May 4, 2024
  • May 4, 2024
Breaking News
November 27, 2023

அன்னபூரணி படத்தில் தன்னுடன் நடிக்க நயன்தாரா சிபாரிசு செய்த ஹீரோ…

By 0 181 Views

அறிமுக இயக்குநர் நிகிலேஷ் கிருஷ்ணா இயக்கி, ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து, வரும் டிசம்பர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ‘அன்னபூரணி’

கதாநாயகியை மையப்படுத்தும் இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கிறார்.

நயன், பல வெற்றிகளை கொடுத்து வரும் நிலையில், அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் மற்றொரு படமாக உருவாகியிருக்கிறது ‘அன்னபூரணி’.

இதுவரை நயன்தாரா நடித்திருக்கும் கதாநாயகியை மையப்படுத்திய கதைகள் திகில் மற்றும் த்ரில்லர் வகையானவையாக இருந்த நிலையில், ‘அன்னபூரணி’ முழுக்க முழுக்க அப்பா – மகள் உறவைப்பற்றிய உணர்வுப்பூர்வமான படமாக உருவாகியுள்ளது.

படம் பற்றி படத்தின் இயக்குநர் நிகிலேஷ் கிருஷ்ணா கூறியதில் இருந்து…

“நான் ‘டார்லிங்’ மற்றும் ‘எனக்கு இன்னொரு பெயர் இருக்கு’ படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினேன். பிறகு இயக்குநர் ஷங்கர் சாரிடம் ‘எந்திரன் 2.0’ படத்திலும், ‘இந்தியன் 2’ படத்தின் ஆரம்ப கட்டப் பணிகளிலும் பணியாற்றியிருக்கிறேன். இது என் முதல் படம்.

ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ஒரு பிராமண குடும்பத்துப் பெண் இந்தியாவின் சிறந்த சமையல் கலை நிபுணராக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அவரது லட்சியத்தில் வெற்றி பெறுவதற்காக அவர் எப்படிப்பட்ட தடைகளைக் கடந்து வருகிறார் என்பதுதான் ‘அன்னபூரணி’ படத்தின் கதை.

ஒரு நாள் என் நண்பருடன் உணவகத்தில் சாப்பிட்ட போது உணவு தொடர்பாக அவருக்கும் அங்கிருந்த சமையல் கலை நிபுணருக்கும் வாக்குவாதம் நடந்தது. அப்போதுதான் இதையெல்லாம் யாரும் பெரிதாக பார்ப்பதில்லை, ஏன் இதை வைத்தே ஒரு கதை எழுதக்கூடாது என்று தோன்றியது.

நான் கதை எழுதும்போது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சிகள் பிரபலமடையவில்லை. அதுமட்டும் அல்ல, இந்த சமையல் கலை பற்றிய புரிதல் பலருக்கு இல்லை. அதேபோல், இந்தத் துறையில் ஆண்கள் ஆதிக்கம்தான் அதிகம், அதில் ஒரு பெண் சாதிக்க நினைத்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துதான் இந்தக் கதையை எழுதினேன்.

அப்போதே அதில் நயன்தாராதான் நடிக்க வேண்டும் என்று நான் முடிவு செய்தேன்.  கொரோனா காலக்கட்டத்தின் போது  தொலைபேசியில் அவருக்கு இந்தக் கதையை கூறினேன். முதல் முறையாக 45 நிமிடங்கள் தொலைபேசியில் கதை கேட்டதுமே அவருக்கு பிடித்து விட்டது.

அவர் படங்கள் அனைத்துமே திகில், த்ரில்லர், ஆக்‌ஷன் படங்களாக தொடர, அந்தத் தொடர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர் விரும்பியதால், இந்த கதையை கேட்டதும் அவருக்கு பிடித்து விட்டது. கதையைக் கேட்ட முதல் நாளில் இருந்து அவர் கதையோடு ஒன்றிவிட்டார்.

இதற்காக சமையல் கலை நிபுணர்கள் தாமு, வெங்கடேஷ் பட் ஆகியோரை சந்தித்து நான் சில ஆலோசனைகள் கேட்கவும் செய்தேன். அதே சமயம், மக்களுக்கு தெரிந்தது இப்படியான ஒரு சில சமையல் கலைஞர்கள்தான்.

புட் ஸ்டைலிஷ்ட் என்று சொல்லக்கூடிய உணவு ஒப்பனையாளர் என்ற ஒரு துறை இருக்கிறது. நாம் டிவியில் பார்க்கும் உணவு பொருட்கள் தொடர்பான அனைத்து விளம்பர படங்களின் பின்னணியிலும் புட் ஸ்டைலிஷ்ட் என்பவர் இருக்கிறார், அவர்கள் மூலம் தான் அந்த விளம்பரங்கள் ரசிகர்களை கவரக்கூடியதாக உருவாகிறது. அப்படி ஒருவர் பற்றி பலருக்கு தெரியாது, அதுபோன்ற கதாபாத்திரங்களை படத்தில் சொல்லியிருகிறோம்.

இதில் ஒரு பிராமணப் பெண் சமையல் கலை நிபுணராக வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணிப்பதை சொல்லியிருக்கிறேன். இதில் நயன்தாராவின் கதாபாத்திரம் லைவாக இருக்கும். யாரடி நீ மோகினி படத்தில் பார்த்த நயன்தாராவை மீண்டும் பார்க்கலாம்.

நயன்தாராவின் சிறுவயது நண்பராக நடித்திருக்கிறார் ஜெய். நயன்தாராவுக்கு சமையல் கலை நிபுணராக வேண்டும் என்பது லட்சியம் என்றால், ஜெய்க்கு அவரை எப்படியாவது சமையல் கலை நிபுணராக்கிப் பார்க்க வேண்டும் என்பது தான் லட்சியம்.

இந்த படத்திற்கு ஜெய்யை சிபாரிசு செய்தது நயன்தாராதான். இந்த கதையை ஜெயிடம் சொன்ன போது, அவர் முழுவதுமாக கேட்டுவிட்டு, ஒரு சிறந்த படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம், அதனால் இந்த படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னார். ராஜா ராணி’ படத்தில் அவர்களுக்கு இருந்த கெமிஸ்ட்ரியை நினைவுப்படுத்தும்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்த படங்களிலேயே இதில்தான் இரவில் காட்சிகள் இல்லாமல் பகல் காட்சிகள் பளிச் சென்று இருக்கும். அதேபோல் தமன் இசையமைத்த படங்களிலேயே இதுதான் மென்மையான மெலடிகள் கொண்ட படமாக இருக்கும்..!”

பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பை ஏற்க, pஅருள் சக்தி முருகன் வசனம் எழுத, பிரசாந்த்.எஸ் கூடுதல் திரைக்கதை அமைத்துள்ளார்.

நயன், ஜெய் தவிர இப்படத்தில் சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சஞ்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.