April 16, 2024
  • April 16, 2024
Breaking News
January 6, 2022

அன்பறிவு படத்தின் திரை விமர்சனம்

By 0 349 Views

இரட்டைப் பிறவிகள் கால சூழ்நிலையால் பிரிந்து மீண்டும் ஒன்று சேரும் உத்தம புத்திரன் காலத்து கதை. உத்தம புத்திரன் என்றாலே இந்தத் தலைமுறை இளைஞர்களுக்கு அதிகபட்சம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து 1958-இல் வெளிவந்த படம் நினைவுக்கு வரலாம். ஆனால், அதற்கும் முன்பே பி.யு.சின்னப்பா நடித்து 1940-இல் முதல் உத்தம புத்திரன் வெளிவந்தது. இதற்கெல்லாம் மூலம் 1939-இல் அலெக்ஸாண்டர் டூமா எழுதி ‘தி மேன் இன் தி அயர்ன் மாஸ்க்’ என்று ஹாலிவுட்டில் வெளிவந்த படம்தான்.

ஆனால், இந்த கிளாசிக்ஸ் படங்களையெல்லாம் மேற்கோள் காட்டித்தான் ஆக வேண்டுமா என்று ஆகி விட்டது இந்தப்படத்தில் ஹிப் ஆப் ஆதி இரட்டை வேடங்களில் நடித்திருப்பதைப் பார்த்த பின்பு. நல்லவேளை… பியு.சின்னப்பா, நடிகர் திலகம் இருவரும் இப்போது இல்லை. 

இரண்டு வேடங்களில் கமர்சியலாக நடிக்க வேண்டுமென்றால் நடிகர் திலகம் அளவுக்கு நடிக்க வேண்டியதில்லை. ஆனால், கொஞ்சமாவது சின்சியரான முயற்சி வேண்டாமா ஆதி..? 

அன்பு என்றும் அறிவு என்றும் இரட்டையர் வேடங்களில் நடித்திருக்கும் ஆதி, ஆதியில் அம்மாவிடம் ஒருவரும், அப்பாவிடம் ஒருவருமாக வளர்கிறார்(கள்). மதுரைப்பக்க கிராமத்தைச் சேர்ந்த அப்பா சாய் குமாரும், அம்மா ஆஷா சரத்தும் காதலித்து மணந்து கொண்டவர்கள். ஆஷாவின் அப்பா பாசம் சாய்குமாரை வீட்டோடு மாப்பிள்ளையாக ஆக்கிவிட, அந்த வீட்டில் சுயநலம் பிடித்த பணியாளராக இருக்கும் விதார்த்தின் சூழ்ச்சிப்படி மனைவியைப் பிரிந்து ஒரு குழந்தையுடன் வெளிநாடு செல்கிறார். அப்புறம் நடக்கும் எல்லாமே பல படங்களில் பார்த்த பால பாடங்கள். 

அதென்னவோ தமிழ் சினிமாவில் நடுநிசியில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அனாதரவாகக் கிளம்பும் அப்பாக்கள் வெளிநாடு போய் தொழிலதிபராக ஆகி விடுகிறார்கள். ஜீன்ஸ் படத்தில் இப்படித்தான் நாசர் இரட்டைக் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு கால்நடையாகவே போய் அமெரிக்க தொழிலதிபராகி விடுவார். இதில் சாய்குமார் ஒரு குழந்தையுடன் பஸ் பிடிக்கிறார். அடுத்த சீனில் கனடாவில் தொழிலதிபர். காரைக்குடி, மதுரையிலிருந்து கிளம்பி சென்னை வருபவர்களெல்லாம் சாமானியர்கள் மட்டும்தான் போலிருக்கிறது. சினிமாவில் எந்த குக்கிராமத்தில் கிளம்பினாலும் போய்ச்சேருவது வெளிநாட்டில்தான்.

கனடா ஓபனிங்கெல்லாம் அவ்வளவு ஈஸியில்லை இயக்குநர் அஸ்வின் ராம்..!

ஆனால், ஜீன்ஸில் இரு பிரசாந்துகளும் ஒரே அமெரிக்காவில் ஒரே தந்தையிடம் வளர்வதால் ஒன்று போலவே இருந்தார்கள் என்பதால் பிரசாந்த் தப்பித்தார் – மெனக்கெட வேண்டாத நடிப்பளவில். ஆனால், இதில் அன்பு மதுரையிலும், அறிவு கனடாவிலும் வளர்ந்தாலும் இருவரும் ஒரே மாதிரி பார்க்கிறார்கள். ஒரே மாதிரி நடக்கிறார்கள், ஒரே மாதிரி சிரிக்கிறார்கள்…. என்ன, இவர் வேட்டி கட்டிக் கொண்டிருக்கிறார். அவர் பேன்ட் சட்டை போட்டுக் கொண்டிருக்கிறார். இருக்கிற நாலு கிலோ தலைமுடியை அழுத்தி வாரினால் அவர். கலைத்து விட்டால் இவர். அவ்வளவுதான்.

இங்கே வரும் அவருக்கு இங்கே இருக்கும் முறைப்பெண் காஷ்மீரா ஜோடியாக, அங்கே போகும் இவருக்கு அங்கே இருக்கும் ஷிவானி ராஜசேகர் ஜோடியாகிறார். 

மதுரைக் காரர்களின் பெருமையைச் சொல்வதாக, அவர்களை ரொம்பவே லந்தடித்திருக்கிறார்கள். மதுரைக்காரன் வேட்டியை மடித்துக் கட்டினால் வெட்டுக்குத்து, சட்டையை இழுத்து விட்டால் சம்பவமாம். இயக்குநர் இப்படியெல்லாம் சொல்லி மூன்று வரிக் கதையை மூன்று மணிநேரம் இழுத்து நம்மை ‘சம்பவம்’ பண்ணிவிட்டார். அதிலும் ஆதி பேச ஆரம்பித்து விட்டால் ‘கட்’ சொல்லவே தோன்றவில்லை போலிருக்கிறது இயக்குனருக்கு. எடிட்டருக்கும் எஸ்கார்ட் போட்டு விட்டார்களோ என்னவோ, இன்டர்வெல்லுக்கு ஏங்க வைத்து விட்டார்.

தாய்ப்பாசத்தைக் கூட இவ்வளவு பொறுப்பில்லாமல் எந்தப்படத்திலும் சொன்னதில்லை. 25 வயது வரை வளர்த்த ஒரு மகனின் ஸ்பரிசமோ, நடத்தையோ ஒரு தாய்க்குத் தெரியாதா..? வீட்டில் வளர்க்கும் மாடு இவர் அவரில்லை என்று கண்டுபிடித்து மிரளும்போதுதான் அம்மாவுக்குத் தெரிகிறது இது ‘இந்தப்பிள்ளை இல்லை அந்தப்பிள்ளை’ என்று. மாட்டிடம் தோற்ற மாதாவை தமிழ் சினிமா இப்போதுதான் பார்க்கிறது. கண்ணாம்பா, என்.வி.ராஜம்மா, மனோரமா ஆத்மாக்கள் மன்னிக்க…

அப்போதாவது 25 வருடம் கழித்துப் பார்க்கும் பிள்ளையை உச்சிமோந்து அன்பைப் பொழிய வேண்டாமா ஒரு அம்மா… “அப்பா எப்படி இருக்கிறார்…” என்று ஆவலாகக் கேட்டிருக்க வேண்டாமா..? ஆனால், “என் பிள்ளை எங்கேடா..?” என்று கேட்டு ஆசா பாசமில்லாமல் நடந்து கொள்கிறார் ஆஷா சரத்.

அப்பா பேச்சைக் கேட்டுக்கொண்டு கணவனையும், ஒரு குழந்தையையும் 25 வருடங்கள் இழந்து விட்டோமே என்று அந்தத் தாயும் நினைக்கவில்லை. மகள் வாழ்க்கையை அநியாயமாகக் கெடுத்து அவளை வாழா வெட்டியாக்கி விட்டோமே என்று அவரைப் பெற்ற கோபக்காரத் தந்தையும் நினைக்கவில்லை. என்ன மாதிரியான குடும்பம் அது..?

அதேபோல் இந்த ஒற்றைக் குடும்பப் பிரச்சினைக்காக இரண்டு ஊர் பகையாகி பொதுவான கோவில் தேர் 25 வருடங்களாக ஓடாமலிருக்க, கலெக்டர் வந்து தேரை ஓட்டச் சொல்லி பைசல் பண்ண எண்ணுகிறார். அதனால் மீண்டும் ஊர்ப்பகை வளர்ந்து தேரை இழுத்துத் தெருவில் விட்ட கதை ஆகிறது. 

படத்தின் ஒரே ஆறுதல் ஆஷா சரத்தின் அப்பாவாக வரும் நெப்போலியன். அந்த முரட்டு வெட்டருவா மீசை ஆறடி அய்யனார் உருவத்தைப் பார்த்து எத்தனை வருடமாச்சு..? நடிக்கத் தெரிந்த அவரையும் சென்டிமென்ட் காட்சிகளில் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தன் தோளைத் தட்டிப் பேசுகிற பேரன், திடீரென்று ஆரத்தழுவி பாசமழை பொழிகையில் அவர் எப்படிப் புல்லரித்துப் போனதாகக் காட்ட வேண்டும்..?

மைனாவுக்குப் பிறகு ஹீரோவாக நடித்த ஒரு படமும் சரியாக அமையாததாலோ என்னவோ விதார்த்தும் இந்தப்படத்தில் வில்லனாகி விட்டார். மகாபாரத சகுனியாக வரும் அவர் மேல் 25 வருடங்களாக ஒருவருக்கும் சந்தேகம் வராமல் மதுரைக்கார மாக்கான்களே படம் முழுவதும் நிறைந்திருக்கிறார்கள். பிரிவினால் என்னென்ன சுகங்களை அந்தக் குடும்பத்தினர் இழந்தார்கள் என்பதைக் கூட சரியாகச் சொல்லவில்லை. 

உண்மையில் சொல்லப்போனால் கொஞ்சம் பழசாக இருந்தாலும் சென்டிமென்ட்டாக ‘விளையாடி’ இருக்கக் கூடிய ஒரு களத்தைக் கையில் வைத்துக்கொண்டு ‘விளையாட்டாக’ ஸ்கிரிப்ட் பண்ணியிருக்கிறார்கள். 

இரட்டையர்கள் கொண்ட இந்த ஸ்கிரிப்டில் இருவரும் ஒன்றாக வருவது ஒரே காட்சியில்தான். அதிலும் ஒருவர் அவுட் ஆப் போகஸில் தெரிகிறார். அவரைக் கட் செய்து ஒட்ட வைத்திருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ஜீன்ஸ், மாற்றான் ஒளிப்பதிவாளர்கள் இந்தப்பட ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தை மன்னிக்க வேண்டும்.

போதும் போதும் என்று கதற வைக்கும் அளவில் படத்தில் ஒன்பது பாடல்கள். ஒரு பாடலும் மனத்தில் பதியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம். இரண்டே இரண்டு இருந்திருந்தால் ரசிக்க முடிந்திருக்குமோ..?

எல்லாமே தப்பாகச் சொல்லி படாதபாடு பட்டு கடைசியாக அவர்கள் சொல்லும் விஷயம் ‘அன்போடு வாழ்வதுதான் அறிவு…’ என்பதுதான். 

அன்பறிவு – சென்டிமென்டல் ‘சம்பவம்..!’