November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சினிமாவை மிஞ்சும் மோசடி முயற்சி – ஔடதம் தயாரிப்பாளரின் கண்ணீர்க்கதை
April 15, 2019

சினிமாவை மிஞ்சும் மோசடி முயற்சி – ஔடதம் தயாரிப்பாளரின் கண்ணீர்க்கதை

By 0 918 Views
கடந்த நான்கு மாதங்களாக சென்னை உயர்நீதி மன்றத்தால் தடை செய்து வைக்கப்பட்டிருந்த ‘ஒளடதம்’ திரைப்படம் அத்தடையிலிருந்து விடுதலை பெற்றுள்ளது. எதற்கு தடை..? எப்படி விடுதலை..?
 
புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் குறித்து ‘ஒளடதம்’ படத்தின் தயாரிப்பாளர்  கண்ணீருடன் தன் அனுபவத்தைக்  கூறினார். அது திரைப்படத்தை மிஞ்சும் கதையாக இருக்கிறது. நீதிமன்றம் கயவர்களின் தலையில் சம்மட்டியடி கொடுத்து தயாரிப்பாளரைக் காப்பாற்றிய கதை இதுதான்.
 
ரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் சார்பாக நேதாஜி பிரபு தயாரிப்பில் ரமணியின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஒளடதம். நான்கு மாதங்களுக்கு முன்னரே சென்சார் செய்யப்பட்டு வெளியிடத் தயாராகப் பத்திரிகைகளில் முறைப்படி தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சிலரின் உண்மைக்கு மாறான தவறான சித்தரிப்புகளால் சென்னை உயர் நீதி மன்றம் தடை விதித்தது.
 
இப்படத்தைத் தயாரித்த நேதாஜி பிரபு ஒரு சிறிய தயாரிப்பாளர்..அவரே கதை எழுதி கதாநாயகனாகவும் நடித்துத் தயாரித்த படம் தான் ஒளடதம். தனது முதல் முயற்சி சிறிய பட்ஜெட் படம் என்றாலும் நல்ல கருத்துக்களுடன் ஒரு தரமான படமாக இருக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்து பாடுபட்டுத் தயாரித்த படம் இந்த  ஒளடதம்.
 
இப்படத்தின் இயக்குநர் ரமணி மலையாளத் திரை உலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான டி.வி.சந்திரனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.
 
இந்தியாவின் குடும்ப வியாதி என்று சொல்லத்தக்க எழுபது மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சர்க்கரை வியாதிக்கான மாத்திரை தயாரிப்பில் நடைபெறும் சமூக விரோத நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் திரைப்படம்தான் ஒளடதம். தயாரிப்பாளரே இப்படத்தை வெளியிடத்தயாராய் இருந்த நிலையில் எஸ்.அஜ்மல்கான் என்பவர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து படத்தைத் தடை செய்து விட்டனர்.
 
ஒரு ஏமாற்று எம் ஓ யு அடிப்படையில் மூன்று மாதத்திற்குள் படத்தை வெளியிடுவதாகவும்  அதற்குள் பேசிய தொகையைக் கொடுத்து விடுவதாகவும் ஒப்புகொண்டு, பணத்தையும் கொடுக்காமல் மூன்று மாதத்திற்கு மேல் பல மாதங்களையும்  கடத்தினர். சட்டப்படி அவர்களது ஒப்பந்தம் காலாவதியானபின் தயாரிப்பாளர் படத்தைத் தானே வெளியிட முன் வந்தார்.
 
இந்த சமயத்தில்தான் கோடிகளில் ரூபாயைக் கொடுத்து படத்தை வாங்கியுள்ளதாகப் பொய்ப்பத்திரங்கள் தயார் செய்து, படம் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடி மேற்படி அஜ்மல்கான் கோஷ்டியினர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தடை வாங்கி விட்டனர்.
 
தயாரிப்பாளர் அளித்திருந்த லைசென்ஸ் போட்டோ காப்பியில் உள்ள அட்டஸ்டேஷன் கையெழுத்துக்கு மேல் கோடிகளில் ரூபாயைப் பெற்றுக்கொண்டுள்ளதாக எழுதி நீதிமன்றத்தில் காட்டியுள்ளனர். இப்படிப்பட்ட கிரிமினல் வேலைகள் நடப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதன்முறை.
 
எத்தனையோ போராட்டங்களுடன் படத்தை எடுத்து முடித்த நேதாஜி பிரபு சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதி அரசர் முன்னால் தனது பக்கத்தின் நியாயங்களை எடுத்துச் சொல்லி கடந்த நான்கு மாதங்களாகப் போராடி இப்பொழுது வெற்றி பெற்றிருக்கிறார்.
 
மேலும் குறிப்பிட்ட இந்த நபர் இதைப்போல் இன்னும் சில தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்களையும் ஏமாற்றியிருக்கிறார் என்பதை தக்க சாட்சியங்களுடன் நிரூபித்திருக்கிறார்.
 
இந்த கோஷ்டியினர் இதையே தங்களது தொழிலாக வைத்துக்கொண்டுள்ளனர் என்றும் இனிமேல் குறிப்பிட்ட இவர்களுடன் எந்தவிதத் தொடர்பும் தமிழ்த்திரையுலகினர் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் இவர்கள் கடைந்தெடுத்த ஏமாற்றுக்காரர்கள் எனவும் நீதி அரசர் தனது தீர்ப்பில் எழுதி அவர்களின் செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்..
 
இவ்வழக்கை சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர்கள், கே.எஸ்.சாரநாத்,  D.வீரக்குமார் மற்றும் K.செல்வராஜ் ஆகியோர் மிகத்திறம்பட நடத்தி வெற்றி கண்டுள்ளனர்.
 
விரைவில் ஒளடதம் திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைத் தொடங்க உள்ளதாகக் கூறுகிறார் நேதாஜி பிரபு.
 
உஷாரய்யா… உஷாரு..!