April 23, 2024
  • April 23, 2024
Breaking News
January 5, 2020

அவனே ஸ்ரீமன் நாராயணா திரைப்பட விமர்சனம்

By 0 726 Views

கதை எந்தக் காலக்கட்டத்தில் நடக்கிறது என்றெல்லாம் சிண்டைப் பிய்த்துக்கொள்ளத் தேவையில்லாமல் லாஜிக்குடன் மூளையையும் கழற்றி வைத்துவிட்டு ஜாலியாக ஒரு படம் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் சென்றால் ஓரளவுக்கு அதை நிறைவேற்றுவான் – அவனே ஸ்ரீமன் நாராயணா.

ஒரு ரயிலைக் கொள்ளயடித்து செட்டிலாவதை லைஃப் டைம் ஆம்பிஷனாக வைத்திருக்கும் ‘ஆபிரா’ எனும் கொள்ளையர் கூட்டம். ஆனால், அமராவதி ஏரியாவில் கிட்டத்தட்ட சம்பல் கொள்ளையர்களைப் போல அபாயகரமானவர்களாக இருக்கும் அவர்களால் முடியாத அந்த கொள்ளையை ‘ஜஸ்ட் லைக் தட்’ ஒரு அப்பாவி நாடகக் கும்பல் முடித்து அதை மறைத்தும் வைத்துவிடுகிறது. அது எப்படி என்று கேட்டால் அடுத்த சீனுக்குள் போக முடியாது நாராயணா…

புதையலைத் தேட்டை போட்ட அந்த நாடகக் குழுவைச் சேர்ந்த 6 பேர் மட்டும் ஒரு கன்டெய்னர் லாரியுடன் அந்த முட்டாள் கொள்ளையர் கூட்டத் தலைவர் மதுசூதன் ராவிடம் சிக்க, கன்டெய்னருக்குள் புதையல் இருக்கிறதா இல்லையா என்று கூடப் பார்க்காமல், நீள நீள வசனங்களைப் பேசி நம்மையும், அவர்களையும் டார்ச்சர் செய்து அவர்களைக் கொன்றுவிடுகிறார். எதிர்பார்த்தபடியயே, கன்டெய்னருக்குள் அந்தப் புதையல் இல்லை.

அதில் நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் விழும் மதுசூதன் ராவ், யார் அந்தப் புதையலைக் கண்டுபிடித்துக் கொண்டு வருகிறாரோ, அவர்தான் அடுத்த தலைவன் என அறிவித்து விடுகிறார். அதனால் காண்டான அவரது நேரடி வாரிசு பாலாஜி மனோகர் அவரது கதையை முடித்து வைக்க, வைப்புக்குப் பிறந்த இன்னொரு வாரிசான ப்ரமோத் ஷெட்டியையும் விரட்டி விடுகிறார்.

வருடங்கள் உருண்டோட புதையல் மட்டும் அகப்படவேயில்லை. அதை மோப்பம் பிடித்து நாயகன் ரக்‌ஷித் ஷெட்டி, சேனல் ரிப்போர்ட்டர் ஷன்வி ஸ்ரீவஸ்தவா என்று இரண்டு குரூப்புகள் முயல, என்ன ஆயிற்று என்ப்து மீதிக்கதை. என்ன ஆயிருக்கும் என்று அம்மாவின் வயிற்றிலிருக்கும் சிசு கூட சொல்லிவிடும். 

என்ன தைரியத்தில் இதையெல்லாம் படமாக எடுத்து தெலுங்கு, மலையாளம், தமிழ், இந்தி மொழிகளில் ‘டப்’ வேறு செய்கிறார்கள் என்ற கேள்விக்கு இரண்டு விடைகள். ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ உள்ளிட்ட ட்ரஷர் ஹன்ட் படங்கள் உலகெங்கிலும் வரவேற்பைப் பெற்றதும், அதை வைத்து கன்னடத்தில் எடுக்கப்பட்டு கடந்த வருட இறுதியில் வெளியாகி கல்லா கட்டிவிட்டதும்தான் அவை.

நாயகன் ரக்‌ஷித் ஷெட்டிக்கு ஆக்‌ஷனும், காமெடியும் கைகொடுத்திருக்கின்றன. கதாநாயகி ஷன்வி காதலுக்கு மட்டுமில்லாமல் கதையை நகர்த்திச் செல்ல உதவியிருக்கிறார். கான்ஸ்டபிளாக நடித்துள்ள அச்யுத் குமார் பிற படங்களில் முறைப்பாக வருவார். இதில் சிரிக்க வைத்திருப்பது சிறப்பு. 7 அடி உயர வில்லன் பாலாஜி மனோகர் மிரட்டுகிறார்.

படத்தின் முதல் பாதி ஆனாலும் நீளம். சற்றே ரிலாக்ஸ் ஆகி விட்டு சுவாரஸ்யப்படும் இரண்டாம் பாதியைப் பார்க்கலாம். .

கர்ம் சாவ்லாவின் ஒளிப்பதிவு சுகம். லோக்நாத்தின் பின்னணி இசை அற்புதம்.

அவனே ஸ்ரீமன் நாராயணா – அலுப்பான ஜவ்வு மிட்டாய்..!