November 22, 2025
  • November 22, 2025
Breaking News
November 11, 2025

அனந்தா படத்தின் கதையை பாபாவே எழுதிக் கொண்டார்..! – இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா

By 0 30 Views

கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் தமிழ் பட உலகின் முன்னணி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி வெளிவர இருக்கும் சத்ய சாய்பாபாவை பற்றிய பக்தி படம் ‘அனந்தா…’ 

ஜெகபதி பாபு, சுகாசினி மணிரத்தினம், ஒய் ஜி மகேந்திரா, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு தேனிசைத் தென்றல் தேவா இசையமைத்திருக்கிறார்.
அவர் இசையில் அமைந்த பாடல்களின் வெளியீடு படக்குழுவினர்
மற்றும் நடிகர்களின் முன்னிலையில் சென்னையில் நடந்தது.

இந்நிகழ்வில்…

பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தா பா விஜய் பேசியதிலிருந்து…

“என்னுடைய பாடலாசிரியர் பயணத்தில் நான் பல பக்திப் பாடல்களை எழுதி இருக்கிறேன் ஆனால் கடவுளுக்காகவே பாடல் எழுதியது இதுதான் முதல் முறை. இந்த வாய்ப்பை வழங்கியதற்காக நான் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு திரையுலகில் பெரிய ஏற்றத்தைக் கொடுத்த “கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு…” பாடல் தேவாவின் இசையில்தான் அமைந்தது. இப்போது ஆழ்ந்த பக்தியில் அமைந்த இந்தப் படத்தின் பாடல்களும் அவரது இசையிலேயே அமைந்திருக்கிறது.

தயாரிப்பாளர் கிரிஷ், பாபாவின் வாழ்க்கையை தெளிவாக புரிந்து கொள்ள எனக்கு உதவினார். அதுதான் இந்தப் படத்தின் பாடல்களையும், வசனத்தையும் தெளிவாக எழுத உறு துணை புரிந்தது. இந்த பயணத்தில் இவர்களெல்லாம். பாபாவின் பக்தர்களாக இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அவருடனேயே இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். படம் பார்க்கும்போது ரசிகர்கள் அதை உணர முடியும்..!”

இயக்குனர் லிங்குசாமி பேசியது…

“சத்யா படத்தை இயக்கியது சுரேஷ் கிருஷ்ணா சார்தான் அதற்குப்பின் பாபா படத்தையும் அவர்தான் இயங்கினார். இப்போது இரண்டையும் இணைத்தது போல் சத்ய சாய்பாபா படத்தை இயக்கிக் கொண்டிருப்பது எத்தனை ஆச்சரியம்?

நான் அவரது பரம ரசிகன்.
அவரிடம் உதவி இயக்குனராக சேர வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறேன். அவர் தொட்டதெல்லாம் அழகாகும். இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்..!”

நடிகை அபிராமி வெங்கடாசலம்…

“இந்த வாய்ப்பு கிடைக்கப்பெற்றதற்காக நான் சாய்பாபாவுக்கு நன்றி சொல்கிறேன். அவரது தினமான ஒரு வியாழக்கிழமையில்தான் இந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கப்பெற்றது. நான் இரண்டு வருடங்களாக நடனம் எதுவும் ஆடவில்லை. ஆனால் இந்த படத்துக்கு நடனம் ஆட வேண்டி இருந்தது. ஒட்டுமொத்த குழுவும் எனக்கு அதை சரியாக செய்ய உறுதுணை புரிந்தார்கள். அனைவருக்கும் நன்றி..!”

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா…

“சாய்ராம்… என் இன்றைய மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இந்தப் படைப்பு உருவாகக் காரணமாக இருந்த கிரிஷுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். எத்தனையோ கமர்சியல் படங்களை இயக்கியிருக்கும் எனக்கு இந்த பக்தி படத்தையும் கமர்சியலாக கொடுக்க வேண்டிய தெய்வீக சவால் இருக்கிறது.

2009இல் ஒரு அதிசயம் நடந்தது. பாபாவின் வாழ்க்கை சரிதத்தை இயக்குவதற்காக ஒரு நண்பர் என்னை புட்டபர்த்தி அழைத்துச் சென்றார். நான் பாபாவின் முன்னால் நின்று கொண்டிருந்தேன். என்னை பார்த்த அவர், “இத்தனை நாள் எங்கிருந்தாய்.?” என்று தெலுங்கில் கேட்டார். நான் பக்தியில் நொறுங்கிப் போனேன். அதற்குப் பின் இரண்டு வருடங்களில் அவர் சமாதி அடைந்து விட்டார்.

காலங்கள் கடந்து செல்ல ஒரு நாள் என் கனவில் பாபா வந்தார். அன்றைய தினமே ஒரு நண்பர் என்னை சந்தித்து பாபாவை பற்றிய படம் பண்ண விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என்றதைத் தொடர்ந்து கிரிஷ் என்னைத் தொடர்பு கொண்டு உலகம் முழுதும் உள்ள பாபா பக்தர்களுக்காக நாம் ஒரு படத்தை தயாரித்தாக வேண்டும். அதே நேரத்தில் பாபாவை பற்றி தெரியாதவர்களுக்கும் தெரிய வைக்க வேண்டும் என்றார்.

உடனே அவரிடம் நான் மூன்று நாள் அவகாசம் கேட்டேன். ஆனால், அடுத்த நாளே அதிகாலை 3 மணிக்கு மனதில் ஒரு கதை உருவாகி அடுத்த ஒரு மணி நேரத்தில் முழு கதையும் பதிவானது. உண்மையில் பாபாவேதான் அதை எழுதினார். இந்தப் படம் சில நிஜ வாழ்க்கை சம்பவங்களையும் பாபா நிகழ்த்திய அதிசயங்களையும் சொல்கிறது.

தேவா சார் பத்து நிமிடங்களில் இதற்கான பாடலை இசை அமைத்துக் கொடுத்தார். இது எல்லாமே தெய்வீக மகிமை தான் ஷூட்டிங்கில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயத்தை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். ஓய்வில்லாமல் பக்தியுடன் உழைத்த ஒரு அருமையான குழு எனக்கு கிடைத்த பாக்கியத்தை நான் பெற்றேன். படம் பார்க்கும் ஒவ்வொருவருடைய இதயத்தையும் இந்தப் படம் தொடும் என்று உறுதியாக நம்புகிறேன்..!”

பாடகர் மனோ…

“குழந்தைப் பருவத்தில் இருந்தே நான் சாய்பாபாவின் பக்தன்தான். அவருடைய ஆசிர்வாதத்துக்காக எப்போதும் காத்துக் கொண்டிருப்பவன். சுரேஷ் கிருஷ்ணா சாருக்கும், தேவா சாருக்கும் இந்த நேரத்தில் இந்த பக்தி பாடலை பாட எனக்கு வாய்ப்பளித்ததற்காக நன்றி கூறிக் கொள்கிறேன்..!”

கலைப்புலி எஸ் தாணு…

“65 வருடங்களுக்கு முன்னால் நான் சாய்பாபாவின் தரிசனத்தை சென்னையில் பெற்றேன். அவருடைய பாடல்களுக்கும், போதனைகளுக்கும் எப்போதும் என் இதயத்தில் இடம் இருக்கும். அள்ளித்தரும் கைகள்தான் ஆண்டவனின் கைகள் என்பதற்கு உதாரணமாக இருக்கும் பாபா மருத்துவமனைகள் பள்ளிகள் கல்வி நிறுவனங்களை கட்டி, அவை இலட்சக்கணக்கானோருக்கு சேவை செய்து வருகின்றன.

சுரேஷ் கிருஷ்ணா சார், தேவா, பா விஜய் மூவரும் அற்புதமான பணியைச்  செய்திருக்கிறார்கள். பாபாவின் அருள் பெற்ற இந்தப் படம் மாபெரும் வெற்றி அடையும்..!”

நடிகை சுகாசினி மணிரத்தினம்…

“இந்தக் கதையை சுரேஷ் கிருஷ்ணா  என்னிடம் சொன்ன போது நான் இந்த மாய உலகத்தை விட்டு புனிதமான இடத்திற்கு சென்றது போல் உணர்ந்தேன். நாம் எல்லோருமே ஒரு ஈகோவை சுமந்து கொண்டு அலைகிறோம். அதிலிருந்து வெளியே வந்தாலே அற்புதங்கள் நடக்கும். இந்தப் படத்தில் வேலை செய்தது ஒரு ஆழ்ந்த மாற்றத்தைத் தந்த அனுபவமாக இருந்தது..!”

இசையமைப்பாளர் தேவா…

“உலகமெங்கும் கோடிக்கணக்கான பக்தர்கள் பாபாவுக்கு இருக்கிறார்கள் அவர்களில் ஒருவனாக இந்த பாடல்களை நான் இசைத்து இருப்பது என்னுடைய முன் ஜென்ம புண்ணியம். பின்னணி இசையின் போது ஒருவரும் படத்தில் நடிக்கவில்லை அந்த பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்பது புரிந்தது. இந்த படத்தின் பணிகளை பாபாவுக்குண்டான ஒரு வியாழக்கிழமையில் தொடங்கிஎதில் ஒவ்வொரு பாடலும் அவருடைய கருணையில் அற்புதமாக அமைந்தது.

சுரேஷ் கிருஷ்ணா சாருடன் நான் தமிழ், மலையாளம், தெலுங்குப் படங்களில் எல்லாம் வேலை செய்து இருக்கிறேன் ஆனால் ஆனந்தா தனிச் சிறப்புள்ள ஒரு படம். உலகெங்கும் உள்ள சாய்பாபாவின் பக்தர்கள் இந்தப் படத்தின் பாடல்களைப் பாடுவதில் அனைவருக்கும் என் இதயபூர்வமான நன்றிகள்..!”

நடிகர் சித்ரா லட்சுமணன்…

“சாய்பாபா நமக்கு அன்பு, அகிம்சை மற்றும் அமைதியை கற்றுத் தந்திருக்கிறார். அவர் எப்போதும் மக்களில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை. அவர்களுக்குள்ளேயே வாழ்ந்திருக்கிறார்.

இந்த படம் உலகப் புகழ் பெறும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அண்ணாமலை, பாட்ஷா போன்ற படங்களைத் தந்த சுரேஷ் கிருஷ்ணா எப்படி இந்த படத்துக்குள் வந்தார் என்று ஆச்சரியப்பட்டேன். இது ஒரு குரு பக்திப் படம். தன்னுடைய குருவின் மேல் ஆழ்ந்த பக்தி கொண்ட அவர் அதற்கு பொருத்தமானவர்தான் என்று கண்டு கொண்டேன்.

திரையுலகின் சூப்பர் ஸ்டாரையும், ஆன்மீகத்தில் சூப்பர் ஸ்டாரையும் இயக்கும் பாக்கியம் அவருக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது..!”

தயாரிப்பாளர் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி…

“இதன் முழுப் பயணமுமே அற்புதமாக நடந்து முடிந்தது. என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் பாபா தீர்மானிப்பதுதான். நான் சுரேஷ் கிருஷ்ணாவைத் தேடவில்லை. ஆனால் பாபா அவரை வழி நடத்தினார். உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான பாபாவின் பக்தர்களுக்கு இந்த படம் காணிக்கையாகும்.

இந்தப் படத்தை பார்த்து முடித்தபின் பாபாவைப் பற்றி அறியாதவர்களும் அறிந்து கொள்ள ஆசைப்படுவார்கள். 150 நாடுகளில் பாபா வழிபாடு நடந்து வருகிறது. பாபாவின் ஆசிதான் ‘அனந்தா ‘ படத்தை சாத்தியமாக்கியது..!”