December 12, 2024
  • December 12, 2024
Breaking News
March 3, 2023

அரியவன் திரைப்பட விமர்சனம்

By 0 675 Views

“மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்..!” இதுதான் படத்தின் மையக்கரு. இதை நாம் நன்கறிந்த பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை ஒத்த ஒரு சம்பவத்துடன் சம்ஹாரமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் மித்ரன்.ஆர்.ஜவஹர்.

கடத்தி வரப்பட்ட ஒரு பெண்ணை சிலர் பாலியல் பலாத்காரம் செய்ய, அதை ஒருவன் வீடியோ எடுப்பதிலிருந்து படம் தொடங்குகிறது. அதற்குப் பின்னால் பெண்களை இப்படி வயப்படுத்தும் ஒரு கும்பலே இயங்கி வருவதும் காட்சிப்படுத்தப்படுகிறது.

இதற்கு நேர் எதிர் மறையாக கபடி விளையாட்டு வீரராக நாயகன் இஷான் அறிமுகம் ஆகிறார். அவரது காதலி பிரணாலியின் அறைத் தோழி தற்கொலைக்கு முயல, அதை பிரணாலி விசாரிக்கும்போது மேற்படி கும்பலின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் அவள் அந்த முடிவை எடுத்தது தெரிய வர, இஷானுடன் அந்த கும்பலை எதிர் கொள்ளத் தயாராகிறார்.

யாரும் எதிர்பாராத வகையில் அந்த கும்பலின் தலைவன் தமிழகத்தின் மிக முக்கிய புள்ளியாக இருக்க, இவர்களின் முயற்சி என்ன ஆனது என்பது மீதிக் கதை.

அறிமுக நாயகன் இஷான் எதிர்பார்த்ததை விட அற்புதமான ஆக்ஷன் ஹீரோவாக இருக்கிறார். அந்த ஆறடி உயரமே அவருக்கு ஒரு கம்பீரத்தை தருகிறது. எனவே ஆக்ஷன் காட்சிகளில் சண்டக்கோழியாகவே துள்ளுகிறார். 

அவர் இயல்பிலேயே கூச்ச சுபாவம் கொண்டவர் போல் இருக்கிறது. அதனால் காதலில் மட்டும் கொஞ்சம் பாலபாடம் படிக்கிறார். அந்த கூச்சம் அடுத்தடுத்த படங்களில் சரியாகி விடும்.

நாயகி பிரணாலிக்கு களையான அழகான முகம். ஒரு சதிச் செயலை கேள்விப்பட்டவுடன் எந்த பயமும் இல்லாமல் அதை எதிர்கொள்ள கிளம்பும் அவரைப் போல் எல்லா பெண்களும் கிளம்பி விட்டால் சதிகாரர்கள் நிலைகுலைந்து போவார்கள்.

பெண்களைக் கடத்தும் கும்பலின் தலைவனாகவும் தமிழகத்தின் முக்கிய தாதாவாகவும் ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் டேனியல் பாலாஜி நடித்திருக்கிறார். அவரை இதைவிட கொடூரமான பாத்திரங்களில் பார்த்துவிட்டதடியால் இதில் கொஞ்சம் காரம் குறைவாகவே இருக்கிறது. 

ஆனாலும் அவர் ஹஸ்கி வாய்ஸில் பேசினாலே அது பயமுறுத்தலாகதான் இருக்கிறது. இஷானைத் தேடி வந்து அவர் கிடைக்காமல் போக, அவர் இருக்கும் குடியிருப்பின் முன்னாலேயே நாற்காலியை போட்டு இவர் அமர்ந்து விடும்போது என்ன ஆகப்போகிறதோ என்ற பதைபதைப்பாக இருக்கிறது.

விஷாலின் அப்பாவாக நடித்திருக்கும் சூப்பர் குட் சுப்பிரமணியும், அம்மாவாக நடித்திருக்கும் ரமாவும் நடுத்தர குடும்பத்துப் பெற்றோராகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

தப்பை தட்டிக் கேட்க போன இடத்தில் அது கைகலப்பாக உருமாற யாரும் எதிர்பாராத விதமாக தன்னைத் தாக்கியவன் கையை இஷான் துண்டாக வெட்டிவிடும் காட்சி திடுக்கிட வைக்கிறது.

அப்படி கை வெட்டுப்பட்டவன் டேனியல் பாலாஜியின் தம்பி என்று தெரிய வரும் போது இன்னும் பதை பதைப்பாகி விடுகிறது. தொடர்ந்து தன் குடும்பத்துடன் பெற்றோர் விருப்பப்படி இஷான் ஊரைவிட்டு தப்பியோட முயலும் போது அந்த சதிகார கும்பல் சுற்றி வளைக்க… என்ன ஆகப் போகிறதோ என்கிற திகைப்புடன் பார்த்தால் அவர்கள் அத்தனை பேரையும் இஷான் துரத்தி துரத்தி அடிப்பது நம்பிக்கை வர வைக்கும் காட்சி.

இடைவேளையிலேயே இப்படி அடித்தால் கிளைமாக்ஸில் எப்படி அடிப்பார் என்றுதானே எதிர்பார்க்கிறோம்..? ஆனால் அதற்கு நேர்மாறான ஒரு கிளைமாக்ஸ் வைத்து நம்மை கைதட்ட வைக்கிறார் இயக்குனர் மித்ரன் ஆர். ஜவஹர்.

இது ஒரு சீரியஸான படம் என்பதாலேயே வழக்கமான மித்ரன் ஆர்.ஜவஹரின் படங்களில் இடம்பெறும் நகைச்சுவை இழையோட்டம் இதில் மிஸ்ஸிங். ஆனால் கனமும், காரமும் நகைச்சுவை இல்லாத குறையை மறைத்து விடுகிறது.

விஷ்ணு ஸ்ரீயின் ஒளிப்பதிவு வேகம் எடுக்க வேண்டிய இடத்தில் வேகத்தையும் நிதானம் காக்க வேண்டிய இடத்தில் நிதானத்தையும் பக்குவமாக கையாண்டிருக்கிறது. ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட மூன்று இசையமைப்பாளர்களின் இசையில் படத்துக்கு தேவையானதை இயக்குனர் பெற்றிருக்கிறார்.

“பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளும்போது நம்மை காப்பாற்ற ஹீரோ ஒருவன் வருவான் என்று எதிர்பார்க்காதீர்கள்…” என்று ஒரு ஹீரோவை வைத்தே சொல்வது இந்த படத்தில் புதிய விஷயம்.

அரியவன் – அடித்துச் சொன்ன கருத்தில் பெரியவன்..!