மலையாளப் படங்கள் தொடர்ந்து தமிழர்கள் மீதான வன்மத்தைக் கக்கிக் கொண்டிருந்தாலும் தமிழக ரசிகர்கள் எப்போதுமே மலையாளப் படங்களைக் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆனால் அப்படியும் கொண்டாடி விட முடியாத படங்கள் இருக்கின்றன என்பதற்கு இந்தப் படமே சாட்சி.
நீண்ட ஒரு முன் கதையுடன் டைட்டில் வருகிறது. அதில் முன்பொரு காலத்தில் திருடர்கள் களவாடிய விநாயகர் சிலை ஒன்று தென்னை மரத்தின் மீது பதுக்கி வைக்கப்பட்டு பின்னால் கண்டுபிடிக்கப்படுகிறது.
அதை பரம்பரை பரம்பரையாக வைத்து பாதுகாக்கும் குடும்பத்தில் இப்போது ஊர்வசி இருக்கிறார். அவரது மகன்தான் கதையின் நாயகன் பாலு வர்கீஸ். ஊர்வசி தன் கணவர் குரு சோமசுந்தரத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து மகனுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் பழங்காலப் பொருட்களை வெளிநாட்டில் விற்கும் பெண் தாதா தலைமையிலான கும்பல் ஒன்று பாலு வர்கீசை அணுகி அந்த விநாயகர் சிலையைக் கேட்டு 50 லட்சத்துக்குப் பேரம் பேச அவர் முடியாது என்று மறுத்து விடுகிறார்.
ஆனால் இரவில் கண் பார்வை மங்கலாகிப் போகும் வினோத வியாதி கொண்ட பாலு வர்கீஸ், அதற்கு சிகிச்சை பெறவும் ஒரு கட்டத்தில் தான் பார்த்து வந்த காபி ஷாப் வேலையையும் இழந்து சொந்த தொழில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திலும் இருக்கிறார். எனவே விநாயகர் சிலையை விற்றால் கிடைக்கும் பணத்தில் செட்டிலாக நினைத்து அந்த சிலையை அவரே திருடுகிறார்.
அதை நல்ல விலைக்கு விற்க பிக் பாக்கெட் திருடனான கலையரசனை நாட இருவரும் சேர்ந்து பல பார்ட்டிகளைப் பிடிக்கிறார்கள் அதில் முதலில் பேரம் பேசிய டீமே கிடைக்க, கலையரசன் அதற்கு இப்போது இரண்டு கோடி விலை வைக்கிறார். அதற்குப் பின் என்ன ஆனது என்பது மீதிக் கதை.
ஒரு நாயகன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற இலக்கணங்களை அடித்து உடைத்து இயல்பான ஒரு இளைஞனாக தோற்றமளிக்கிறார் பாலு வர்கீஸ்.
ஊர்வசி இந்தப் படத்தில் நடிக்கிறார் என்றதும் கலகலப்பான காட்சிகளை நாம் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ஆனால் அப்படி எந்தக் காட்சியும் அமையாமல் போனது மிகப்பெரிய ஏமாற்றம்.
அதேபோல் சிறந்த நடிகராக அறியப்பட்ட குரு சோமசுந்தரத்துக்கும் அவரது நடிப்புக்குப் பெரிய தீனி கிடைக்காமல் போனதில் இயல்பாக வந்து போகிறார்.
மலையாளப் பட உலகம் கலையரசனை ஒரு திருடனாகவோ, சதிகாரனாகவோதான் பார்க்கிறது. இதில் பிக் பாக்கெட் திருடன், ஆனால் நல்லவன் என்கிற அளவில் அவரது பாத்திரத்தை பாசிட்டிவ் ஆகக் கொண்டு போய் கடைசியில் மீண்டும் பிக் பாக்கெட் தொழிலுக்குப் போவதாகக் கதை முடிகிறது.
பெண் தாதா கேரக்டரில் வரும் பெண் மிரட்டலாக நடித்திருந்தாலும் அவரது தேவை என்ன என்பது புரியவில்லை. அப்பாவியான பாலு வர்கீசை நாலு தட்டு தட்டி விட்டு எந்த பேரமும் பேசாமல் விநாயகர் சிலையை திருடி விட முடியும் போது, அவர் ஏன் ரவுடிகளை அனுப்பி பாலுவின் கூட்டாளியான கலையரசனை அடிக்க போய், இவர்கள் ஏன் அடி வாங்கிக் கொண்டு வருகிறார்கள் என்பது புரியவில்லை.
இப்படி ஏகப்பட்ட ‘ஏன் ‘களுடன் திணறும் திரைக்கதை ஏதோ ஒரு இடத்தில் எந்த நீதியும் இல்லாமல் சிலை கடத்தலுக்குத் துணை போய் எப்படியோ முடிகிறது.
சுபாஷ் லலிதா சுப்ரமணியன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் உருப்படியாக இருப்பது ஸ்வரூப் பிலிப்பின் ஒளிப்பதிவு மட்டுமே. சுப்ரமணியன் கே.வி இசையும் ஓகே.
நல்ல விஷயம் குழம்பி போகும் காரியங்களை ‘பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக முடிந்தது’ என்பார்கள்.
அப்படித்தான் ஆனது இந்தப் படமும்..!