November 24, 2024
  • November 24, 2024
Breaking News
March 6, 2024

அரிமாபட்டி சக்திவேல் திரைப்பட விமர்சனம்

By 0 532 Views

திருச்சிக்கு அருகில் இருக்கும் அரிமா பட்டி என்கிற ஊரில் ஒரு பிளாஷ் பேக்குடன் தொடங்குகிறது படம்.

சாதி விட்டு சாதி திருமணம் செய்த குற்றத்திற்காக ஒரு காதல் ஜோடியை பஞ்சாயத்தில் வைத்து ஊரை விட்டு ஒதுக்கி வைக்க, அதை எதிர்த்து அதே ஊரில் வாழ முற்படுகிறது ஜோடி.

ஊர்ப்பொதுவில் வைத்து அதற்கு சம்மதம் சொல்லிவிட்டு அன்று இரவு அவர்கள் வீட்டுக்குள் போகும் ஒரு கும்பல் அவர்களைக் கொன்று தீர்க்கிறது. அந்த அளவுக்கு சாதி வெறி தலைக்கு ஏறிய கிராமம்.

மேற்படி தீர்ப்பைக் கூறிய பெரிய மனிதர்களுள் ஒருவரான அழகுவின் பேரன் (நாயகன்) சக்திவேல் என்ற பாத்திரப் பெயரை தாங்கும் பவன் இன்னொரு சாதிப் பெண்ணான மேக்னாவை, படிக்கையில் தொடங்கி காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் திருமணமும் செய்து கொள்கிறார்.

இந்த விஷயம் தெரிந்த பஞ்சாயத்து தலைகள் ஒன்று கூடி பவனின் தந்தையான சார்லியை ஊர் பொதுவில் மன்னிப்பு கேட்க வைக்கிறது. அத்துடன் பவனுடன் அவர் குடும்பத்துக்கு எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கட்டுப்பாடும் விதிக்கிறது. சார்லியின் தந்தையான அழகு தன் குடும்பமே பஞ்சாயத்தில் வந்து நிற்பதால் இந்த பஞ்சாயத்தின் பக்கம் தலை காட்டாமலேயே இருக்கிறார்.

இதற்கிடையில் மேக்னாவின் அண்ணன் பிர்லா போஸ் ஒரு பெரிய படையுடன் சக்திவேலைத் தேடி அலைகிறார். அவரும் சாதி வெறி சண்டியர்தான்.

இந்த எதிர்ப்புகளை மீறி பவன் தன் காதல் மனைவியுடன் வாழ்க்கையைத் தொடர்ந்தாரா, அவமானப்பட்ட தந்தை சார்லியின் அன்புக்கு ஆட்பட்டாரா என்பதெல்லாம் மீதிக் கதை.

புதுமுகம் பவன் என்ன காரணத்துக்காக சினிமாவுக்குள் வந்தாரோ அதையே தனது பாத்திரமாகவும் ஆக்கிக் கொண்டார் சினிமாவில் அரிமாபட்டி சக்திவேலாக புகழ் பெற்று ஜனாதிபதி விருது வாங்கி தன் ஊரை கௌரவப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்.

மீசை எடுத்துக் கொண்டால் மாணவன், மீசை தாடி வைத்துக் கொண்டால் வாலிபன் என்கிற சினிமா இலக்கணப்படியே வரும் பவன் எல்லா வித்தைகளையும் நன்றாகக் கற்று வைத்திருக்கிறார். ஆனால் நடிப்பில் மட்டும் இன்னும் கொஞ்சம் தேற வேண்டும்.

இளமை என்கிற மேக்னட் இருக்கும் வரை மேக்னா இன்னும் பல படங்களில் இந்த அளவுக்கு நடித்தாலே போதுமானது. உடம்பு மட்டும் பெருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு லட்சம் கொடுத்தால் 10 லட்சம் ரூபாய்க்கு நடிக்கத் தெரிந்த சார்லி நடிப்பு பற்றி சொல்லவே தேவையில்லை. தன் மகனை விட ஊர்தான் பெரிது என்று முடிவெடுக்கும் கட்டத்தில் பாசத்துக்கும் ஊர் மீதான நேசத்திற்கும் இடையில் சிக்கித் தவிக்கும் உணர்வை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேக்னாவின் அண்ணனாக வரும் பிர்லா போஸ் முறுக்கிக் கொண்டே திரியும் பாத்திரத்தில் முழுமையாகப் பொருந்துகிறார்.

இமான் அண்ணாச்சி தன்னை அரசியல்வாதி என்று சொல்லிக் கொள்கிறார். ஆனால் என்ன அரசியல் செய்கிறார் என்பது தெரியவே இல்லை.

‘சூப்பர்குட்’ சுப்ரமணி, அழகு, மாயி உள்ளிட்ட ஊர் தலைக்கட்டுகளும் சாதி வெறியர்களாக சத்தாய்க்கிறார்கள்.

இசையமைப்பாளர் மணி அமுதவனும், ஒளிப்பதிவாளர் ஜெ பி மேனும் தங்களால் என்ன முடியுமோ, அந்த.அளவில் பணியாற்றி இருக்கிறார்கள்.

நாயகன் பவனின் குறிக்கோள், காதலால் நீர்த்துப்போவது கதையை பலவீனப் படுத்துகிறது. அதேபோல் அவர்கள் இருவரின் காதலிலும் எந்த ஆழமும் திரைக்கதையில் சொல்லப்படவில்லை.

இன்றைக்கு நேரடியாக நாங்கள் இந்த ஜாதி என்ற குறியீட்டுடன் படங்கள் வந்து கொண்டிருக்க இவர்கள் குறிப்பிடுவது எல்லாம் எந்த ஜாதி என்று நமக்கு புரியவே இல்லை. 

நம்பகமில்லாத கதையுடன் கூடிய இந்த படத்தை உண்மைக் கதை என்பதாகக் கடைசியில் போடுகிறார்கள். இப்படி ஒரு சாதிவெறி ஊர் இருக்கும் பட்சத்தில் பவன் ஒரு கட்டத்தில் சொல்வது போல் இந்த ஊர் பெரிய தலைக்கட்டுகள் மீது கேஸ் போட்டிருக்கலாம்.

அரிமா என்றால் சிங்கம். இந்த அரிமாபட்டி சாதி வெறியர்களால் சிங்கத்துக்கே அசிங்கம்..!