கான புரமோஷன் பாடல் ‘எக்ஸ்பெக்டேஷன் டூ தி கோர்…’ கொண்டு போனது. அன்றைக்கே ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டில் சிந்திக்கக்கூடிய அனைவரும் பட வெளியீட்டை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள் என்றே சொல்ல வேண்டும். 

பல தடைகள் மற்றும் தாமதங்களால் பட வெளியீடு தள்ளிக்கொண்டே போனதும் படம் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துக்கொண்டே போனது. கடைசியாக காவல்துறையை அத்துமீறி விமர்சித்ததாக சென்சாரில் ஒரு காட்சிக்கு கட் கொடுக்க, அதை சென்சார் இல்லாத சமூக வலைதளங்களில் ஏற்றியதில் அதுவும் ஜிப்ஸியின் எதிர்பார்ப்பை இரண்டு சென்டிகிரேட் ஏற்றியது.

இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களுக்கான ‘ஜிப்ஸி’ காட்சி நடந்தேற… பத்திரிகையாளர் அல்லாதவர்களும் அரங்கில் நிறைய நின்று கொண்டும்… நடை மேடையில் உட்கார்ந்து கொண்டும் படம் பார்க்க… அரங்கு மூச்சு முட்டிக்கொண்டு இருந்தது. குளிரூட்டப்பட்ட அரங்கில் வியர்வையைத் துடைத்துக்கொண்டு பார்க்கும் அளவுக்கு இட நெருக்கடி… அத்தனையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு..!

இதுவே படம் வெளியானால் தியேட்டரிலும் இருக்கும் என்ற கணிப்புடனேயே படத்தில் ஒன்றினோம்.     

இது குறியீட்டுப் படங்களின் காலம். அதுவும் நடப்பு அரசியலை கலையின் மூலம் சாட வேண்டுமானால் அதற்குக் குறியீடொன்றே சிறந்த வழியென்று புரிந்து கொண்டு இந்தப்பட இயக்குநர் ராஜு முருகன் செயல்பட்டிருக்கிறார் என்பது போகப்போக புரிந்தது.

மதங்களைக் கடந்த மனிதராக… இந்துவுக்கும், இஸ்லாமியருக்கும் மகனாக… அதுவும் காஷ்மீரில் பிறந்த நாயகன் ஜீவா ஒரு குறியீட்டைத் தாங்கியிருக்கிறார். அதேபோல் மாநில, மொழிகளின் எல்லை கடந்த இந்தியனாக அவரை இயக்குநர் பிரகடனப்படுத்துவதால் அவர் இந்திய நாடெங்கும் சுற்றி வரும் ஒரு தேசாந்திரியாக… ஜிப்ஸியாக அறியப்படுகிறார். அதற்கான களத்தை வளமாகப் பிடித்திருந்தார் இயக்குநர்.

‘வேற்றுமையில் ஒற்றுமை’ கொண்ட நாடு என்று இந்தியா புகழப்பட்டாலும் அது எத்தனை போலியானது என்று புரியவைக்கவும் அவர் படத்தில் முயன்றிருக்கிறார். மத ரீதியாக எதிர்க்க ஒரு அடையாளம், சாதி ரீதியாக எதிர்க்க இன்னொரு அடையாளம் என்று தொடர்ந்து ஆதிக்க வர்க்கம் சக மனிதர்களை சகட்டு மேனிக்கு அடிமைப்படுத்தி அவர்களுக்குள் பாகுபாட்டைத் தூண்டி கலவர பூமியாகவே மாநிலங்களை வைத்திருக்கும் அவலத்தையும் நாட்டு (நடந்த) நடப்புகளின் படியே குறிப்பிட்டு மக்களை எச்சரிக்கவும் செய்கிறார் ராஜு முருகன். இறுதியாக மனிதம் தாண்டிப் புனிதம் இல்லை என்கிறார். 

அதைத் தாண்டிப் பார்த்தால் எந்தக் கூட்டுக்குள்ளும் அடங்காத ஒரு நாடோடித் தென்றல், காதல் என்ற புல்லாங்குழலில் அடைபட்டுத் தவித்து இசையாக வெளிப்படும் மெல்லிய இழையையும் உள்ளே செருகியிருந்தார் அவர். இதுதான் படம்.

ஆனால், பட ஆக்கமும், திரைக்கதையும் இத்தனை சுருக்கமாக இல்லை. ரயில் கிளம்ப தாமதமாகும்போது குழைந்தைகள் ரயிலைத்தள்ளுவார்களே அப்படி படத்தைத் தள்ளிப்போக வேண்டியிருக்கிறது. காட்சிகளின் நகர்த்தலில் அத்தனை மெத்தனம். 

ஜீவாவுக்கென்றே தமிழில் அமைகிற… அல்லது அப்படி ஒத்துக்கொள்கிற ஜீவாவுக்கென்றே பொருந்துகிற வித்தியாசமான வேடம் இதில். பல இந்திய மொழிகளைப் பேசுகிற, தன் போக்கை நிர்ணயித்துக்கொள்ளாத காற்றைப் போன்றே பயணப்படுகிற, பாட்டுப் பாடுகிற குதிரையைக் குழந்தையாய் வளர்க்கிற… குழந்தை மனத்தைத் தன்னிடத்தில் தக்க வைத்துக்கொள்கிற அபூர்வ ஜிப்ஸி வேடத்தில் அதுவாகவே ஆகிப்போயிருக்கிறார் அவர்.

அவர் காதலை வளைத்துக் கொள்கிற… அல்லது வதைத்துக் கொல்கிற வேடம் புதுமுகம் நடாஷா சிங்குக்கு. நடிக்க அவருக்கு நிறைய இடங்கள். ஆனால், அழகானவர்கள் நடிக்க வேண்டியதில்லை என்ற இலக்கணத்தின்படி அங்கங்கே வெறித்துப் பார்த்தபடி கடக்கிறார். அதுவே நடிக்கத் தெரிந்த நடிகையாக இருந்திருந்தால் நம் மனத்தைக் குலைத்திருக்க முடியும். அந்த ரசவாதம் நடக்காததால் அவரது காதல் என்ன வகையானது என்று தெரிந்து கொள்ளாமலேயே கடந்து விடுகிறது. (ஓரு மீசை வைத்து விட்டால் அழகான முரட்டு ஆணாகவும் அவர் தோன்ற இயலும் என்று தோன்றியது…உடல் மொழி அத்தனை மிஸ்ஸிங்…)

அடுத்து ஏதோ நடந்து விடும் என்றே இடைவேளை வரை கடக்கிறது படம். இடைவேளைக்கு முன் வரும் வாரணாசிக் கலவரம் ஜிப்ஸியின் காதல் திருமண வாழ்வைக் கலைத்துப்போட்டு மீண்டும் அவரைத் தனிமைப்படுத்துவதோடு எந்த எதிர்பார்ப்புமில்லாமல் அசுவாரஸ்யமாக முடிகிறது முதல்பாதி.

கலவர பூமி, அதில் இடம்பெற்ற பாதிக்கப்பட்ட பெண், கலவரத்தை ஏற்று நடத்திய வன்முறையாளன் படங்கள், கலவரம் நடந்தது யார் தொகுதி என்றெல்லாம் குறியீடுகளைப் பார்த்து பார்த்து ரசிகர்கள் பூரித்துப்போவார்கள் என்ற இயக்குநரின் நம்பிக்கையே இவ்வளவு தட்டையான இடைவேளையைக் கொடுக்க வைத்திருக்கிறது.

மீண்டும் படம் தொடங்க… பிரிந்த இருவரும் இணைந்தார்களா… பாதித்தவனை பாதிக்கப்பட்ட ஜிப்ஸி என்ன செய்தார் என்பதெல்லாம் பின்பாதிப்படம். புரோமோ பாடலின் உணர்ச்சியோ, நீக்கப்பட்ட காட்சியின் ரசிப்புத்தன்மையோ படம் நெடுக இல்லவே இல்லை. (ஓரு சில காட்சிகளைத் தவிர…)  நாடகத் தன்மையுடன் கூடிய கிளைமாக்ஸ் இன்னும் தட்டை.

படத்தில் மெச்சத்தகுந்த விஷயங்களில் செல்வகுமாரின் ஒளிப்பதிவு அமைந்திருக்கிறது – நாம் நன்கறிந்த நாகூரைக் கூட ரசிக்க வைத்திருக்கிறார். கைகொடுத்திருக்க வேண்டிய இன்னொருவரான சந்தோஷ் நாரயணன் ரொம்பவே சறுக்கியிருக்கிறார். படத்தின் மிக முக்கியமான இரண்டு பாடல்களுக்கான இசை நம் பொறுமையை ‘பேட் டூ தி கோர்…’ கொண்டு செல்கிறது. படத்தில் வைரல் ஆவதாகச் சொல்லப்படும் பாடல் அதிகபட்ச எதிர்பார்ப்பு.

முக்கியமாக படம் மனத்தில் இடம்பிடிக்காமல் போன காரணம் ஜீவா மற்றும் நடாஷாவின் பாத்திரப் படைப்புகள். ஜீவா எப்படிப்பட்டவர் என்பதற்கான வரையறையோ படம் என்ன சொல்ல வருகிறது என்ற வழிநடத்துதலோ எங்குமே இல்லை. ஜீவா எல்லா கட்சிக்கும் பாட்டுப்பாடுவார் என்கிறார்கள். திடீரென்று புரட்சிப் பாட்டுப் பாடுகிறார். குதிரையை ‘சே’ என்று வளர்த்தாலும் அப்படியான புரிதல் அவருக்கு எங்குமே இருந்ததாகச் சொல்லப்படவில்லை. 

கிரிக்கெட்டில் பாகிஸ்தான் ஜெயித்தாலும், இந்தியா ஜெயித்தாலும் எனக்கு ஒன்றுதான் என்கிறார். ஆனால், நடாஷா அழுது கொண்டிருக்கையில் “கவலைப்படாதே… உங்க ஆளுங்கதான் (பாகிஸ்தான்) ஜெயிப்பார்கள்…” என்கிறார். இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தானிய சிந்தனையிலேயே இருப்பார்கள் என்ற புரிதல்தானா அவருக்கு இருக்கிறது. ஆனால், அதற்கு முந்தைய காட்சியில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருக்கும் முஸ்லிம்கள் இந்திய வீரர் ஆட்டமிழக்கும்போது கைத்தட்டுகிறார்கள். இப்படியான குழப்பங்கள் படம் நெடுகிலும்…

இறுதியில் மனிதம் தாண்டிப் புனிதமில்லை என்று பாட்டுப்பாடினாலும் அந்த் சிந்தனையும் அவருக்கு அதற்கு முந்தைய காட்சியில் திடீரென்று விளைந்ததுதான். வன்முறையால் மனநிலை உறைந்த தன் மனைவியின் நிலை குறித்து வருத்தப்படும் அவர், அதன் காரணத்தை அறிய சம்பவம் நடந்த வாரணாசி போய் விஷயம் தெரிந்து அத்தனைக்கும் காரணமான வன்முறையாளனை நையப்புடைக்க நான் கடவுள் ஆர்யாவாகி, பிணங்கள் எரியூட்டப்படுவதற்கு இடையில் துரத்துகிறார். அந்தக் கோபத்துக்கு அவன் கொல்லப்பட்டிருக்கலாம்.

ஆனால், அப்போதுதான் தெரிகிறது… அந்த மத வெறி பிடித்தவன் சாதி வெறிக்கு பலியாகி கையை இழந்து நிற்பது. அதிலும் அவன் மதவெறியூட்டப்பட்டவன் – மற்றபடி நல்லவன் என்று தெரிகிறது. அதன் பிறகு அவருக்கு தோன்றிய ஞானம்தான் ‘மனிதம் தாண்டி புனிதமில்லை…’ என்பதுவும், ‘இதயம் தாண்டி இறைவனில்லை’ என்பதுவும். படம் முடிந்த அடுத்த நாள் அவர் என்ன நிலை கொண்டிருப்பாரோ..?

அதனாலேயே ஜோக்கரை ஹீரோவாக்க முடிந்தவருக்கு, இதில் ஜிப்ஸியை ஒரு ஜோக்கராகவே காட்ட முடிந்திருக்கிறது.

ஒரு படம் முடியும் காலகட்டத்துக்குள் வில்லன் நல்லவனாவதும், அவன் நல்லவன் என்று அறிந்ததும் மனநிலை பிழன்ற நடாஷாவுக்கு சடுதியில் குணமாவதும் எத்தைகைய நாடகச் சிந்தனை..?

“இதெல்லாம் உங்களுக்குப் புரியவில்லை…” என்று அறிவார்ந்தவர்கள் சொல்லிவிட்டுப் போகட்டும். என் ரசனை பாமர சினிமா ரசிகனுக்கானதே. அதேபோல் ‘தோழர் வென்றெடுக்க வேண்டும்…’ என்ற நல்லெண்ணத்தில் நாம் மதிக்கும் நல்லவர்கள் எல்லாம் அடுத்தடுத்து வரும் நாள்களில் படத்தையும், ராஜு முருகனையும் புகழ்ந்து கொண்டிருப்பார்கள். அதுவும்  சரியானதே… ஆனால், சினிமா விமர்சகனாகவும் ஆகிப் போனதால் நல்ல செய்திக்காக மட்டுமே படங்கள் கொண்டாடப்படுவதில்லை என்பதை நான் சரியாகவே புரிந்து வைத்திருக்கிறேன்..!

ஆட்சியாளர்களுக்கு எதிரான படமென்பதால் விருதுகள் கிடைப்பதற்கான வாய்ப்பும் அரிதானதே..!

மக்களுக்காகச் சொல்லப்படும் நல்ல கருத்துகள் மக்களைச் சென்றடையாததும், மக்களுக்கு அவசியமில்லாத பன்னாட்டு நிறுவன பயன்பாட்டுப் பொருள்கள் மக்களிடம் அமோக வரவேற்புப் பெறுவதற்கும் காரணம் எளிமையான ஒன்றுதான். முன்னது மக்களுக்குப் புரியாத மொழியில் இருப்பதும், பின்னது மக்கள் விரும்பும் வண்ணம் இருப்பதும்.

அந்த வகையில் மக்கள் சிந்திக்க அவர் நிறைய முன்னெடுப்புகளைப் படத்தில் கொடுத்திருந்தாலும், அவரை மக்களும் இந்தப்படத்தின் மூலம் ஒன்றைப் புரிந்து கொள்ள வைப்பார்கள் என்று புரிந்தது.

அது மக்கள் விரும்பும் வகையில் படமெடுப்பது..!

– வேணுஜி