July 15, 2024
  • July 15, 2024
Breaking News
June 20, 2023

அஸ்வின்ஸ் திரைப்பட விமர்சனம்

By 0 264 Views

சில படங்கள் சிலரால் எதிர்பார்க்கப்படும். அந்த சிலர் நடிகராகவோ இயக்குனராகவோ இசையமைப்பாளராகவோ இருக்கக்கூடும். அப்படி உச்ச நட்சத்திர அந்தஸ்தில் இல்லாவிட்டாலும் தன்னுடைய வித்தியாசமான தேடலால் வசந்த் ரவியின் படங்கள் எதிர்பார்க்க வைக்கின்றன.

அப்படித்தான் எதிர்பார்க்கப்பட்டது அஸ்வின்ஸ் . அவரும் இயக்குனர் தருண் தேஜாவும் கைகோர்த்து மிரட்டி இருக்கும் படம்தான் இது.

ஒரு காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் புனை கதைக்கும், இப்போது நடந்து கொண்டிருக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்பது இடைவேளை வரை புரியாது. அதற்குப்பின் கவனித்தால் எல்லா விஷயங்களுக்கும் ஒரு முடிச்சு இருப்பது புரியும்.

தற்போதைய காலகட்டத்தில் வசந்த் ரவி, சரஸ் மேனன், முரளிதரன் , உதயாதீப் உள்ளிட்ட யூடியூப் சேனல் நடத்தும் ஐவர் குழு லண்டனில் தனித்த தீவில் உள்ள அமானுஷ்ய மாளிகைக்குப் பயணிக்கிறது. அங்கே தங்கி இருந்து அமானுஷ்யங்கள் பற்றி ஆராய்ந்த ஆர்த்தி என்பவரும் அவருடன் இருந்த 15 பேரும் அகால மரணம் அடைய, ஆர்த்தியும் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. 

அந்த இடத்துக்கு இவர்கள் ஏன் பயணிக்க வேண்டும்..? விஷயம் இருக்கிறது. அங்கே வருகிறது ‘பிளாக் டூரிசம்’ என்கிற புதிய ஐட்டம்.

இப்படி படுபாதக செயல்கள் மற்றும் அமானுஷ்யங்கள் நடந்ததாகச் சொல்லப்படும் இடங்களைப் பார்வையிடுவதற்கு என்றே சில சுற்றுலா விரும்பிகள் வருகின்றனர். அதுதான் பிளாக் டூரிசம் என்பது.

அப்படிப்பட்ட இடங்களுக்கு இவர்களை வரவேற்பதற்கென்று சில புரமோட்டர்கள் இருக்க, அப்படி இந்த இடத்தைப் படம் பிடிக்க, இந்த யூடியூப் பார்ட்டிகளுக்கு  அசைன்மென்ட்டும் பெரிய தொகையும் கிடைக்க அதற்காக இவர்கள் அங்கே வருகின்றனர். வந்த இடத்தில் அமானுஷ்யத்தில் அவர்களும் சிக்கிக் கொள்ள என்ன நடந்தது என்பதே மீதிக் கதை.

இப்படிப்பட்ட வேடங்களை விரும்பி ஏற்று நடிக்கும் வசந்த் ரவியின் துணிச்சலைப் பாராட்டியே ஆக வேண்டும். அந்த அமானுஷ்ய கட்டடத்துக்குள் நுழையும் முன்னரே அவரை யாரோ அழைப்பதும், ஆட்கொள்வதுமாக உணரும் கட்டங்களில் அற்புதமாகச் செய்திருக்கிறார். 

ஒரு கட்டத்தில் உடன் வந்த நால்வருமே கொல்லப்பட்டதாகத் தெரியவர அப்படி அவர்களைக் கொன்றதும் தானேதான் என்று ஒளிப்பதிவான காட்சிகள் மூலம் அறிந்து அவர் திடுக்கிடுவது நம்மையும் திடுக்கிட வைக்கிறது.

கடைசியில் நண்பர்கள் உயிரை மீட்க அவர் மேற்கொள்ளும் முயற்சி புல்லரிக்க வைக்கிறது. அதில் எந்த மனிதனும் மனோதிடம் இருந்தால் எந்த ஆபத்தையும் எதிர்கொள்ள முடியும் என்கிற செய்தியும் நமக்குக் கடத்தப்படுகிறது.

அவருடன் நடித்த நால்வரும் அவரவர் பங்கினை சரியாகச் செய்திருக்கிறார்கள்.

அமானுஷ்யங்களை ஆராய்ச்சி செய்யும் ஆர்த்தியாக விமலா ராமன் நடித்திருக்கிறார். அவருக்கு நேரும் அனுபவங்களைக் காண நேர் கையில் “எதற்கு இந்த விஷப்பரீட்சை..?” என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால் அந்தப் பாத்திரத்தை அற்புதமாகக் கையாண்டு நடித்திருக்கிறார் விமலா.

இந்தப் படத்தில் ரவியை அடுத்து ஹீரோவாகி இருப்பது படத்தின் ஒலிப்பதிவுதான். அது வேற லெவல் என்றால் மிகை இல்லை. அங்கங்கே நம்மை தூக்கி வாரிப் போடச் செய்வது மட்டுமல்லாமல் படத்துக்குள் நம்மை பயணிக்க வைப்பதும் ஒலிக்கலவைகளின் வேலைதான். ஹாலிவுட் லெவலை ஒலிப்பதிவில் தொட்டிருக்கும் சச்சினும் ஹரியும் பாராட்டுகளுக்கும், விருதுகளுக்கும் உகந்தவர்கள்.

அவர்களின் முயற்சிக்கு உறுதுணையாக பயணித்திருக்கிறது விஜய் சித்தார்த்தின் மிரட்டலான பின்னணி இசை.

எட்வின் சகாயின் ஒளிப்பதிவும் இன்னொரு ஹீரோதான். கதை நடக்கும் இடமான லண்டனில் அந்த தனித்தீவுக்கு செல்ல கடல் நடுவே சில மணி நேரங்கள் பாதை உருவாவதும் பின்னர் அந்தப் பாதை கடலால் மூழ்கடிக்கப்படுவதும் டாப் கிளாஸ்.

இயற்கையின் அந்த விந்தையைக் கழுகுப் பார்வையில் நமக்கு காட்டி பிரமிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர். டான் பாலாவின் கலை இயக்கமும் , இயக்குனரின் முயற்சிக்கு வலது கரமாகி இருக்கிறது.

கதையைப் புரிந்துகொண்டு அதனுடன் பயணப்படுவது இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் கொஞ்சம் சவாலான வேலைதான். ஆனால் தொழில்நுட்ப தரத்தை உலக உயரத்துக்கு கொடுத்த வகையில் இதுவரை தமிழ் படங்கள் எட்டாத இடத்தை இந்தப் படம் எட்டி இருக்கிறது.

அந்த அனுபவத்துக்காகவே இந்தப் படத்தைத் தவறாமல் பார்க்கலாம். 

தமிழ்ப் படம் பார்க்கும் உணர்வே வராமல் உலகப்படம் பார்க்கும் அனுபவத்தை இந்த படம் தந்திருக்கிறது. இதற்கான முன் கதையை மட்டும் இன்னும் கொஞ்சம் லாஜிக்குடன் நம்பகமாக எடுத்திருந்தால் இன்னும் படம் நம்மை பாதித்திருக்கும்.

உண்மையில் இந்த படத்தின் கதை குழந்தைகளுக்கானதுதான் ஆனால் தொழில்நுட்ப உத்தியில் குழந்தைகளை உள்ளே வரவிடாமல் பயமுறுத்தி விட்டது இந்தப் படம்.

அஸ்வின்ஸ் – அமானுஷ்ய ஆர்ப்பாட்டம்..!