எட்டு மாதங்கள் பூட்டிக் கிடந்த தியேட்டர்களை தூசி தட்டி திறக்க… தீபாவளியே வந்து விட்டது. உச்ச ஹீரோக்களின் படங்கள் வந்து விட்டாலே தியேட்டர்களில் தீபாவளிதான் என்றிருக்க, அப்படி இல்லாத இந்த Post Corona தீபாவளியில் ரசிகர்கள் கொண்டாட வந்திருக்கும் ஒரு படம்தான் பிஸ்கோத்.
பிஸ்கட் என்பதன் வழக்குச் சொல்தான் பிஸ்கோத். ஆங்கிலம் தமிழ் நாக்குகளில் புழக்கத்துக்கு வராத காலங்களில் பிஸ்கட் மட்டும் புழக்கத்துக்கு வந்துவிட வாயில் பிஸ்கட்டை அடைத்து மென்றுகொண்டே சொன்னார்களோ என்னவோ, அப்படி வந்ததுதான் பிஸ்கோத். இது சந்தானம் கதை நாயகனாகும் காமெடிப் படமென்பதால் இதுவே டைட்டிலுக்கு நியாயம் சேர்த்தும் விட்டது.
சிறிய பிஸ்கட் கம்பெனி ஒன்றை (சின்ன வயது சந்தானத்தின் அப்பா) ஆடுகளம் நரேன் நடத்திக் கொண்டிருக்க, அவருடன் தொழிலில் உதவியாக இருக்கிறார் அவரது நண்பர் ஆனந்தராஜ். அந்தச் சிறிய வயதிலேயே பிஸ்கட் விற்பனைக்கு சந்தானம் சொல்லும் ஐடியாக்கள் பெரிய அளவில் உதவி புரிய கம்பெனி வளர்கிறது. ஓயாத உழைப்பில் நரேன் உடல் நலிவுற்று இறக்க, ஆனந்த ராஜ் கம்பெனியை கையகப்படுத்தி சந்தானத்தை பணியாளாகவே வைத்திருக்கிறார். காலம் எப்படி அவரை மீண்டும் அந்தக் கம்பெனிக்குப் பொறுப்பேற்க வைக்கிறது என்பதை ஒரு Fairy Tale வடிவில் சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆர்.கண்ணன்.
இது ஒரு சரித்திரப் படமல்ல. ஆனால், மூன்று காலக்கட்டங்களில் சம்பவங்கள் நடப்பதாக வரும் வளமான கற்பனையில் சந்தானத்துக்கு இருக்கும் ஒரு நவீன கெட்டப்புடன் மூன்று காலக்கட்ட கெட்டப்புகள் மற்றும் இரண்டு ஹீரோயின் என்ற செட்டப்புகளும் இருப்பது கூடுதல் அம்சம். கெட்டப் மாறினாலும் தன் வழக்கமான ‘காமெடி பஞ்ச்’ களுடனும், தன் ஆஸ்தான நகைச்சுவைப் பட்டாளத்துடனும் நம்மை குதூகலிக்க வைக்கிறார் சந்தானம். அந்தப் பட்டாளத்தில் மொட்ட ராஜேந்திரனும், லொள்ளு சபா மனோகரும் முக்கிய இடம் பிடிக்கிறார்கள்.
அவரது கெட்டப்புகளில் பாகுபலி டைப்பும் ஒன்று உண்டு. அந்தக் காலக்கட்ட அரண்மனை அரசவையில் இவரது இந்நாள் வாழ்க்கையில் வில்லன்களான ஆனந்தராஜ், பரத் ரெட்டி இருப்பதுடன் மொட்ட ராஜேந்திரன், மனோகர் இருப்பதும் கூட ரசிக்க வைக்கும் அம்சங்களே…
மாமன்னர் ஆனந்தராஜ் அடிக்கும் மொக்கை ஜோக்குக்கு அரசவையே விழுந்து விழுந்து சிரிக்க, தளபதி சந்தனத்துக்கு மட்டும் சிரிப்பு வராமல் போவது நல்ல காமெடி. அந்தப் பெருங்குற்றமிழைத்த தளபதிக்கு குதிரை சாணி அள்ளும் தண்டனையை ஆனந்தராஜ் கொடுக்க, “குதிரை… சாணி போடலைன்னாஆஆஆ..?” என்று மனோகர் தன் ஸ்டைலில் சந்தேகம் கிளப்புவதும், ‘யானை சாணி அள்ள’ மன்னர் உத்தரவிடுவதும், “அவரே சும்மா இருந்தாலும் நீ எடுத்துக் கொடுக்கறியா…?” என்று மனோகரை சந்தானம் அப்புவதுமாக ‘அமர்க்கள’ களம்.
அதே மன்னர் ஆனந்தராஜ் கட்டவுட்டை (அப்போது கட்டவுட் கலாச்சாரம் இல்லை என்பதுதான் காமெடியே…) அந்நாள் அமைச்சர் பரத் ரெட்டி நிர்மாணிக்க முயல, அந்த முயற்சியில் கட்டவுட் கீழே சரிய ஆரம்பிக்கிறது. அப்போது குதிரை சாணி அள்ளிக் கொண்டிருக்கும் சந்தானம் முகத்தை மாஸ்க் செய்துகொண்டு வந்து அந்தக் கட்டவுட்டை சரியாமல் தூக்கி நிறுத்த அவரை அடையாளம் தெரியாமல் அதே மனோகர் “பாகுபலி… பாகுபலி…” என்று மொத்த மக்களையும் உசுப்பேற்ற மாஸ்க்கை அவிழ்க்கும் சந்தானம் “கொரோனாவுக்காக மூஞ்சியைக் கட்டியிருந்தா பாகுபலியா..? போய் கயித்த வலி..!” என்பதுவும் அதகளம்.
புதிதாக வாங்கிய டெலஸ்கோப்பில் பரத்ரெட்டி பாரா பார்க்க, அப்போது காளகேயர்கள் குதிரையில் வருவது தெரிய… பரபரப்படையும் ஆனந்தராஜ் அவர்கள் வருகையை உறுதி செய்து, அவர்களை அடக்கும் பொறுப்பை சந்தானத்திடம் ஒப்படைக்க… அவர் டெலஸ்கோப்பை பார்க்கும்போதும் அதே காளகேயர்கள் அதே தொலைவில் குதிரையில் வந்து கொண்டிருக்கிறார்கள். “என்னடா இது… காளகேயர்கள் ட்ரெட்மில்லில் குதிரை ஓட்றாங்களா..?” என்று டெலஸ்கோப்பை வானில், மண்ணில் என்று எப்படிப் பிடித்துப் பார்த்தாலும் அதில் காளகேயர்கள் தெரிய, அப்போதுதான் புரிகிறது, அது புதிதாக வாங்கப்பட்ட டெலஸ்கோப்பில் ஒட்டப் பட்டிருக்கும் Horse Brand ஸ்டிக்கர் என்பது. அதைப் பிய்த்து எறிந்ததும் பிரச்சினை ஓய்கிறது.
இப்படி சரித்திர காலத்திலும் கட்டவுட், ஸ்டிக்கர் என்று அநியாயத்துக்கு அதே ‘அதகள’ களம்..! மூன்று காலக்கட்டங்களிலும் இதே போன்ற நையாண்டிகள் நயமாக இருக்கின்றன.
சரி… சமகாலக் கதைக்குள் எப்படி சரித்திரக் காலம் வருகிறது..? அதற்கான லாஜிக்கை நம்பவைக்கதான் சௌகார் ஜானகியைக் கதைக்குள் கொண்டு வருகிறார் இயக்குநர். எண்பதைக் கடந்த அம்மணிக்கு இது 400 வது படமாம். 1981-ல் ‘தில்லு முல்லு’வில் பார்த்த அதே ஜாடை, அதே உணர்வுகளுடன் தெரிபவர், இறந்துபோன தன் பேரனை நினைத்து சந்தானத்துக்குக் கதைகளைச் சொல்ல, அந்தக் கதைகளெல்லாம் சரித்திர வடிவில் காட்சிகளாக விரிய, அதையொத்த சூழல்கள் சந்தானத்தின் வாழ்விலும் சமகாலத்தில் நடப்பது புதிய சிந்தனை.
சரித்திர காலத்தில் வானிலிருந்து காசு மழை பொழிந்ததாக சௌகார் ‘கதை விட’, “அது எப்படி..?” என்று கேட்கும் சந்தானத்திடம் “கதைன்னா அப்படித்தான் வரும்…” என்று சௌகார் சொல்லி மழுப்புகிறார். ஆனால், நவீன காலத்தில் அதே போன்ற சூழலில் பாலத்தின் மேல் விபத்துக்குள்ளான வங்கி வாகனத்திலிருந்து கொட்டும் பணம் பாலத்தின் கீழே வந்து கொண்டிருக்கும் சந்தானத்தின் மீது பண மழையாக விழுவது பொருத்தமான லாஜிக்.
அதை வைத்து இயக்குநர் சொல்ல வந்திருப்பது மூத்தோரின் அனுபவச் சொற்கள் நம்மை செம்மையாக வழி நடத்தும் என்பதே. அந்த வேடத்துக்கு சௌகாரை விட்டால் வேறு ஒரு சாய்ஸ் இல்லை.
நாயகிகளில் கூடுதல் அழகாகத் தெரியும் தாரா அலிஷா பெரி பாதிப்படத்தில்தான் வருகிறார். ஆனாலும் அவர்தான் சந்தானத்துக்கு நேரடி ஜோடி என்று பேலன்ஸ் செய்து விடுகிறார்கள். மீதிப்படத்தை ஸ்வாதி முப்பாலா ஆக்கிரமிக்கிறார். இவர்கள் இருவரும் சொல்லித்தான் தனக்கு யார் ஜோடி என்றே சந்தானத்துக்குத் தெரிய வருகிறது.
சண்முக சுந்தரத்தின் பளிச்சென்ற ஒளிப்பதிவும், ரதனின் தோதான இசையும் படத்துக்கு கூடுதல் நேர்த்தியைத் தருகின்றன. பாடல்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாததால் படம் சீக்கிரம் முடிந்து போகிறது. தொய்வில்லாமல் ஓடி சட்டென்று வந்து விடும் இடைவேளையும் படம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக இருந்திருக்கலாம் என்று நினைக்க வைக்கிறது.
ஆனந்தராஜ் வில்லனா இல்லையா என்ற சந்தேகம் கடைசி வரை நீடிக்கிறது. அதேபோல் பரத் ரெட்டியாவது ஏதாவது வில்லத்தனம் செய்வார் என்று பார்த்தால் அவரது நிலையும் காமெடியாகி விடுகிறது. இயக்குநருக்கே இது புரிந்து கடைசியில் சந்தானத்தையே கொஞ்சம் வில்லத்தனம் செய்ய வைத்திருக்கிறார்.
என்னதான் காமெடிப்படம் என்றாலும் கடைசியில் குழந்தைகளின் உணவான பிஸ்கட்டில் செயற்கை ரசாயணங்களைக் குறைத்து சிறுதானியச் சேர்ப்பின் அவசியத்தை வலியுறுத்தும் இயக்குநர் நிமிர்ந்து நிற்கிறார்.
பொதுவில் ‘கிரீமி லேயர்’ ஆடியன்ஸுக்கான நகைச்சுவையாக இல்லாமல் பி அன்டு சி, டி என்று எல்லா தரப்பு ரசிகர்களையும் சிரிக்க வைக்கும் இது ‘கிரீம் பிஸ்கோத்..!”
– வேணுஜி