November 21, 2024
  • November 21, 2024
Breaking News
November 3, 2024

பிரதர் திரைப்பட விமர்சனம்

By 0 77 Views

அக்காவுக்கும், தம்பிக்குமான பாசக்கதை என்றொரு லைனை எடுத்துக் கொண்டு ‘கதை பண்ண’ ஆரம்பித்திருக்கிறார் இயக்குனர் எம். ராஜேஷ்.

ஆனால் அது மட்டும்தான் கதையா என்று கேட்க முடியாத அளவுக்கு ஏகப்பட்ட பின்னல்களை உள்ளே வைத்து அவரும் குழம்பி நம்மையும் குழப்பி இருக்கிறார். 

ஜெயம் ரவி என்றவுடனேயே நம் மனதுக்குள் வருவது ‘தங்கமான பிள்ளை’ என்பதுதான். ஆனால், இந்தப் படத்தில் அவருக்கு உருப்படாத பிள்ளை (வழக்கமான எம். ராஜேஷ் பிராண்டிலேயே…) என்ற ஒரு கேரக்டரைசேஷன் கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதுவே ஒட்டவில்லை. 

இருக்கிற இடத்தில் எலலாம் வம்பு பண்ணக்கூடிய… கொள்கை என்று எதுவும் இல்லாமல் வாழ்ந்து வரும் கிட்டத்தட்ட ‘தண்டச் சோறு’ மாதிரியான பாத்திரம் ஜெயம் ரவிக்கு. ஆனால் அவர் சட்டம் படித்தவர் என்று இரண்டு இடங்களில் புத்தம் பொதுவாக சொல்கிறார்கள். 

அவரால் அவரது அப்பா மனமுடைந்து கிட்டத்தட்ட ஹார்ட் அட்டாக் என்கிற லெவலுக்குப் போக, கொஞ்ச நாள் தன் பொறுப்பில் அவரை வைத்துக் கொள்ள ஊட்டிக்கு அழைத்துச் செல்கிறார் ஜெயம் ரவியின் அக்கா பூமிகா. 

அங்கே போயும் அக்கா குடும்பத்தில் என்னென்ன பிரச்சனைகளை ஜெயம் ரவி ஏற்படுத்துகிறார் – அதிலிருந்து அந்தக் குடும்பம் மீண்டதா என்பதுதான் அவுட் டேட்டட் ஆன மீதி. 

பொருந்துகிறதோ இல்லையோ கிடைத்த பாத்திரத்திற்கு நியாயம் செய்துவிட வேண்டும் என்கிற நினைப்பில் ஜெயம் ரவி நடித்திருக்கிறார். ஆனாலும் அவர் முழு ஈடுபாட்டுடன் நடித்தாரா என்பதைச் சொல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு திரைக்கதை மிகவும் தளர்வாக இருக்கிறது. 

அக்கா பூமிகாவும் அப்படியே. அக்காவுக்கும் தம்பிக்குமான பந்தம் எந்த அளவுக்கு இறுக்கமானது என்பதை சொல்லத் தவறியதால்,இருவரும் வரும் காட்சிகள் எல்லாம் சாதரணமாகக் கிடக்கின்றன. ஏதோ வீட்டுக்கு வந்த சொந்தக்காரர்கள் போலவே இருவரும் நடந்து கொள்கிறார்கள்.

படமே முடியப்போகும் நேரத்தில் திடீரென்று ஜெயம் ரவியின் அப்பா நீ எனக்கு பிறந்தவன் இல்லை ஒரு அனாதை…” என்றொரு குண்டைப் போட்டு அப்படியாவது நம்முடைய பச்சாதாபத்தை பெற முடியுமா என்று சோதிக்கிறார்கள். 

கொஞ்சம் கூட நம்முடன் கனெக்ட் ஆகாத கதையால் தள்ளாடுகிறது படம்.

கிட்டத்தட்ட எல்லோருடைய மேக்கப்புமே மோசம் என்கிற அளவில் நாயகி ப்ரியங்கா மோகனுக்கு மேக்கப் போட்டவருக்கு ரெட் கார்டே கொடுக்கலாம். அவர்களாவது கண்ணாடியில் தங்கள் முகத்தைப் பார்த்திருக்க மாட்டார்களா..?

பிரியங்காவை விட மோசம், ஜெயம் ரவியின் அம்மாவாக வரும் சீதாவின் மேக்கப். கிட்டத்தட்ட பாதி படத்துக்கு மேல்தான் அவர் சீதா என்பதே நமக்கு அடையாளம் தெரிகிறது.

பூமிகாவின் கணவராக நட்ராஜ், மாமனாராக ராவ் ரமேஷ், மாமியாராக சரண்யா பொன்வண்ணன், வீட்டுப் பணியாளர் விடிவி கணேஷ் என்று ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம் குறுக்கும் நெடுக்குமாக போய் வருகிறது.

படத்துக்கு இசையமைத்தது ஹாரிஸ் ஜெயராஜ் என்பதைக் கோவிலில் வைத்து சத்தியம் செய்து சொன்னால் கூட நம்ப முடியாது. ‘மக்கா மிஷி…’ ஒரு பாடலைத் தவிர மற்றதெல்லாம் வேஸ்ட். பின்னணி இசை டிவி சீரியல் ரேஞ்சுக்கு இருக்கிறது.

ஒப்பனைக்காரர் சொதப்பியதை ஒளிப்பதிவாளர் விவேகானந்த் சந்தோஷத்தாலும் தீர்க்க முடியவில்லை.

‘மக்கா மிஷி…’ பாடலுக்கு நடனம் அமைத்த சாண்டி மாஸ்டர் மட்டும் அடையாளம் தெரிகிறார்.

ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டைனரைத் தர நினைத்து நம்மை ரொம்பவே ஃபீல் பண்ண வைத்துவட்டார் எம் ராஜேஷ். தன் பழைய படங்களையே திருப்பி எடுத்திருந்தால் கூட தப்பித்து இருப்பார். 

ஸாரி… பிரதர்..!

– வேணுஜி