March 29, 2024
  • March 29, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சூப்பர் ஸ்டார்களை இயக்குநர்கள்தான் உருவாக்குகிறார்கள்- ஐஸ்வர்யா ராஜேஷ்
March 3, 2023

சூப்பர் ஸ்டார்களை இயக்குநர்கள்தான் உருவாக்குகிறார்கள்- ஐஸ்வர்யா ராஜேஷ்

By 0 227 Views
  • ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘சொப்பன சுந்தரி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
  • நடுத்தர சினிமாவையும் ரசிகர்கள் காப்பாற்ற வேண்டும்
  • இயக்குநர் மோகன் ராஜா வேண்டுகோள்
  • சூப்பர் ஸ்டார்களை இயக்குநர்கள் தான் உருவாக்குகிறார்கள்- ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் , ஹியூ பாக்ஸ் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பாலாஜி சுப்பு மற்றும் விவேக் ரவிச்சந்திரன் ஆகியோர் ,அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரும், நடிகருமான மோகன் ராஜா வெளியிட்டார்.

‘லாக்கப்’ எனும் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’. இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகைகள் லஷ்மி பிரியா சந்திரமௌலி, தீபா சங்கர், நடிகர்கள் கருணாகரன், சுனில் ரெட்டி, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஜ்மல் தஹ்ஸீன் இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையை விஷால் சந்திரசேகர் அமைத்திருக்கிறார். டார்க் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையிலுள்ள பிரபலமான வணிக வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநரும், நடிகருமான மோகன் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இயக்குநர் மோகன் ராஜா பேசுகையில், ” என்னுடைய உதவியாளராக பணியாற்றிய இப்படத்தின் இயக்குநர் சார்லஸ் பிரபு கடும் உழைப்பாளி. ‘வேலைக்காரன்’ படத்தின் வெற்றியில் அவரின் பங்களிப்பு அதிகம். அதற்காக இந்த தருணத்தில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இயக்குநராக உயர்ந்திருப்பது எனக்கு பெருமை. அவர் லாக் டவுன் காலகட்டத்தில் ‘லாக்கப்’ எனும் படத்தை இயக்கினார். ‘லாக்கப்’ ஒரு உணர்வுபூர்வமான படைப்பு. இந்த திரைப்படம் ‘தளபதி’ திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசும் வசனத்தை போல், இந்த திரைப்படம் ‘லாக்கப்’பைவிட நன்றாக வந்திருக்கிறது என சார்லஸ் என்னிடம் தெரிவித்திருக்கிறார். ‘லாக்கப்’ திரைப்படத்தை விட, இந்த ‘சொப்பன சுந்தரி’ திரைப்படத்தை கமர்சியலாக இயக்கியிருப்பதாக தெரிவித்தார். இந்தத் திரைப்படத்தின் சில காட்சிகளையும், முன்னோட்டத்தையும் பார்த்தேன். இது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது. சார்லஸின் கதையை ஒப்புக்கொண்டு நடித்ததற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்‌.

‘சொப்பன சுந்தரி’ என்றதும் அனைவருக்கும் ‘கரகாட்டக்காரன்’ பட காமெடி காட்சிகள் நினைவுக்கு வரும். இந்த ‘சொப்பன சுந்தரி’யை பட வெளியிட்டிற்குப் பிறகு ரசிகர்களின் மனதில் வைத்துக் கொள்வார்கள்.

அண்மை காலமாக ‘தரமற்ற படத்தை பார்வையிட்டாலே தவறு’ என்று ரசிகர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். அது தவறு. விமர்சனங்கள் எப்படி இருந்தாலும், ரசிகர்களாகிய நீங்கள் திரையரங்கத்திற்கு சென்று படத்தை பார்வையிட்டு, நீங்கள் தான் நல்ல படமா? இல்லையா? என்பதை தீர்மானிக்க வேண்டும். அதனால் அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தர வேண்டும். நீங்கள் வருகை தருவதால் தான் எங்களுடைய வாழ்வாதாரம் நடைபெறுகிறது. விமர்சனம் நன்றாக இருந்தால்தான் திரையரங்கத்திற்கு வருவோம் என்ற மனநிலையை ரசிகர்களும், பார்வையாளர்களும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

விமர்சகர்கள் மற்றும் விமர்சனங்களால் நடுத்தரமான படைப்புகள் என்ற ஒரு சினிமா இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. ஒன்று சூப்பர் ஹிட் அல்லது அட்டர் பிளாப் என்ற இரட்டை நிலை மட்டுமே தற்போது இருக்கிறது. ஆவரேஜ் ஃபிலிம் என்ற ஒரு நிலை உருவாக வேண்டும். இதற்கு அனைவரும்… அனைத்து திரைப்படங்களையும்… திரையரங்கத்திற்கு சென்று கண்டு ரசித்தால்தான் உருவாகும். தெரிந்து செல்வது சினிமா அல்ல. தெரியாமல் சென்று.. இருட்டறைக்குள் நீங்கள் ரசித்து முடிவு செய்வது தான் சினிமா. எனவே அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து திரைப்படங்களை பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ” என்றார்.

தயாரிப்பாளர்கள் பாலாஜி சுப்பு -விவேக் ரவிச்சந்திரன் மற்றும் தீபா பேசுகையில்,” இயக்குநர் சார்லஸிடம் கதை கேட்டோம். கதை பிடித்திருந்தது. காமெடி எண்டர்டெய்னராக இருந்தது. பத்து நாட்களில் படத்தின் பணிகளை தொடங்கினோம். சொன்ன கதையை நேர்த்தியாக காட்சிப்படுத்தி இருக்கிறார். டார்க் காமெடி, ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு, இசை, எதிர்பாராத சுவாரசியமான திருப்பங்கள், ஐஸ்வர்யா ராஜேஷ், லஷ்மி பிரியா சந்திர மௌலி, தீபா சங்கர் என மூன்று நாயகிகளின் ஜோடி, திரையரங்கத்திற்கு குடும்பத்துடன் வந்து ரசிப்பதற்கான நிறைய நகைச்சுவை காட்சிகள்… என அனைத்து அம்சங்களும் இருப்பதால், ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம்.” என்றனர்.

நடிகை லட்சுமி பிரியா சந்திர மௌலி பேசுகையில், ” இந்தத் திரைப்படத்திலும் ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் நான் பின்னணி பேசவில்லை. முதல்முறையாக இந்த படத்தில் நடனமாடி இருக்கிறேன். இதுவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. முதல் முறையாக கமர்சியல் படங்களில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளம் முழுவதும் மகிழ்ச்சியாக இருந்தது. நகைச்சுவை காட்சிகள் திரையில் மட்டுமல்லாமல் திரையின் பின்னணியிலும் நடைபெற்றது. படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் உற்சாகமாக பணியாற்றினோம். ” என்றார்.

இயக்குநர் சார்லஸ் பேசுகையில், ” படத்திற்கு ‘சொப்பன சுந்தரி’ என பெயர் வைத்திருப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதனை படம் பார்க்கும் போது தெரியும். நான் இயக்கிய முதல் படமான ‘லாக்கப்’ திரில்லர் திரைப்படமாக இருந்தாலும், குடும்பத்தினர் அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில் உருவாக்கினேன். இந்தத் திரைப்படமும் குடும்பத்தினர் அனைவரும் கண்டு ரசிக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறேன். இந்த திரைப்படத்தின் கதை, நம்முடைய வீட்டின் பக்கத்து வீடுகளில் நடைபெறும் கதையாக உருவாக்கி இருக்கிறோம்.

இந்த திரைப்படத்தில் ‘சொப்பன சுந்தரி’யாக ஐஸ்வர்யா ராஜேஷ் தேர்வு செய்வதன் பின்னணியிலும் ஒரு காரணம் இருக்கிறது. அவர் இந்த படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறார். தன்னுடைய தோற்றத்தை மாற்றி அமைத்துக் கொண்டார். ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டுமல்ல.. லட்சுமி பிரியா மற்றும் தீபா சங்கர் ஆகியோரும் தங்களின் தோற்றத்தை மாற்றி அமைத்துக் கொண்டார்கள்.

இந்த திரைப்படம் திருக்குறள் ஒன்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து ரசித்த பிறகு, பார்வையாளர்கள் அனைவரும் ஒரு திருக்குறளின் முழுமையான விளக்கத்தை தெரிந்து கொள்வார்கள். ” என்றார்.
.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், ”கதையின் நாயகியாக ஒவ்வொரு படத்திலும் நடிப்பதற்கு என்னுடைய பலமே இயக்குநர்கள் தான். ‘கனா’ படத்தை எனக்கு வழங்கிய இயக்குநர் அருண் ராஜா, ‘க /பெ ரணசிங்கம்’ படத்தை வழங்கிய இயக்குநர் விருமாண்டி, ‘சொப்பன சுந்தரி’ படத்தை வழங்கிய இயக்குநர் சார்லஸ் என இவர்கள்தான் காரணம். நடிகர், நடிகைகள் நட்சத்திர அந்தஸ்தை அடைவதற்கு இயக்குநர்கள் தான் பொறுப்பு. ஒரு இயக்குநர் தான் நடிகர் நடிகைகளை பிரம்மாண்டமாகவும்.. பிரமிப்பாகவும்… காட்சிப்படுத்த முடியும். அந்த வகையில் எனக்கு இயக்குநர்கள் மிகவும் முக்கியம்.

இயக்குநர் சார்லஸ், முதலில் இந்தப் படத்தை என்னை நாயகியாக வைத்து இயக்க மாட்டேன் என்று கோபத்துடன் கூறிவிட்டார். அதன் பிறகு அவரை நான் அழைத்தவுடன் வருகை தந்தார். அவருடைய கோபத்தின் ஆயுள் அவ்வளவுதான். அதன் பிறகு கோபத்தால் எதுவும் நிகழாது. அதனால் இழப்பு ஏற்படுவது தான் அதிகம். நான் வாழ்க்கையில் நிறைய முறை கோபப்பட்டிருக்கிறேன். அதனால் ஏராளமானவற்றை இழந்திருக்கிறேன். பிறகு இருவரும் கதையைப் பற்றி விவாதித்தோம். அவருடைய அணுகுமுறையைக் கண்டு வியந்திருக்கிறேன். தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குநராக அவர் வலம் வருவார். படப்பிடிப்பு தளத்தில் அவருடைய திட்டமிடல் நேர்த்தியாக இருக்கும். எந்த ஒரு கலைஞரையும் காத்திருக்க வைக்காமல், அவர்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்வார். என்னுடைய பங்களிப்பை முப்பது நாளில் நிறைவு செய்தார்.

ஒரு நடிகர் நட்சத்திர நடிகராக… சூப்பர் ஸ்டாராக உயர்வதற்கு இயக்குநர்கள் தான் அடித்தளம் அமைக்கிறார்கள். அதிலும் நடிகைகளை, கதையின் நாயகியாக நடிக்க வைத்தால்.. அவர்களை ரசிகர்கள் எப்படி கொண்டாடுவார்கள். எப்படி கொண்டாட வேண்டும் என்பதை இயக்குநர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.

‘சொப்பன சுந்தரி’ படத்தை நான் பார்த்து விட்டேன். நான் இதுவரை சோகம் கலந்த கதாபாத்திரங்களையும், உணர்வுபூர்வமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்திருக்கிறேன். ஆனால் இந்த திரைப்படத்தில் முற்றிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஏனெனில் வாழ்க்கையில் மிகவும் கடினமான வேலை என்னவென்றால்… மற்றவர்களை சிரிக்க வைப்பது. கண்ணீர் விட வைப்பது எளிது. ஆனால் சிரிக்க வைப்பது என்பது சாதாரண விசயமல்ல. இது சரியாக செய்து விட்டால்.. அவர்களை விட சிறந்த நடிகை வேறு யாரும் இருக்க முடியாது. அதனை இந்தப் படத்தில் நான் முயற்சித்திருக்கிறேன். இந்த திரைப்படத்தில் நான் நடித்திருக்கும் அனைத்து காட்சிகளும், இயக்குநர் சொல்லித் தந்ததை அப்படியே பிரதிபலித்திருக்கிறேன். இந்தத் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து ரசிகர்கள் கொண்டாடுவார்கள். இது முழு நீள காமெடி வித் ஃபேமிலி என்டர்டெய்னர். இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று இயக்குநர் சார்லஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படத்தை இயக்கும் அளவிற்கு உயர வேண்டும் என வாழ்த்துகிறேன். எனக்கு சூப்பர் ஸ்டாரை மிகவும் பிடிக்கும். அவருடைய ஸ்டைலான காட்சிகள் இந்த படத்திலும் இடம் பிடித்திருக்கிறது. ” என்றார்.

‘சொப்பன சுந்தரி’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்வில், இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் அஜ்மல் தஹ்ஸீன், இரண்டு பாடல்களை மேடையில் நேரலையாக பாடி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார்.