April 26, 2024
  • April 26, 2024
Breaking News
December 25, 2020

சியான்கள் திரைப்பட விமர்சனம்

By 0 821 Views
சியான் என்றால் பெரிசு என்று பொருள். தமிழில் முதல் சியானாக விக்ரம் அறியப் பட்டாலும் அரிதாக நிஜ சியான்கள் பற்றியும் அவ்வப்போது படங்கள் வருவதுண்டு.
 
இதில் ஒரு சியான் அல்ல. ஏழு சியான்களைப் பற்றிய நெகிழ்வான கதை ஒன்றைச் சொல்லி சிலிர்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் வைகறை பாலன்.
 
தாதாக்கள் படங்களாக வந்து கொண்டிருந்த தமிழ் சினிமாவில் இப்படி தாத்தாக்களை முக்கிய பாத்திரங்களாக ஆக்கி ரசிக்க வைத்திருக்கும் இயக்குனர் பாராட்டுக்கு உரியவர்.
 
தேனி அருகே இருக்கும் கிராமத்தை சேர்ந்த நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், துரை சுந்தரம், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயணசாமி என ஏழு முதியோர்கள் நண்பர் களாகப் பழகி வருகிறார்கள். 
 
ஏழு பேருக்கும் ஆளுக்கு ஒவ்வொரு ஆசைகள் இருக்கின்றன. அதில் நளினிகாந்துக்கு விமானத்தில் பறக்க வேண்டும் என்று ஆசை. அவருடைய ஆசை என்றாவது ஒருநாள் நிறைவேறும் என்று மற்ற நண்பர்கள் நம்பிக்கையூட்டுவதுடன் உதவியும் செய்கிறார்கள்.
 
இது ஒரு புறமிருக்க, மருமகள் கையினால் அடி வாங்கி அசிங்கப்பட்டு மேற்படி சியான்களில் ஒருவரான நாராயணசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.
 
சொத்துக்கு ஆசைப்பட்டு மகனே வி‌‌ஷ ஊசி போட ஏற்பாடு செய்ததில், துரை சுந்தரமும் இறந்து போக,
இரண்டு நண்பர்களும் தங்கள் கண் முன்னே இறந்து போனதில் மற்றவர்கள் எடுக்கும் முடிவுதான் கதை. 
 
நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் புறக்கணிக்கப் படும் பெரியவர்களின் நிலையை எடுத்துச் சொல்லி வந்திருக்கும் முதல் படம் இது என்று சொல்லலாம். உடலுக்குதான் வயதாகிறது. ஆனால் மனதுக்கு வயதாவதில்லை என்பதை அழகாகவும், ஆழமாகவும் உணர்த்தி இருக்கும் படமும் கூட.
 
படத்தின் நாயகனான கரிகாலன் டாக்டராக வந்து முதியவர்களுக்கு உதவினாலும், தனக்கென்று ஹீரோயிசம் தேடிக் கொள்ளாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது நன்று.
 
நாயகி ரிஷா ஹரிதாஸ் கிராமத்து அப்படி ஒன்றும் அழகான நடிகையில்லை. ஆனால், அந்தப் பாத்திரத்தில் அப்படிப் பொருந்திப் போயிருக்கிறார். பெரிசுகளின் கதையில் கரிகாலன், ரிஷா ஹரிதாஸ் ஜோடியின் யதார்த்தமான காதல், பாலைவனப் பசுஞ்சோலை.
 
நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயணசாமி, துரை சுந்தரம் ஆகிய ஏழு பேரும் போட்டி போட்டு நடித்து நம் மனதில் இடம் பிடித்தாலும் அவர்களில் நளினிகாந்தின் கதையும், நடிப்பும் கலங்க வைக்கிறது.
 
தன் ஏரோப்ளேன் ஆசையை அவர் வெளிப்படுத்துவது, படுத்த படுக்கையாக கிடக்கும் மனைவிக்கு இவர், ‘தண்டட்டி’ போட்டு விடுவது என்று நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.
 
முத்தமிழ் இசையில் பாடல்கலில் கிராமிய மணம் கமழ்கிறது. கிராமத்துக்கு சென்று வந்த உணர்வைத் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாபு குமார்.
 
முதல் பாதி கலகலப்பாகவும் இரண்டாம் உணர்வுபூர்வமாகவும் செல்லும் படத்தில் இறுதிக்காட்சி இன்றைய இளைஞர்களை நிறைய சிந்திக்க வைக்கும். 
 
சற்றே வேகம் கூட்டி இருந்தால் இன்னும் ரசிக்க வைத்திருக்கும் என்பதுவும் உண்மை.
 
ஆனாலும், இன்றைய சமுதாயத்துக்கு ஏற்ற வகையில் கருத்து சொல்லி, அதை ரசிக்கவும், நெகிழவும் வைத்திருக்கும் இயக்குனர் இதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
 
சீயான்கள் – ‘ பெரிசா ‘ க சிந்திக்க வைத்திருக்கிறார்கள்..!