தமிழ் சினிமாவில் தன் வழியைத் தனி வழியாகக் கொண்டு பயணப்படும் இயக்குனர் சிம்பு தேவன் இந்தப் படத்தில் ஒரு சின்னஞ்சிறு படகுப் பயணத்தைக் கடல் வழியே மேற்கொண்டிருக்கிறார்.
‘காமெடியன்ஸ் டிலைட்’ என்று போற்றக்கூடிய அளவில் நகைச்சுவை நடிகர்களை நாயகர்களாக்கிப் பார்ப்பதில் அவருக்கு எப்போதுமே அலாதிப் பிரியம்.
அப்படி வடிவேலு, சந்தானம், கருணாகரன் போன்றவர்களைத் தொடர்ந்து இந்தப் படத்தில் யோகி பாபுவை நாயகனாக்கி ஒரு நவீனத்தைத் தந்திருக்கிறார்.
சராசரிப் பார்வையாளர்களுக்கு ஒரு வடிவத்தையும், அதன் பொருள் அறிந்து பார்ப்பவர்களுக்கு இன்னொரு வடிவத்தையும் கொடுக்கும் வகையில் இந்த போட் இருவித பார்வைகளைத் தாங்கி நிற்கிறது.
தன் படங்களில் சிம்பு தேவன் எடுத்துக் கொள்ளும் காலக் கட்டங்களும் கவனிக்கப்பட வேண்டியவை. அப்படி இந்தப் படத்தில் அவர் தொட்டிருப்பது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த 40 களில் தென்னிந்தியாவில் நடந்ததாகச் சொல்லும் ஒரு புனைவு இது.
பிரிட்டிஷ்காரர்கள் கையில் இந்தியா சிக்கி சுதந்திரத்துக்காகப் போராடிக் கொண்டிருக்க, இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் வெறுப்புக்கு ஆளாகி அதன் விளைவு பிரிட்டிஷ் பிடியிலிருக்கும் இந்தியாவின் மீதான ஜப்பானிய தாக்குதலாக வெடித்த நிலையில் சென்னையில் நடக்கும் கதை இது.
இப்படி ஒரு காலகட்டத்தைப் பதிவு செய்ததற்கே அவரை முதலில் தனியாகப் பாராட்டி விட வேண்டும்.
இந்நிலையில் மீனவரான யோகி பாபு ஆங்கிலேயரிடம் கைதாகி இருக்கும் தன் தம்பியை மீட்க சென்னைக் கடற்கரைக்குப் பாட்டியுடன் வருகிறார்.
அந்நேரம் வானில் விமானங்கள் பறந்து வர, ஜப்பான் குண்டு வீசப் போகிறது என்றறிந்து எல்லோரும் ஓடித் தப்பிக்க முயல, கடலுக்குள் சென்று விட்டால் விமான தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என்று புரிந்து கொள்ளும் யோகி பாபு தன் பாட்டி மற்றும் தம்பியுடன் படகை நோக்கிப் புறப்படுகிறார்.
அப்போது அவரிடம் தஞ்சம் கேட்டு வட இந்தியரான சாம்ஸ், மகள் கௌரி கிஷனுடன் வரும் பிராமணர் சின்னி ஜெயந்த், மலையாள முஸ்லிமான ஷாரா, தன் மகனுடன் வயிற்றிலும் ஒரு பிள்ளையைத் தாங்கி நிற்கும் ஆந்திரப் பெண் மதுமிதா, நூலகரான எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் கேட்க அவர்களையும் தன் படகில் ஏற்றிக்கொண்டு புறப்படுகிறார். வழியில் ஒரு பழுதடைந்த படகில் இருந்த ஆங்கிலேய போலீஸ் சூப்பரரின்டெண்ட் ஒருவரும் இந்தப் படகில் ஏறிக் கொள்ள…
கடலுக்குள் அவர்கள் பயணப்படும் 48 மணி நேரம்தான் கதை. இவர்களெல்லாம் ‘பிரிவினைப் பெருங்கடல் நீந்தி’ பத்திரமாகக் கரை சேர்ந்தார்களா என்பது பொதுவான கதையாகத் தோன்றும்.
ஆனால், இதற்குள் இன்னொரு பொருளாக ஒட்டுமொத்த இந்தியப் பிரச்சினைகளை கேப்ஸ்யூலாக்கி இந்தப் பாத்திரங்களின் வாயிலாகப் படகில் ஏற்றி இயக்குனர் பவனி வந்திருப்பதுதான்.
ஒரு பக்கம் ஆங்கிலேயரின் ஆட்சியில் இந்தியர்கள் அடிமைப்படுத்தப்படும் சூழ்ச்சி, அந்த சூழ்ச்சியில் இந்து – இஸ்லாம் மதத்தினரிடையே ஏற்படக்கூடிய பிரிவினை, இன்னொரு பக்கம் வந்தேறிகளான பிராமணர்களின் மேலாதிக்கத்துடன் தென்னிந்தியர்களைப் பொருளாதார ரீதியாக அடிமைகளாக வைத்திருக்கும் வட இந்திய சேட்டுகளின் ஆதிக்கம், இவற்றின் விளைவாக தொல் குடிகளாக இங்கே இருப்பவர்கள் எதிர்கொள்ளும் துன்பம் இவற்றைத் துடுப்பு போட்டுத் துடைத்தெடுத்துச் சொல்லி இருக்கிறார் சிம்பு தேவன்.
இந்தக் குறியீடுகள் புரிந்து இந்தப் படத்தைப் பார்த்தால் இதைக் கொண்டாடத் தோன்றும்.
தமிழகத்தின் அப்பாவி ஆதி குடியாக வரும் யோகி பாபுவுக்கு மண்டேலா படத்துக்கு பின் சொல்லிப் பெருமைப் பட்டுக்கொள்ள நேர்ந்த அற்புதமான வேடம். அங்கங்கே அவர் பாணியில் நகைச்சுவை பஞ்ச்சுகளை வீசினாலும் அதைத் தாண்டிய அவரது அப்பாவித்தனம் அந்தப் பாத்திரத்துக்கு பெருமை சேர்க்கிறது.
படகில் உளள அனைவரையும் சாமர்த்தியமாகத் தூங்க வைத்துவிட்டுத் தன்னைக் கரிசனத்துடன் பார்க்கும் பிராமணப் பெண்ணான கௌரி கிஷனின் காதலுக்கு அவர் கட்டுப்பாடு விதிப்பது ஹைகூ வடிவிலான கானா.
ஒரு வெற்றுப் பார்வையில் காதலைச் சொல்வதும் அத்தனை லேசுப்பட்ட வேலை இல்லை. அதைக் கச்சிதமாக செய்திருக்கும் கௌரி கிஷனின் கிரஷ்ஷும் சிறப்பு.
எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த் , சாம்ஸ் மூவரின் நடிப்பு பற்றி சொல்லத் தேவையில்லை அந்த மூவருக்கும் அவரவர்களது பாத்திரங்களை மாற்றிக் கொடுத்திருந்தால் கூட இதே அளவுக்கு ரசனையுடன் நடித்திருப்பார்கள்.
படகிலிருந்து மூவர் கடலில் இறங்கினால்தான் மூழ்காமல் தப்பிக்கும் என்கிற நிலையில் தானே முன்வந்து தன் இன்னுயிருடன், கர்ப்பத்திலிருக்கும் இன்னொரு உயிரையும் துறக்கத் துணியும் மதுமிதாவை நினைத்துக் கண்ணீர் உகுக்க முடிகிறது.
முதல் பார்வைக்குத் தீவிரவாதியாக ஷாரா தெரிவதும் கடைசியில் தீவிரவாதி யார் என்று தெரிவதும் ரசனையான இடங்கள்.
இர்வினாக வரும் வெள்ளைக்காரர் ஜெஸ்ஸி யின் நடிப்பும் குறிப்பிடத் தக்கது.
ஆகக் கடைசியாக, பெருங்கடலைத் தங்களால் நீந்தியே கடக்க முடியும் என்கிற மீனவ நம்பிக்கையில் கடல் புகும் பாட்டி லீலாவும் கும்பிட வைக்கிறார்.
இவர்களுடன் ஒரு எலியையும் கூட நடிக்க வைத்திருக்கும் இயக்குனர், அந்த எலி படகிலேயே ஈன்ற இரண்டு குட்டிகளையும் பத்திரமாகக் கரை சேர்ப்பதில் அனைத்துயிர்களின் மதிப்பையும் கூட்டியிருக்கிறார்.
அதேபோல் யாரை யார் கொல்வார்களோ என்கிற வாழ்வியல் போராட்டத்தின் உச்சமாக யோகி பாபுவைத் தீர்த்துக்கட்ட அனைவரும் முடிவெடுக்க… கிளைமாக்ஸில் அனைவரின் உள்ளத்தில் இருக்கும் நல்லவர்களைத் தட்டி எழுப்பி (அந்த வெள்ளைக்கார உட்பட) மனித நேயம் கொடுத்திருப்பதில் தன் பெயருக்கு ஏற்ப தேவ மனத்தைத் தக்க வைத்துக் கொள்கிறார் சிம்பு.
அவரது இந்த கம்பெனி ஆர்டிஸ்டுகளில் ‘தவறி’ப் போனவர் வி.எஸ்.ராகவன் மட்டுமே என்பது நமக்கும் கொஞ்சம் குறையாகத்தான் இருக்கிறது.
“உனக்கு என்ன உதவி வேண்டும் கேள்..!” என்று கிளைமாக்சில் வைத்துக் கேட்கும் ஆங்கிலேயரிடம் யோகிபாபு சொல்லும் பதில் “ஜெய்ஹிந்த்..!” சொல்ல வைக்கிறது.
இரண்டு மணி நேரம் திரையில் ஓடக்கூடிய படம் முழுதும் ஒரு படகுப் பயணம்தான் என்பதை எப்படித்தான் கற்பனை செய்தாரோ சிம்புதேவன்..? இந்தக் கதையை கேட்டு தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளரையும் இந்த இடத்தில் பாராட்டியாக வேண்டும்.
சுதந்திரப் போராட்ட காலத்தில், இரண்டாம் உலகப்போரின் இந்திய தாக்கத்துக்குத் தனியாகவும், கடல் போராட்டங்களுக்குத் தனியாகவும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளாமல் இந்த ஸ்கிரிப்ட்டை எழுதியிருக்கவே முடியாது என்கிற அளவில் அதற்கும் தனியாக சிம்பு தேவனை பாராட்டியாக வேண்டும்.
இம்சை அரசனில் ‘அக்காமாலா’ வை உள்ளே வைத்தது போல் 40 களில் நடக்கும் இந்தக் கதையில் ‘நக்கி, கொமோட்டோ’ என்று எதிர்கால ஃபுட் டெலிவரி கம்பெனிகளை நையாண்டியாக டெலிவர் செய்து தன் சிக்னேச்சரைப் பதிவு செய்யவும் தவறவில்லை அவர்.
இந்தச் சவாலான களத்தில் முதல் பாதி சற்றே தளர்வாக இருப்பதும், அந்தத் தளர்வைப் போக்குவதற்கென்று ஒவ்வொரு சூழ்நிலையையும் ஒவ்வொரு எபிசோடாகப் பிரித்து அவற்றுக்குத் தனி தலைப்புகள் கொடுக்கப்பட்டும் கூட அதன் வேகம் கூடவில்லை என்பது குறைதான்.
ஆனால் பின்பாதியில் வேகம் எடுக்கும் திரைக்கதை படம் முடியும் வரை படகைச் சீரான வேகத்திலேயே ஓட்டிச் செல்கிறது.
எந்தக் காட்சிகள் கடலுக்குள் படமாக்கப்பட்டன எந்தக் காட்சிகள் கிராபிக்ஸ் செய்யப்பட்டவை என்று தெரியாத அளவுக்கு அற்புதமாகப் படமாக்கி இருக்கும் மாதேஷ் மாணிக்கத்தின் திறமையையும், ஒரு இறுக்கமான பிரேமுக்குள்ளேயே பயணப்படும் இந்தப் படத்தின் பல்வேறு உணர்வுகளையும் இசையாகப் பதிவு செய்திருக்கும் ஜிப்ரானின் திறமையையும் உச்சிமோந்து மெச்சலாம்.
அந்த கர்நாடக கானாவுக்கு தனிப் பாராட்டு..!
இதே முயற்சி மலையாளத்தில் மேற்கொள்ளப் பட்டிருந்தால் அங்கே கொண்டாடி இருப்பார்கள் – அதன் தாக்கம் இங்கே பரவி இங்கேயும் புகழ்ந்து தள்ளி இருப்பார்கள்.
அந்த வகையில் இந்த சின்னஞ்சிறு படகுப் பயணம் இந்திய சுதந்திரம் எப்படிப்பட்ட போராட்டப் பெருங்கடலை எதிர் கொண்டு கடந்து கரை சேர்ந்தது என்று சொல்கிறது.
அத்துடன் சுதந்திர நாட்டின் அடிமைகளாக அதன் பூர்வ குடிகள் தொடர்ந்து துரத்தப்படுவதையும் கண்டனமாகப் பதிவு செய்திருக்கிறது.
போட் – நீட்..!
– வேணுஜி