June 20, 2024
  • June 20, 2024
Breaking News
November 20, 2023

அம்புநாடு ஒம்பதுகுப்பம் திரைப்பட விமர்சனம்

By 0 228 Views

பெருநகரத்தில் வாழ்பவர்களுக்கு சாதிய பிரச்சனைகளில் பெரும்பாலும் இடர்கள் எதுவும் இல்லை என்ற போதிலும் கிராம மக்களின் வாழ்நிலை இன்னும் சாதிய கட்டுப்பாடுகளுக்குள்தான் இருக்கிறது என்பதையும், அதை எதிர்த்து ஒடுக்கப்பட்டோரின் குரல் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் விளக்கும் படம் இது

இதில் தமிழக டெல்டா மாவட்டங்களில் நிலவி வரும் சாதிய வன்கொடுமை பற்றியும் அவர்களது வாழ்வு நிலை பற்றிய நிகழ்வுகளையும் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜி.ராஜாஜி.

அங்குள்ள ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் நாடு என்ற அமைப்பை நிறுவிக் கொண்டு ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளை காலம் காலமாக மறுத்து வரும் நிலை இருந்து வருகிறது.

அதனால் தங்களது அடுத்த தலைமுறையாவது தலை நிமிர கல்வி ஒன்றுதான் வழி என்று நினைத்து அந்த ஊரில் வசிக்கும் சங்ககிரி மாணிக்கம், தன் மகன் விக்ரமை பெரும்பாடு பட்டு படிக்க வைத்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் கோவிலில் பூசாரி நீட்டும் தட்டில் இருக்கும் விபூதியை, தானே விக்ரம் தொட்டு எடுத்து விட அதனால் தீட்டு ஏற்பட்டு விட்டது என்று கூறி பூசாரியும் மற்ற ஆதிக்க சாதியினரும் சேர்ந்து நாடு அமைப்பின் மூலம் அவர் மீது நடவடிக்கை எடுக்க நினைக்க, தனது ஆதரவாளர்கள் மூலம் சட்டரீதியான அணுகுமுறையை மேற்கொள்ள நினைக்கிறார் விக்ரம்.

நேர்மையான வழியில் போனால் தங்களுக்கு சாதகமான முடிவு வராது என்று குறுக்கு வழியில் ஆதிக்க சாதியினர் செல்ல நினைக்க அதன் முடிவு என்ன ஆனது என்பதுதான் மீதிக் கதை.

சங்ககிரி மாணிக்கம் அவர் மனைவி ஷர்ஷிதா, விக்ரம் என்று அனைவருமே புது முகங்கள்தான். ஒன் மோர் ஷாட் என்ற பயிற்சி பட்டறை என்றோ இல்லாமல் போன காரணத்தால் அவரவர் தங்களால் முடிந்த நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

பண்ணையாராக நடித்திருக்கும் பிரபு மாணிக்கம், மதன், ரமேஷ் மித்ரன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களின் நடிப்பும் அப்படியே…

அவர்களில் சங்ககிரி மாணிக்கத்தின் நடிப்பு கவர்கிறது. மகனைப் படிக்க வைக்க எவ்வளவு அவமானங்களையும் தாங்கிச் செல்வதும், மகனுக்கு அடுத்தடுத்து வரும் துன்பங்களில் அல்லல் படுவதுமாக பாத்திரத்தில் நிறைந்து தெரிகிறார்.

இது போன்ற நல்ல செய்தி சொல்லும் படங்களில் எல்லாம் இருக்கும் பெரும் குறை படத்துக்கான பட்ஜெட் இல்லாமல் போவது தான். அப்படியும் சொல்ல வேண்டிய கருத்தை சொல்லி ஆக வேண்டும் என்கிற உறுதியில் தளராமல் இந்த முயற்சியை எடுத்து திரைக்குக் கொண்டு வந்திருக்கும் பிகே பிலிம்ஸ் பூபதி கார்த்திகேயனைப் பாராட்டலாம்.

கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையையும் அங்கு நிலவும் நிகழ்வுகளையும் முடிந்த வரையில் இயல்பாகச் சொல்லி இருக்கும் இயக்குனர் ராஜாஜிக்கும் பாராட்டுக்கள்.

இந்தப் படத்தின் உணர்ச்சியை அந்தோணி தாசனின் இசையும் பாடல்களும் தூக்கி நிறுத்துகின்றன. ஜேம்ஸ் வசந்தனின் பின்னணி இசையும் நேர்மையாக ஒலித்து இருக்கிறது.

அம்பு நாடு ஒன்பது குப்பம் – காலக் கண்ணாடி காட்டும் சாதிய பிம்பம்..!