ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பார்கள். அதைப்போல நட்சத்திரங்களை வைத்துப் படம் எடுக்க முடியாதவர்கள் நல்ல கதையை நம்பிப் படம் எடுக்கலாம்.
அதற்கு உதாரணமாக அமைந்திருக்கிறது இந்தப் படம். எல்லாப் படங்களிலும் குணச்சித்திர மற்றும் துணைப் பாத்திரங்களில் வரக்கூடிய எம்.எஸ்.பாஸ்கர், கபாலி விஷ்வந்த்தை வைத்து ஒரு முழுத் திரைப்படத்தை ரசிக்கும்படி எடுத்து விட முடியாதா என்று தொடைதட்டிக் களம் இறங்கி இருக்கிறார் இயக்குனர் அருண் கே பிரசாத்.
அதற்கு அவர் நம்பியிருப்பது ஒரு ஆக்ஷன் த்ரில்லரை. முதல் காட்சியிலேயே இரண்டு பேரை நாற்காலியில் கட்டி வைத்து அல்ல… அல்ல… பசையைக் கொண்டு ஒட்டி வைத்து வன்முறையைப் பிரயோகித்து சில உண்மைகளை வரவழைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர்.
அங்கிருந்து பின்னோக்கி திரும்பும் ஃப்ளாஷ்பாக்கில்…
தன் இரண்டு மகள்களுடன் வசித்து வரும் எம் எஸ் பாஸ்கர், முதல் மகளான வெண்பாவுக்கு மணமுடித்து வைக்க நினைக்கிறார். ஆனால் அவருக்கு ஏற்கனவே கபாலி விஸ்வந்துடன் திருமணப் பேச்சு வார்த்தை நடந்து முடிந்திருக்க அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருக்கிறார் வெண்பா.
இளைய மகள் பிரியதர்ஷினி மருத்துவம் படித்துக் கொண்டிருக்க, அதற்கான கோச்சிங் கிளாஸ் சென்ற நிலையில் காணாமல் போகிறார். செல்வாக்கு மிக்க அரசியல்வாதியான நமோ நாராயணனுக்கு சொந்தமான அந்த கோச்சிங் சென்டரில் விசாரித்ததில், சரியான பதில் கிடைக்காது போக ஒரு வழக்கறிஞரைப் பிடித்து காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர்.
அதற்கு விஷ்வந்தும் உதவி புரிகிறார் ஆனாலும் எந்த விதமான துப்பும் கிடைக்காத நிலையில், தொடக்க காட்சியில் எம்.எஸ்.பாஸ்கர் ஒட்டி வைத்திருக்கும் அந்த இருவரும் பாஸ்கரின் தாக்குதலுக்கு பயந்து சில கொடூரமான உண்மைகளைச் சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.
இரண்டு பேரும் இரு வேறு விதமாக நடந்ததைச் சொல்ல, அதுவே கலங்க வைக்கும் மீதிப் படமாக வருகிறது.
எம்.எஸ்.பாஸ்கருக்கு இதில் இரு விதமான கெட்டப்புகள். இரண்டு பெண்களைப் பெற்ற தந்தையாக அதுவும் நோயாளியாக இருக்கும் அவர், வில்லன்களைப் பிடித்து ஒட்டி வைத்து உதைக்கும் நிலையில் அதிரடி ஆக்சன் ஹீரோவாகவும் தோன்றுகிறார்.
அந்தக் காட்சி லாஜிக்கிற்கு மீறியதாக இருந்தாலும் அதை நியாயப்படுத்தி இருக்கும் முயற்சியில் இயக்குனர் வெற்றி பெறுகிறார்.
ஆரம்பத்தில் சில காட்சிகளும் பின் பாதியில் சில காட்சிகளும் மட்டுமே வந்தாலும் விஷ்வந்த் இந்த கதையின் ஹீரோவாவது எப்படி என்பது ஆச்சரியமான விஷயம்.
வில்லன்களாக வரும் ஆகாஷ் பிரேம்குமாரும், கார்த்திக் சந்திரசேகரும் படங்களில் அதிகமாக அறியாதவர்களாக இருந்த போதிலும் இந்தப் படத்தில் நன்கு அறிமுகமான நடிகர்களைப் போல் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் அரசியல்வாதியாகவே நேர்ந்து விடப்பட்ட நமோ நாராயணனுக்கு, இதிலும் அதே நேர்த்திக்கடன் வேடம். அவர் பாட்டுக்கு ஊதித் தள்ளிவிட்டுப் போய் விடுகிறார்.
முன்பாதிக் கதை பத்தோடு பதினொன்று என்ற படம் போல் நகர்ந்தாலும், பின்பாதிக்கதையில் எதிர்பாராமல் ஏற்படும் திருப்பங்கள், அத்தோடு இது ஒன்று அல்ல என்ற அளவில் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. அதிலும் கிளைமாக்சில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பம் காத்திருக்கிறது.
பாடல்கள் இல்லாத படத்தில் இறுதியாக மட்டும் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒரு பாடல் வருகிறது இசையமைப்பாளரும், ஒளிப்பதிவாளரும் இந்த திரில்லர் ஜானருக்கு அடிப்படை நியாயம் சேர்த்து இருக்கிறார்கள்.
வன்முறைக் காட்சிகளில் மட்டும் குழாய் திறந்தது போல் ஒவ்வொரு கேரக்டர் உடம்பில் இருந்தும் ரத்தம் பீறிடுவதைத் தவிர்த்து இருக்கலாம். அத்துடன் வில்லன் அவர் வாட்டுக்கு வரிசையாக எல்லோரையும் கொன்று கொண்டே இருக்கிறார்.
தமிழாக இருந்தாலும் வெகுஜன மக்களுக்குப் புரியாத தலைப்புகள் கொண்ட படங்கள் எடுபடுவதில்லை. இதிலும் அப்படி ஒரு கடினமான தலைப்பு வைத்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
அக்கரன் – பழித்தீர்ப்பதில் உக்கிரன்..!
– வேணுஜி