May 18, 2024
  • May 18, 2024
Breaking News
March 7, 2024

ஜெ பேபி திரைப்பட விமர்சனம்

By 0 145 Views

அனைத்து உயிர்களும் போற்றி வணங்கத்தக்க ஒரு ஜீவன் ‘ அம்மா’. அதிலும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையில் பல குழந்தைகளைப் பெற்றெடுத்து கணவனையும் இழந்த கைம்பெண்கள் அந்தக் குழந்தைகளை வளர்க்கப்படும் பாடு கண்ணால் காணாத தெய்வத்திற்கு ஒப்பானது.

கண்ணில் கண்ட தெய்வமான அந்தத் தாயின் நிலை கடைசியில் எப்படி ஆகிறது என்பதை உணர்வுகள் கொப்பளிக்கப் படமாக வடித்திருக்கிறார் இயக்குனர் சுரேஷ் மாரி.

அந்த தாயின் பாத்திரத்தில் வாழ்ந்தே முடித்திருக்கிறார் ஊர்வசி. கமல், ஊர்வசி போன்றவர்கள் சரியாக நடிக்கவில்லை என்றால்தான் அது செய்தி.

இந்தப் படத்தைப் பொருத்தவரையில் ஊர்வசி ஏற்றிருக்கும் பேபி என்ற அந்தப் பாத்திரம் அவர் இதுவரை நடித்ததில் எல்லாம் உச்சம் எனலாம்.

வாழ்க்கையில் குழந்தைகளை வளர்க்க பட்ட பாட்டில் சுமந்த அடுத்தடுத்த அழுத்தங்களின் காரணமாக கணம் தோறும் குணம் மாறும் அரிதான மனவியல் கோளாறுக்கு ஆட்பட்டு அனைவருக்கும் தான் பாரமாகிவிட்டதாக உணர்ந்து காணாமல் போகும் பாத்திரத்தில் கண் கலங்க வைத்து விடுகிறார் ஊர்வசி.

திறந்திருக்கும் வீட்டின் கதவுகளை பூட்டு போடுவதில் தொடங்கி, அடுத்தவர் வீட்டுக்கு வரும் கடிதங்களை காரணம் இன்றி எடுத்து பத்திரப்படுத்தி… கண்ணில் பட்ட பணம், பொருளை அள்ளிக்கொண்டு போய் கஷ்டப்படும் மனிதர்களுக்கு தாரை வார்ப்பதுடன் “நான் யார் தெரியுமா..?” என்று தொடங்கி இந்திராகாந்தி, ஜெயலலிதா வரை இழுத்து விட்டு… இப்படிப்பட்ட குண நலன் (!) கொண்ட அம்மாக்களை ஊர் தோறும் பார்க்க முடியும்.

இதுதான் கதையின் மையப் புள்ளி என்றாலும் ஒரு விளிம்பு நிலை குடும்பத்தில் வளரும் குழந்தைகளுக்குள் ஏற்படும் பிணக்குகள், பிரச்சனைகள், வாழ்க்கை போராட்டங்கள் எல்லாவற்றையும் ஒரு மாலையாகத் தொடுத்து அம்மாவுக்கு அர்ப்பணித்திருக்கிறார் சுரேஷ் மாரி.

பேபியின் பிள்ளைகளில் மாறனுக்கும், தினேஷுக்கும் திருமண விஷயத்தில் ஒரு பிணக்கு ஏற்பட்டு இருவரும் பேசிக் கொள்வதில்லை. ஆனால் அவர்களை ஒரு பேரிடி வந்து தாக்குகிறது.

யாரோ ஒரு சகோதரனின் அல்லது சகோதரி வீட்டில் அம்மா இருப்பாள் என்று நினைத்துக் கொண்டிருந்த அவர்களுக்கு அம்மா கொல்கத்தாவில் இருப்பதாக உள்ளூர் காவல் நிலையம் தகவல் தர அம்மாவைத் தேடி முரண்பட்ட இருவரும் கிளம்புகிறார்கள். தாயை மீட்டு வீடு சேர்ந்தார்களா என்பதுதான் மொத்தக் கதையும்.

தினேஷின் அர்ப்பணிப்பையும் சொல்லியாக வேண்டும். இந்தப் படத்துக்காக “கொஞ்சம் சதை போடு…” என்று இயக்குனர் சொன்ன ஒரு காரணத்துக்காக தொப்பையும் தொந்தியுமாக ஆளே உருமாறி இருக்கிறார் தினேஷ். எடுப்பார் கைப்பிள்ளை ஆக இருக்கும் இவர் எல்லோருக்கும் முரண்பட்டு நிற்பது இயல்பாக இருக்கிறது.

கனமான கதையை இலகுவாக மாற்றுவதில் மாறனின் பங்கு பெரிதாக இருக்கிறது. இயல்பாகக் கடக்கும் சின்ன சின்ன ஜோக்குகளில் படத்தைத் தொய்வில்லாமல் நகர்த்துவது இவர்தான்.

அவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண் தன் காதலனுடன் ஓடிவிட அந்த கவலையில் சகோதரர்கள் தண்ணி அடிக்க உட்காருகிறார்கள். “இவ போனதுக்கு கவலைப்படாதே…நல்ல பெண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி தரேன்னு அம்மா சொல்லி இருக்கு இல்ல..?” என்று தினேஷ் அவரைத் தேற்ற, “இந்தப் பொண்ணையும் நல்ல பொண்ணுன்னுதான் அம்மா சொல்லுச்சு..!” என்று இயல்பாக அவர் அடிக்கும் நையாண்டியில் ஒட்டுமொத்த தியேட்டரும் கோரசாக சிரிக்கிறது. 

ஜன நெரிசலுடன் கொல்கத்தா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒவ்வொருவரையும் “டேய் நவுர்ரா… நவுர்ரா..!” என்று தள்ளிக்கொண்டு வெளியே வந்து “இதுக்கு ஹவுரா எக்ஸ்பிரஸ்னு பேர் வச்சதுக்கு பதிலா நவுர்ரா எக்ஸ்பிரஸ்னு பேர் வச்சிருக்கலாம்..!” என்று மாறன் அடிக்கும் பஞ்ச் எல்லாம் வேற லெவல்.

ஆனால், அவரை எல்லாப் படத்திலும் ஏன் குடிகாரராக மாற்றி விடுகிறார்கள் என்று தெரியவில்லை.

இவர்களுடன் சேகர் நாராயணன், மெலடி டார்கஸ், தாட்சாயிணி ( பார்த்து எவ்வளவு காலம் ஆச்சு…) இஸ்மத் பானு, சபீதா ராய் , மாயா ஸ்ரீ உள்ளிட்டவர்கள் அந்தந்தப் பாத்திரங்களாகவே உருமாறி இருக்கிறார்கள்.

கொல்கத்தா வந்துவிட்ட ஊர்வசியைப் பற்றிய தகவல் கொடுத்து, சகோதரர்களுக்கு உதவும் அந்த ‘ மூர்த்தி ‘ என்ற மாமனிதரைத் தொழ வேண்டும் போல் தோன்றுகிறது. 

நிஜ வாழ்க்கைக் கதையான இந்தப் படத்தில் கீர்த்தி படைத்த அந்த நிஜ மூர்த்தியையே இந்தப் படத்தில் நடிக்க வைத்திருப்பது அவர் நல்ல உள்ளத்துக்குக் கொடுத்த விருதாகவே கொள்ளலாம்.

அதிகம் அறியாத சென்னை அயனாவரம் பகுதியை அன்னை சத்யா நகர், வாட்டர் டேங்க், செல்லியம்மன் கோவில் உள்ளிட்டு பூகோளம் தவறாமல் பதிவு செய்திருக்கும் சுரேஷ் மாரிக்கு அயனாவரத்துக்காரர்கள் நன்றி தெரிவிக்கலாம்.

இசையமைத்திருக்கும் டோனி பிரிட்டோ ஏதோ வித்தியாசமாக முயன்று இருக்கிறார் என்று தெரிகிறது. ஆனால் அது படத்தின் உணர்வுடன் ஒன்றாமல் தனித்தே பயணிக்கிறது.

ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு இயல்பு வாழ்க்கைக்கு மிக நெருக்கத்தில் அமைந்திருக்கிறது.

படத்தில் குறையைச் சொல்ல வேண்டும் என்றால் திரைக்கதை வேறு வேறு இடங்களுக்கு பயணப்பட்டு ஒரு தடுமாற்றத்தைக் கொடுக்கிறது. அத்துடன் பல காட்சிகள் அதிக நீளத்துடன் இருக்கின்றன – அவற்றைக் கத்தரித்திருக்கலாம்.

மற்றபடி சொல்ல வேண்டிய கதையை, சொல்லக்கூடிய களத்தில், சரியாகச் சொல்லி இருக்கும் சுரேஷ் மாரிக்கும், தயாரிப்பாளர்களுக்கும் பாராட்டுப் பூங்கொத்துகள்..!

மகளிர் தினத்தில் இந்த படம் வெளியாகி இருப்பது காலம் தந்த பரிசு. இன்னும் பல பரிசுகள் இந்த படத்துக்காக காத்திருக்கின்றன.

ஜெ பேபிக்கு ஜே..!

– வேணுஜி