May 3, 2024
  • May 3, 2024
Breaking News
November 28, 2023

பார்க்கிங் திரைப்பட விமர்சனம்

By 0 169 Views

இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் மக்கள் அன்றாடம் சந்திக்கும் தலையாயப் பிரச்சனை இந்த ‘பார்க்கிங் ‘ தான்.

வளர்ச்சியும், வசதியும் மனிதனுக்கு அதிகரித்துக் கொண்டே போக, வாகனங்களும் பெருகிக்கொண்டே போகின்றன. அவற்றை நிறுத்தப் போதுமான இட வசதி எங்கும் இருப்பதில்லை. இந்த விஷயமே இந்தப் படத்துக்குள் நம்மை எளிதாக ‘பார்க்’ செய்து கொள்ள முடிகிறது.

அதில் நயமான திரைக்கதையையும் சேர்த்து நம் ரசிகத் தன்மைக்கு டோக்கன் போட்டு விடுகிறார் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன்.

ஐடி துறையில் வேலை பார்க்கும் ஹரிஷ் கல்யாண், காதல் கடிமணம் புரிந்த தன் மனைவி இந்துஜாவுடன் அலுவலகத்திற்குப் பக்கத்திலேயே ஒரு வீடு பார்த்து குடியேறுகிறார். மாடி போர்ஷன் இவர்களுக்குக் கிடைக்க, கீழ் போர்ஷனில் பேரூராட்சி அலுவலகத்தில் நிர்வாக அதிகாரியாக இருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இரண்டு குடும்பங்களுக்கும் நல்ல புரிதலில் தொடங்கும் கதை நாம் நமது வாழ்க்கையையே கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போல் இருக்கிறது. எல்லா சந்தோஷங்களும் ஹரிஷ் கல்யாண் புதுக் கார் வாங்கும் வரைதான் நீடிக்கிறது. இருக்கும் ஒரே பார்க்கிங்கில் எம் எஸ் பாஸ்கர் பைக்கையும், ஹரிஷ் கல்யாண் காரையும் நிறுத்துவதில் பிரச்சனை ஏற்பட, அதுவே அவர்களது ஈகோவையும் வெளிக்கொண்டு வர, இந்தப் பிரச்சனை கைகலப்பு வரை போகிறது.

அதன் பின் என்ன என்பதுதான் மீதிக்கதை. 

ஹரிஷ் கல்யாண் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ள முடிகிற வேடம். பாத்திரத்துக்கு அத்தனைப் பொருத்தமாக இருக்கிறார் ஹரிஷ். பார்க்கிங் பிரச்சினை பூதாகரமாகி கர்ப்பிணியான மனைவியைக் கூட சரிவர கவனிக்க முடியாத அளவுக்கு போவதில், அந்த அழுத்தத்தை நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறார்.

அவருக்கு வில்லன் என்றால் எம்.எஸ்.பாஸ்கர் தான். தான் நினைப்பது நடந்தாக வேண்டும் என்று மனைவி, மகள், அலுவலகம் எல்லா இடத்திலும் அவர் நடந்து கொள்ளும் பிடிவாதப் போக்கு, ஆரம்பத்தில் இயல்பாக இருந்தாலும் போகப் போக அதுவே அவரை உச்ச நிலைக்குக் கொண்டு செல்வது பயங்கரம்.

நடிப்பில் மனிதர் பிய்த்து உதறி இருக்கிறார். அவரது ஈகோ பெருகப் பெருக, ஒவ்வொரு உறவுகளாக அவரை விட்டு பிரிவதும் அப்போதும் அதை விட்டுவிடாமல் அவர் காட்டும் பிடிவாதமும் பிரமாதம்.

கர்ப்பிணி வேடத்திலேயே ஒரு இளம் நடிகை முழுவதும் வருவது ஆச்சரியமான விஷயம். இந்துஜா அதன் ‘கனம் ‘ புரிந்து அழகாக அதைச் சுமந்து நடித்திருக்கிறார்.

எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருக்கும் ரமா நல்ல நடிகை என்பது நமக்கு தெரிந்ததுதான் ஆனால் மகளாக நடித்திருக்கும் பிரார்த்தனா புதுமுகமாக இருந்தாலும் தன் பாத்திரத்தை உள்வாங்கி அட்டகாசமாக நடித்திருக்கிறார்.

ஒரு சில காட்சிகளில் வரும் இளவரசு மற்றும் எல்ஐசி ஏஜென்ட் சுரேஷ் இருவரும் தங்கள் பாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள். அந்த இஸ்திரி கடைக்காரரும் அங்கங்கே  ‘சபாஷ் ‘ வாங்குகிறார்.

ஜிஜு சன்னியின் ஒளிப்பதிவும், பிலோமினா ராஜின் படத்தொகுப்பும் பாராட்டத்தக்கவை. ஹரிஷும் எம் எஸ் பாஸ்கரும் யார் முதலில் வந்து தங்கள் காரை பார்க் செய்வது என்று காட்டுவதில் இருக்கும் வேகத்தை அட்டகாசமாக பதிவு செய்திருக்கிறார்கள்.

டெம்போ குறையாமல் படத்தைக் கொண்டு சென்று இருப்பதில் சாம் சிஎஸ்சின் இசை முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த சாதாரண பார்க்கிங் விஷயத்தை வைத்து ஒரு முழுப் படத்தின் திரைக்கதையை எழுதிவிட முடியுமா என்பது பெரிய சவால் தான். அந்த சவாலில் முக்கால்வாசி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் என்று சொல்லலாம். முதல் பாதிப்படம் அவ்வளவு நேர்த்தியாக செல்கிறது.

இரண்டாவது பாதியில் இன்னும் அழுத்தம் வேண்டும் என்பதற்காக ராம்குமார் பாலகிருஷ்ணன் இணைத்திருக்கும் சில விஷயங்கள் இயல்புத் தன்மைக்கு சற்று அதிகமாகவே இருக்கிறது. 

அதை அந்த அளவுக்கு ரத்தக்களரியாக மாற்றாமல் கொண்டு சென்று இருந்தால் தமிழிலும் மலையாளப் படங்கள் போல் ஸ்கிரிப்ட் எழுதக்கூடிய இயக்குனர்கள் இருக்கிறார்கள் என்று நாம் மார் என்ற தட்டிக் கொண்டிருக்க முடியும்.

இந்தக் கதை இப்படித்தான் முடியும் என்று நாம் எதிர்பார்ப்பதுவே முடிவாக இருக்கிறது.

இருந்தாலும் படம் தந்த தாக்கத்தில் இருந்து நம்மைப் பிரித்தெடுக்க கொஞ்ச நேரம் ஆகிறது.

அதுவே, இந்த படத்தின் வெற்றியை உறுதியும் செய்கிறது.

பார்க்கிங் – பாராட்டக்கூடிய மேக்கிங்..!

– வேணுஜி