January 19, 2022
  • January 19, 2022
Breaking News
October 25, 2019

பிகில் திரைப்பட விமர்சனம்

By 0 624 Views

அமீர் கான் ‘டங்கல்’ படத்திலும், மாதவன் ‘இறுதிச் சுற்று’ படத்திலும், சிவகார்த்திகேயன் ‘கனா’விலும், சசிகுமார் ‘கென்னடி கிளப்’பிலும்… பெண்களின் முன்னேற்றத்துக்குக் குரல் கொடுத்த கதையெல்லாம் பழசாகிப்போனது விஜய்க்கு… இயக்குநர் அட்லீக்கு… கதையைக் கேட்ட தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்துக்கு… ஒருவருக்குமா தெரியவில்லை..?

இவ்வளவு ஏன்..? நேற்று முளைத்த ஹிப் ஹாப் ஆதி கூட ‘நட்பே துணை’ படத்திலும் இதே டெம்ப்ளேட் கதையில்தான் நடித்து அவரளவில் ஹிட் அடித்தார்..!

ஒரு முன்னாள் விளையாட்டு வீரர் சந்தர்ப்ப வசத்தால் விளையாட்டில் சாதிக்க முடியாமல் போய், பின்பு அவர் ஒரு அணிக்கு ‘கோச்’ ஆகி, முரட்டுத்தனமாக நடந்து, பின்னர் அணி வீரர்கள் / வீராங்கனைகளின் நன் மதிப்பைப் பெற்று அவர்கள் தன்னம்பிக்கை ஊட்டும் கதை 1982-ல் வெளியான ‘அன் ஆபீஸர் அன்ட் எ ஜென்டில்மேன்’ படம் முதல் எத்தனை கால புளித்த மாவு..?

(அந்த “சத்தமா… கேக்கலை…” வசனம் மேற்படி 1982 படத்திலிருந்து பல படங்களில் சுடப்பட்டு விட்டது. அது அட்லீக்கும், விஜய்க்கும் மட்டுமே புதிதாகத் தெரிந்திருக்கிறது…)

“ஆனாலும், பரவாயில்லை புளித்த வாசனை வராமல் கிராபிக்ஸ் வெங்காயம் போட்டு ஒரு ஊத்தப்பம் ஊத்திக் கொடுங்க..!” என்று விஜய் விரும்பியதில் அட்லீ என்ற சமையல்காரரைக் கொண்டு ஏஜிஎஸ் 150 கோடியில் சுட்டு தங்கத்தட்டில் பரிமாறியிருக்கும் ‘ஆனியன் ஊத்தப்பம்’தான் இந்தப்படம்.

இந்த புளித்த மாவுக்கு “என் கதை…” என்று இருவர் கோர்ட்டில் கேஸ் வேறு போடுகிறார்கள்.

மைக்கேல் என்ற பிகிலாக ஒரு விஜய், ராயப்பன் என்ற அப்பா கேரக்டரில் இன்னொரு விஜய்…

அப்பாவுக்கான முதிர்வை உடல் மொழியில் காட்டவும் முடியாமல், ஆனால், காட்டியாக வேண்டி தொண்டைக் கமறலோடு விஜய் பேசுவது அவர் கேரியரில் புது ஐட்டமாக இருக்கலாம். ஆனால், சமீபத்தில்தான் இதே போன்ற கேரக்டரில் தனுஷ் என்ற ‘நடிப்பு அசுரன்’ அற்புதமாக ஸ்கோர் பண்ணிவிட்டுப் போனார். 

இதைப்போன்ற வித்தியாசமான வேடங்களில் நடிக்க உண்மையிலேயே விஜய் ஆசைப்பட்டால் இங்கு அவருக்கு உதவ மணிரத்னம், அமீர், வெற்றிமாறன், ராம் என்றெல்லாம் மிகத்திறமையான இயக்குநர்கள் இருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு விஜய் இப்படி ஒரு விஷப் பரீட்சையில் இறங்கியிருக்க வேண்டாம். 

‘மைக்கேல்’ என்ற ‘பிகில்’ மட்டுமே நடிப்பில் ஆறுதல் தருகிறார். அப்பாவின் கனவை நிறைவேற்றும் மகனாக ஆனதிலும் சரி… தன்னைச் சார்ந்த மக்களுக்காகப் போராடும் ‘தாதா’ ஆனதிலும், சரி… தடைகளை எதிர்த்து பெண்கள் முன்னேற உதவும் ‘கோச்’ ஆனதிலும் சரி… அந்தப் பாத்திரத்தில் விஜய் ரசிக்க வைத்து விட்டுப் போவது மகிழ்ச்சி. இந்த லைன்தான் அவருக்கு இந்தப் படத்தில் பிடித்திருக்க வேண்டும்.

இது அந்தக் கதையல்ல… வேறு கதை என்று காட்ட முயன்றதிலும், இரண்டு விஜய்யை மூன்று விஜய்யாகக் காட்ட மெனக்கெட்டதிலும், அப்பா பாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க முனைந்ததிலும் முன்பாதிப்படம் பெரு மூச்சு விட வைத்ததுதான் மிச்சம்.

ஆனால், நல்ல வேளையாக இரண்டாவது பாதிப்படம் நம்மை அதிகம் யோசிக்க விடாமல் பரபரப்பான திரைக்கதையிலும், பிரமாண்ட படமாக்கத்திலுமாக கடந்துவிடுகிறது. 

படத்தின் மெயின் பலம் ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவும், கிராபிக்ஸும். வர வர வீட்டுக்குள்ளேயே ‘கிரீன் மேட்’ கட்டி படமெடுத்து விட்டு கோடிகளைக் கொட்டி கிராபிக்ஸில் இப்படி அசத்திவிடலாம் போலிருக்கிறது. படம் முழுக்க ‘கம்ப்யூட்டர் கேம்’ போல ஒரு பிரமை.

படத்தில் விஜய்யே பிரதானமாக இருப்பதால் நாயகி நயன்தாரா சில காட்சிகளில் வந்து டூயட் பாடி விஜய்யைக் காதலித்து விட்டுப் போவதோடு சரி, வில்லன்கள் ஐ.எம்.விஜயன், ஜாக்கி ஷெராப்புக்கும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அழுத்தமான பாத்திரப்படைப்பு இல்லை. ‘பரியேறும் பெருமாளி’ல் பெரிய பெயர் வாங்கிய கதிர், மூன்றாம் வில்லன் டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், ரோகிணி எல்லோருக்கும் இதில் “வரிசையில் வந்து பிரசாதம் வாங்கிக்கங்க…” என்ற அளவில்தான் வாய்ப்புகள்.

வீராங்கனைகள் இந்துஜா, ரெபா மோனிக்கா ஜான், அம்ரிதாவெல்லாம் சிறந்த வீராங்கனைகளாகத் தெரிவதில் கிராபிக்ஸ் கலைஞர்களுக்குதான் அட்லீயை விட்டு தங்க மோதிரம் போடச் சொல்ல வேண்டும். இந்துஜாவின் இடுப்பு சுற்றளவுக்கு அவரெல்லாம் கால்வாசி அளவுக்காவது கால்பந்து விளையாட முடியுமா..?

காமெடியன்களில் யோகிபாபு மட்டுமே கொஞ்சம் ஸ்கோர் செய்கிறார். விவேக் பாவம்… அவரே ஜோக்கடித்து அவரே சிரிப்பதோடு சரி..!

‘மைக்கேல்’ ஆக விஜய் வருவதிலும், வில்லன் ‘சர்மா’வாக ஆனதிலும் இருக்கும் அரசியலைப் புரிந்து கொண்டவர்கள் புத்திமான்கள்.

ஏற்கனவே பெரிய அளவில் ஹிட்டான ஏ.ஆர்.ரஹ்மானின் இந்தப் படப் பாடல்கள் படத்தில் அதிகமாகக் கவரவில்லை. 

ஒரு படைப்பில் இருந்து எடுத்தால் திருட்டு – பல படைப்புகளில் இருந்து எடுத்தால் ‘திரட்டு’ என்பார்கள். அந்த அளவில் அட்லி முயன்றிருக்கும் ‘திரைத் திரட்டு’ இந்தப்படம். 

பிகில் – ‘புள்ளீங்கோ…’ மட்டும் கொண்டாடலாம் – பண்டிகைக்காலம்… கொண்டாடி விட்டுப் போகட்டுமே..!