நண்பனைப் பார்த்துவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருக்கும் நமிதா பிரமோத் மற்றும் அவரது கணவன் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் நமிதா பிரமோத்தின் கணவர் கொல்லப்படுகிறார்.
அந்த தாக்குதலை பார்வையிட்டவர்களில் சிலர் அந்தத் தாக்குதலை நிகழ்த்தியது பெண் என்றும் வேறு சிலர் பேய் என்றும் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் போலீஸ் விசாரிக்க , நமிதா பிரமோத்தின் சகோதரன் காளிதாஸ் ஜெயராம் தன் பங்குக்கு காரணம் தேடிக் களம் இறங்குகிறார்.
ஆனால், இது எப்படி நிகழ்ந்தது என்பது இதுவரை எந்தக் கதையிலும் வராத வித்தியாசக் கற்பனையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் வினில் ஸ்காரியா வர்கீஸ்.
அதில் அவள் பெயர் ஏன் ரஜ்னியாக இருக்கிறது என்பதும் புரிகிறது.
நமீதா பிரமோத் அத்தனை அழகாக நடித்துள்ளார் . காளிதாஸ் ஜெயராமுக்கு நடிப்பு சொல்லி வர வேண்டியதில்லை. அதேபோல் ரெபா மோனிகா ஜானின் நடிப்பும் இயல்பு .
சிவபெருமானை ஆணாகி பெண்ணாகி நின்றான் என்று ஆச்சரியமாகப் பாடுவார்கள். ஆனால், அதையும் தாண்டி இந்தப்படத்தில் ஆண், பெண் ஆகிய கெட்டப்புகளில் மட்டுமல்லாது திருநங்கையாகவும் அசத்தலாக நடித்து ஆச்சரியப் படுத்தியிருக்கிறார் பிரியங்கா சாய்.
ஆட்டோ டிரைவராக வரும் கருணாகரன் கூடவே பலான சப்ளையராகவும் இருக்கிறார். சில இடங்களில் சிரிக்க வைத்து தன் பங்களிப்பை செட்டில் செய்கிறார் அவர்.
விஷ்ணுவின் ஒளிப்பதிவு, 4 மியூசிக்கின் இசை எல்லாமே நேர்த்தி.
இத்தனை சிறப்புகள் இருந்தும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் ஒட்டுமொத்த சிறப்பைப் பெற்றிருக்கும் இந்தப் படம்.
அவள் பெயர் ரஜ்னி – டேஞ்ஜூரஸ்..!