தோல்வி ஒரு மனிதனை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று சொல்கிற கதை. அதை ஒரு இன்வெஸ்டிகேடிவ் திரில்லராகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால்.
குளுகுளுவென்று கொடைக்கானலில் தொடங்கும் கதை ஒரு தற்கொலையின் காரணத்தால் சூடாகிறது. அடிவயிற்றில் கத்தியை இறக்கித் தற்கொலை செய்து கொள்கிறான் ஒரு இளைஞன்.
அதைப் பற்றிய புலன் விசாரணை செய்கிற வேலை, விடுப்பில் இருக்கும் காவல் அதிகாரியான நாயகன் ஷாமிடம் வந்து சேர்கிறது.
அதைப் பற்றிய விசாரணையில் இறங்கும்போது இதே போன்று வேறு சில தற்கொலைகளும் மற்ற ஊர்களில் நடந்திருப்பது தெரிய வருகிறது. அதன் பின்னணியை ஆராய்ந்து கிட்டத்தட்ட விசாரணை முடிவுக்கு வரும் வேளையில் ஷாமின் வீட்டில் வைத்து அவர் கண்முன்னே அடுத்தடுத்து இரண்டு தற்கொலைகள் நிகழ, விசாரணை நடத்தும் பொறுப்பில் இருந்து ஷாம் விடுவிக்கப்படுகிறார். அதற்குப் பின் என்ன நடந்தது என்பது மீதிக் கதை.
ஷாமின் உடற்கட்டும், மேட்டிமையான நடிப்பும் விசாரணை அதிகாரி வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறது. உண்மையை நெருங்கும் வேளையில் பொறுப்பிலிருந்து மேலதிகாரி தன்னை விடுவிக்கும்போது அவர் படும் வேதனையை நாமே உணர முடிகிறது.
ஷாமின் நச்சென்ற உடற்கட்டுக்குப் பொருத்தமாக வருகிறார் நாயகியாக வரும் நிரா. நிராவின் தாயாகும் ஆசை நிராசையாகப் போவது தனிக்கதை. (அதற்கும் கிளைமாக்ஸில ஒரு முடிவு வைத்திருப்பது சற்றே கிரிஞ்ச்…)
ஷாமின் உதவியாளராக வரும் புதுமுக இளைஞர் ‘தயாரிப்பாளருக்கு சொந்தக்காரர் போல…’ என்று நினைக்கும் அளவில் ஷாமுக்கு நிகரான வேடத்தில் படம் நெடுக வந்திருக்கிறார்.
இவர்தான் வில்லன் என்று கிட்டத்தட்ட ஷாம் மட்டுமில்லாமல் நாமும் நினைக்கும் வேளையில் அதற்கு சம்பந்தம் இல்லாமல் ஆனால், ஷாமுக்கு உதவும் மனோதத்துவ நிபுணராக நிழல்கள் ரவி, கச்சிதமாக நடித்திருக்கிறார். ஆனால், மீண்டும் விசாரணை பந்து அவர் கோர்ட்டில் வந்து நிற்பதும், அவரும் அடி வயிற்றில் கத்தியை இறக்கிக் கொள்வதும் அந்தோ பரிதாபம்..!
இதன் அடிப்படை உண்மை என்ன என்பதற்கான பிளாஷ்பேக் கதை ரசிக்க வைக்கிறது. அதில் தன்னையும் அறியாமல் ஷாமும் இடம் பெறுவதும் எதிர்பாராத சஸ்பென்ஸ்.
ஃபிளாஷ் பேக்கில் வரும் வில்லனின் தந்தை ஜீவா ரவியின் நிலைதான் மிகவும் பரிதாபம். மகனைத் திருத்தவே முடியாமல் அவரும் மாண்டு போவது கொடுமை.
உளவியல் சிக்கலுக்கு ஆளான வில்லன் விதேஷும் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார்.
இவர்களுடன் ஒரு கவனிக்கத்தக்க பாத்திரத்தில் வந்து போகிறார் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால்.
இசையமைப்பாளர் கே எஸ் சுந்தரமூர்த்தி மற்றும் ஒளிப்பதிவாளர் கல்யாணின் பங்கும் பாராட்டத் தக்கது.
ஒரே மாதிரியான கொலைகள் நடந்திருக்கின்றன எனும் போது அதன் பின்னணி கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அதற்கான விசாரணைகளை ஒரு பத்து ஷாட்டில் முடிக்காமல் முன்பாதி வரை இழுத்துக் கொண்டே போவது அலுப்பைத் தருகிறது.
இதனைச் செதுக்கி மேலும் பல சுவாரசிய காட்சிகளைச் சேர்த்து இருந்தால் படம் தொடங்கியதில் இருந்தே விறுவிறுப்பைத் தந்திருக்கும்.
சதுரங்க விளையாட்டில் வென்றால் சைனீஸ் ஸ்டைலில் தீர்ப்பு என்பது புதுமையான அஸ்திரப் பிரயோகம்தான்.
ஆனால், செஸ் விளையாட்டில் அதிகபட்ச கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி இன்று இந்தியா உலக அரங்கில் உயர்ந்து நிற்க, அதை அடிப்படையாக வைத்து, “ஜெயிச்சா போட்டுத் தள்ளுவேன்..!” என்பது நியாயமா இயக்குநரே..?
அஸ்திரம் – அடிவயிறு பத்திரம்..!
– வேணுஜி
☑